- வாசிப்பு என்பது அவரவர் தமது தேடுதலுக்கும் ரசனைக்கும் ஏற்ப ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கமாகும். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தேவையான நூல்கள் இடவசதி, பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஆகியவற்றை மனதில்கொண்டு தமிழ்நாடு அரசு நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
- 2022-23 கல்வியாண்டில்பள்ளிகளில் உள்ள நூலகங்களில் மாணவர்கள் வாரம் ஒருமுறை நூல்களை எடுத்து வாசிப்பதற்கு ஏற்பக் கூடுதலாக ரூ.32 கோடிக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன.
- மாணவர்கள் தமது படைப்பாற்றலை வெளிப்படுத்தி எழுதும் கவிதைகள், கட்டுரைகளைப் பிரசுரிக்கும் வகையில், கல்வித் துறையின் சார்பில் ‘தேன் சிட்டு’ (மாதம் இருமுறை) சிறார் இதழையும், ஆசிரியர்கள் குறித்து வெளியாகும் படைப்புகளை வெளியிட ‘கனவு ஆசிரியர்’ இதழையும் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டு, அதற்காகத் தொகை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
- வாசிப்பை ஊக்குவிப்பதற்கு மூன்று படிநிலைகள் உள்ளன. முதலாவதாக, வாசிக்க விரும்புபவர்களுக்குத் தேவையான நூல்களையும் அதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம். இந்நோக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில், நூலகங்களில் மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டின் மூலமாக வாசிக்கும் ஆர்வலர்களுக்குத் தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்ள வசதியாக நூலக மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இரண்டாவது, வாசகர்கள் வாசிக்க விரும்பும் அளவுக்கு நூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது; எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி, பதிப்பகங்கள் மூலம் அதிக நூல்களை விற்பனைக்குக் கிடைக்கச் செய்வது. இதற்காக மாவட்டம்தோறும் தலைநகரில் புத்தகத் திருவிழா, புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது.
- இதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது, வளரும் சமுதாயத்துக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல். இது மிகவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய விஷயமும்கூட. வாசிப்பு இயக்கம் என்கிற ஒரு இயக்கத்தைப் பள்ளிகளில் தொடங்குவதற்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பள்ளிக் குழந்தைகள் மகிழ்வுடன் வாசிக்கும் வகையில், வண்ணப் படங்களும்பெரிய எழுத்துக்களும் உடைய புத்தகங்களை அறிமுக நிலையில் வழங்கினால், அவர்களுக்கு வாசிப்பை மிக எளிதாகக் கைகூட வைக்கலாம். இதற்காக முதல்கட்டமாக சிறார் கதைகள் அடங்கிய 59 நூல்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான மானியக் கோரிக்கையில் எந்த மாநிலத்திலும் - ஏன் தமிழ்நாட்டிலும் இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து வாசிப்பை ஓர் இயக்கமாக நடத்தித் தமிழ்நாட்டை அறிவு சார்ந்த ஒரு சமுதாயமாக மீண்டும் நிரூபிப்போம்.
நன்றி: தி இந்து (20 – 04 – 2023)