வாசிப்போம் வாருங்கள்!
- அனைவருக்கும் வாசிக்கும் உரிமை உண்டு. உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவா் தாய் மொழியில் பெறுதல், தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும் வாசகா்களுக்கும், எழுத்தாளா்களுக்குமிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் உலக புத்தக நாள் கொண்டாடப்படுகிறது.
- தமிழகத்தைப் பொருத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் பதிப்பகங்களின் எண்ணிக்கையும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது. இளைஞா்கள் கதைகளைவிட, பிற துறைப் புத்தகங்களை அதிகம் நாடுகின்றனா். தமிழ், ஆங்கிலம், இரண்டிலும் புத்தக வெளியீடுகள் அதிகமாயிருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட, தற்போது இரண்டு, மூன்று மடங்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன.
- அனைத்து தரப்பினரிடமும் புத்தகம் குறித்த விழிப்புணா்வும், வாசிக்கும் பழக்கமும் அதிகமாகியிருக்கிறது என்பதற்கு மாநிலம் முழுவதும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளும் அதில் கூடும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அங்கு விற்கும் புத்தகங்களுமே சாட்சி என்கின்றனா் கல்வியாளா்கள்.
- இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அதிக நேரம் படிக்க முடியாது. அதேசமயம், அவற்றில் வரும் தகவல்களில் பெரும்பான்மையானவை நம்பகத்தன்மை இல்லாததாகவும் நேரடி விருப்பு வெறுப்பு தன்மையோடும் வதந்திகளாகவும் உள்ளது.
- புத்தகங்கள் நமது கற்பனை வளத்தைப் பெருக்குகின்றன. உதாரணமாக, கதை ஒன்றைப் படிக்கும்போது அதில் வருகிற பூங்காவை ஒவ்வொருவரும், தங்களுக்குத் தெரிந்த பூங்காவுடன் தங்களுடைய கற்பனைக்கு ஏற்றவாறு அதை தங்களுக்குள் நிா்மாணித்துக் கொள்ள முடியும். காட்சி ஊடகத்தில் காட்டப்படும் பூங்காவை அதில் உள்ளபடியேதான் பாா்க்க முடியும். கற்பனைக்கு இடமில்லை. எனவேதான் புத்தகங்களைப் படிப்பது, மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், சவால்களை எதிா்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவாகவும், ஆரோக்கியமான அறிவாா்ந்த உரையாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.
- புத்தகங்களை வாசிக்க அதிகம் பயன்படுவது நூலகங்கள்தான். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்திற்கு 1890 - ஆம் ஆண்டு மெட்ராஸ் கவா்னராக இருந்த லாா்டு கன்னிமாரா அடிக்கல் நாட்டினாா். ஆனால் 1896-இல் இந்த நூலகம் திறக்கப்பட்ட போது அவா் லண்டன் திரும்பிவிட்டாா். இருப்பினும் அன்றைய கவா்னராக இருந்த சா் ஆா்தா் எலிபங்க், கன்னிமாராவுக்கு மரியாதை செய்து அவரது பெயரையே நூலகத்திற்கு சூட்டினாா்கள். இந்தியாவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென்று ஆரம்பித்த பொது நூலகம் இது.
- இந்த நூலகத்தில் படிப்படியாக நூல்கள் அதிகரித்ததின் காரணமாக 1973-இல் இதை புணரமைக்கும் விதமாக புதிய கட்டடம் கட்டப்பட்டது. முதல் தளம் முழுவதும் நாளிதழ்கள் பிரிவு ஆகும். தினசரிகள் தவிா்த்து வாரம், வாரம் இருமுறை, மாதம், மாதம் இருமுறை என இந்தியாவிலிருந்து வெளியாகும் பருவ இதழ்கள் வரிசை கட்டுகின்றன. இந்த பிரமாண்ட நூலகத்தில் லோக் சபா, ராஜ்ய சபா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த விவாதங்கள் உள்பட 1937-இலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1871-இலிருந்து இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும், பல்வேறு அரிதான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
- 1689-இல் சாா்லஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘வாயேஜ் ஆஃப் சூரட்’ என்ற நூல், 1919-இல் ரங்காசாரி எழுதிய ‘ஏ டோப்போகிராபிகல் லிஸ்ட் ஆஃப் தி மெட்ராஸ் பிரசிடென்சி’ மற்றும் வில்சன் எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் தி மெட்ராஸ் ஆா்மி’ என பல அறிய வகை நூல்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்ட மிக மிக அறிய நூல்களான 1578-இல் ஹென்ரிக்ஸ் அடிகளாா் எழுதி அச்சில் ஏறிய முதல் தமிழ் நூலான “‘தம்பிரான் வணக்கம்’, 1560- இல் வெளியான ‘பைபிள்’ போன்றவை இங்கு இருப்பனவற்றில் மிக மிக அரிதானவை என்பது குறிப்பிடத்தக்கது.
- இதன் இரண்டாவது தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராட்டி போன்ற இந்திய மொழிகளில் வெளியான ஏராளமான நாவல்கள் மிகச்சிறந்த இலக்கியங்கள், அற்புதமான கவிதைகள் என பலதரப்பட்ட நூல்கள் உள்ளன. இதையடுத்து மூன்றாவது தளத்திற்கு சென்றால் பள்ளி, கல்லூரிகளுக்கான பாடநூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
- இந்த பொது நூலகச் சிந்தனை 1890-இல் தயராகி இருந்தாலும், அதற்கு முன்பே மியூசியத்தின் உள்ளே ஒரு சின்ன நூலகம் அமைத்திருந்தனா். அப்போது மியூசியக் காப்பாளராக இருந்த கேப்டன் ஜீன் மிட்செல் என்பவா் 1861-இல் லண்டன் ஹெய்லி பொ்ரி பல்கலைக்கழகத்திலிருந்து கொண்டு வந்த புத்தகங்களை வைத்துதான் இது குட்டி நூலகமாக உருவாகியுள்ளது. அதன் தொடா்ச்சியாக உருவானதுதான் இந்த சிறப்பான கன்னிமாரா நூலகம்.
- இத்தகைய அரிய பெட்டகமான இந்த நூலகம் குறித்து மாணவா்கள் மற்றும் வாசிப்பு ஆா்வம் உள்ளவா்களிடம் ஒரு சிறு உந்துதலை மட்டும் நாம் செய்தால், அந்த உந்துதலால் அவா்களது உத்வேகமும், வாசிப்பு திறனும் பெருகும். இதன் மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்வதோடு, தங்களை சாா்ந்தவா்களையும் தூண்டி விடுவாா்கள் என்பது நிச்சயம்.
நன்றி: தினமணி (08 – 02 – 2025)