- ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும், அதிலும் குறிப்பாக சில மாநிலங்களுக்கு சேர்ந்தார் போல நடக்கும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு - ஏராளமான கூச்சல்கள் கிளம்பும். வெற்றிபெற்றவர்கள் உரக்கக் கூவி அதைக் கொண்டாடுவார்கள், தோற்ற கட்சியின் ஆதரவாளர்கள், தோற்றதற்கு இவைதான் காரணங்கள் என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். அப்படியிருக்க இப்போது நான்கு மாநில பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவும் அமைதி வழக்கத்துக்கு மாறானதாகத் தெரிகிறது.
- இந்திய அரசியல் கட்சிகள் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்கும் மனப்பக்குவத்தை அடைந்துவிட்டன என்றால் நாம் இதை வரவேற்கலாம். ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்று காங்கிரஸ் கட்சி மௌனம் காக்குமானால், அது கவலைக்குரியது.
- இந்தத் தேர்தல் தொடர்பாக நான் செய்த தவறிலிருந்து கட்டுரையைத் தொடங்குகிறேன். இதற்கும் முன்னால் எழுதிய கட்டுரையில், சத்தீஸ்கர் மாநிலம் காங்கிரஸுக்குச் சாதகமாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். நான் எழுதியது தவறு. பாரதிய ஜனதா கட்சி அந்த மாநிலத்தில் 54 தொகுதிகளில் வென்று மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது, காங்கிரஸுக்குக் கிடைத்தது 35 இடங்கள்தான்.
- இந்த மாநிலத்தில் வெற்றி உறுதி என்று காங்கிரஸ் கட்சி தொடக்கத்திலிருந்தே கூறிவந்தது, மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்திய ஊடகங்களும் அதை அப்படியே ஒப்புக்கொண்டன. ஏராளமானவர்களுடன் நடத்திய தனிப்பட்ட உரையாடல்கள் அடிப்படையில் நானும் அது உண்மையாக இருக்கும் என்றே ஏற்றுக்கொண்டேன்.
- பாரதிய ஜனதாவைத் தவிர மற்றவர்கள் அனைவருமே, இறுதி முடிவைப் பார்த்து வியப்படைந்திருக்கிறார்கள். பொதுவான வாக்காளர்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் இடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு குறைந்து அது வாக்குகளிலும் எதிரொலித்திருக்கிறது. 2018 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வென்ற 18 பழங்குடித் தொகுதிகளை இம்முறை பாஜகவிடம் இழந்திருக்கிறது காங்கிரஸ். அதுதான் அந்த மாநிலத் தேர்தல் முடிவை திட்டவட்டமாகத் தீர்மானித்திருக்கிறது.
எதிர்பாராதவை அல்ல
- ராஜஸ்தான், மத்திய பிரதேசம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கூறியதை நான் நம்பவில்லை என்பதை என்னுடைய கட்டுரையைப் படித்த நீங்கள் நினைவுகூர முடியும். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறப்பாக ஆட்சிசெய்தது, ஆனால் ஆட்சியிலிருக்கும் கட்சி மீது வாக்காளர்களில் கணிசமானவர்களுக்கு ஏற்படும் அதிருப்தி, அதன் கழுத்தில் கட்டிய பாறாங்கல் போல சுமையாகி இறுக்கிவிட்டது.
- இதன் விளைவாக மாநில அமைச்சர்கள் 17 பேர் உள்பட சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் 63 பேர் இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டனர். அமைச்சர்கள் மீதும் பேரவை உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு அவ்வளவு அதிருப்தி இருந்திருக்கிறது. கட்சிக்குள் நடத்தப்பட்ட கருத்தறியும் ஆய்வுகளும் மக்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களும், அதிருப்தி எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
- அது மட்டுமல்லாமல் 1998 முதலே ராஜஸ்தான் வாக்காளர்கள், பதவியில் இருக்கும் கட்சியைத் தோற்கடித்துவிட்டு எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதை ஒரு வழக்கமாகவே ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள், பாரதிய ஜனதா அல்லது காங்கிரஸை மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்துகிறார்கள்.
பயனாளிகளின் ஆதரவு
- மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், குறிப்பிடத்தக்க நிர்வாகத் தோல்விகள், ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றுக்கு இடையிலும் சில சமூக நலத் திட்டங்களை – குறிப்பாக மகளிருக்கு நேரடியாகப் பணப் பயன் அளிப்பது போன்ற – அமல்படுத்தியது வெற்றிபெறக் காரணமாக அமைந்திருக்கிறது.
- தேர்தலை கூர்ந்து கவனித்த அரசியல் பார்வையாளர்கள் அனைவருமே, ‘லட்லி பெஹனா யோஜனா’ திட்டம் மற்றும் அதுபோன்ற மேலும் சில நல்வாழ்வுத் திட்டங்கள் காரணமாக பாஜக ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். அது மட்டுமின்றி அந்த மாநிலம் முழுவதுமே ‘இந்துத்துவா’ கொள்கைகளை அமல்படுத்திப் பார்க்கும் அரசியல் சோதனைக் கூடமாகத் திகழ்கிறது; ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் சகோதர அமைப்புகளும் அந்த மாநிலத்தில் ஆழ வேரூன்றியிருப்பதுடன் தொடர்ந்து செயல்படுகின்றன.
- அங்கு பாஜகவின் செல்வாக்கை அகற்ற வேண்டுமென்றால் மிகப் பெரிய அளவில் ஸ்தாபனரீதியாகத் தொடர்ந்து மக்களிடையே பணி செய்ய வேண்டும்; காங்கிரஸ் கட்சி அப்படிப்பட்ட செயலில் இறங்கவில்லை என்பது வெளிப்படை. அது மட்டுமல்லாமல் வேட்பாளர்கள் பட்டியலில் ஒன்றிய அரசின் அமைச்சர்களில் சிலரையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து மிகத் தீவிரமாக தேர்தலை அணுகியது பாஜக.
- தேர்தலுக்காக அது செலவிட்ட கணிசமான நேரமும், உழைப்பும், பணம் உள்ளிட்ட வளங்களும் அவற்றுக்கேற்ப வெற்றியைப் பெற்றுத்தந்திருக்கிறது. பாஜக 163 இடங்களையும் காங்கிரஸ் 66 இடங்களையும் வென்றுள்ளன.
தெலங்கானாவில் கிராம அலை
- தெலங்கானா மாநிலத்தில் கிராமப்புறங்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக, ‘பாரத் ராஷ்டிர சமிதி’ (பிஆர்எஸ்) அரசுக்கு எதிராக மிகப் பெரிய அலை தோன்றியிருப்பதை உணர்ந்து, வியப்பூட்டும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும் என்று கூறியிருந்தேன். ஆந்திரத்திலிருந்து தெலங்கானா என்ற தனி மாநிலம் தோன்றுவதற்கு கடுமையாக உழைத்தவர் என்று பாராட்டப்பட்ட முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பல சமூக நலத் திட்டங்களையும் மாநிலத்தில் அமல்படுத்தியிருந்தார்.
- விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் விவசாயப் பணி உதவி நிதி (ரயத்து பந்து) திட்டம் மிகவும் பிரபலமானது. இருந்தாலும் மாநில அரசின் நிர்வாக அதிகாரம் நான்கு ஜோடிக் கைகளிடமே (ஒரே குடும்பத்தவர்கள்) குவிந்திருந்தன; ஆட்சிக்கு எதிராகக் கிளம்பிய ஊழல் புகார்கள், ஹைதராபாத்தை மட்டுமே மையமாகக் கொண்ட வளர்ச்சி திட்டங்கள், மக்களிடமிருந்து தானாகவே விலகிக்கொண்ட முதல்வர், பெருமளவிலான வேலையில்லாத் திண்டாட்டம் என்று அனைத்தும் அரசுக்கு எதிரான பெரிய அதிருப்தி அலையாக உருவானது.
- ஹைதராபாதில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு 2023 செப்டம்பர் 16இல் துக்குகுடா என்ற இடத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டமே, ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையைக் காட்டிவிட்டது. மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் ரேவந்த் ரெட்டி, தீவிரமான - எவரையும் விட்டுவைக்காத கடுமையான பிரச்சாரம் மூலம் அந்த அதிருப்தி அலையைப் பயன்படுத்தியே காங்கிரஸை ஆட்சியில் அமர்த்திவிட்டார்.
இடைவெளி சிறியது
- இந்தி பேசும் மூன்று மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருந்தாலும், அதற்குண்டான வாக்கு வங்கியில் சேதாரம் இல்லை என்று தெரிகிறது. பதிவான வாக்குகளே இதைத் தெரிவிக்கின்றன:
- இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒரு நல்ல செய்தியும் அடங்கியிருக்கிறது. இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் மட்டுமே மோதும் களம் தொடர்கிறது. நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் சராசரி 40% (2018இல் கிடைத்த அதே அளவு) என்பது தேர்தல் ஜனநாயகத்துக்கு நல்ல சகுனமாகும். பாஜகவுக்கும் நான்கு மாநிலங்களிலும் வாக்குகள் சதவீதம் சற்றே கூடியிருக்கிறது, தலைநகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் அது நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது.
- இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால் மத்திய பிரதேசத்தைத் தவிர்த்த பிற மாநிலங்களில் வென்ற கட்சிக்கும் அதற்கடுத்த இடத்தைப் பிடித்த கட்சிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. சத்தீஸ்கரில் 4.04% ஏற்பட்டதற்குக் காரணம் பழங்குடிகளின் வாக்கு பாஜகவுக்கு சென்றதுதான். பழங்குடிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகளில் 17இல் பாஜகவும் 11இல் காங்கிரஸும் வென்றன. ராஜஸ்தானில் இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2.16% மட்டுமே.
தேர்தல் முறையே மாறிவிட்டது
- இரு பெரிய கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் இட்டு நிரப்ப முடியாததல்ல ஆனால், தேர்தல் களமும் முறையும் மாறிவிட்டதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். முன்பைப் போல பேச்சுக்கு எதிர்ப் பேச்சு, பொதுக்கூட்டத்துக்குப் போட்டியாக பொதுக்கூட்டம், கொள்கைக்கு எதிராகக் கொள்கை, தேர்தல் அறிக்கைக்கு எதிராக தேர்தல் அறிக்கை என்பதோடு நின்றுவிடுவதில்லை. இவையெல்லாம் தேர்தலுக்கு அவசியம், ஆனால் இவை மட்டுமே போதுமானவை அல்ல. கடைசி கட்ட பிரச்சாரம் வரையில் தீவிரமாக அணுகப்பட வேண்டியதாகிவிட்டது தேர்தல்.
- வாக்குச்சாவடி நிர்வாகம் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்களிக்க ஆர்வம் இல்லாத, சோம்பல்படும் வாக்காளரை எப்படியாவது அழைத்துவந்து வாக்களிக்க வைப்பதில்தான் கட்சிகளுக்கு வெற்றியே இருக்கிறது. இதற்கு ஏராளமான முதலீடு தேவை, அது நேரமாகவும் தொண்டர்களுடைய உழைப்பாகவும், மனித வளமாகவும், நிதியாதாரமாகவும் இருப்பது அவசியம். தொகுதிவாரியாக இவை அனைத்திலும் கவனம் செலுத்தி பாஜக வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது.
- மக்களவைக்கு 2024இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைப் பொருத்தவரை பாஜகவுக்கு இப்போது காற்று சாதகமாகவே தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இந்துத்துவக் கருத்துகளைத் தீவிரப்படுத்தி மக்களை மத அடிப்படையில் அணித் திரளவைக்க அது முயற்சிகளை மேற்கொள்ளும், குறைந்தபட்சம் இந்தி பேசும் மாநிலங்களிலாவது இதைக் கையாளும்.
- இதன் விளைவாக கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, நிறுவனங்களின் சுதந்திரம், தனிநபர்கள் – ஊடகங்களின் கருத்துரிமை, செயல்பாட்டுரிமை, அந்தரங்க உரிமை, அச்சத்திலிருந்து விடுபடும் உரிமை ஆகிய அனைத்துமே பலிகடாவாகிவிடும். அடுத்த தேர்தலில் மக்கள் தங்களை ஆள்வதற்கான கட்சியைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது, ஜனநாயகத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்கள் எதுவும் நொறுங்கிவிடாதபடிக்குப் பாதுகாப்பதும் முக்கியம்.
நன்றி: அருஞ்சொல் (11 – 12 – 2023)