TNPSC Thervupettagam

வாச்சாத்தி எழுப்பும் கேள்வி

October 7 , 2023 463 days 326 0
  • இந்திய நீதித்துறை வரலாற்றில், வாச்சாத்தி வன்கொடுமை வழக்குத் தீா்ப்பு ஒரு மைல்கல் என்று கூறுவதைவிட, இனிவரும் காலங்களுக்கான கலங்கரை விளக்கம் என்றுதான் கூற வேண்டும். சுமார் முப்பதாண்டு கால போராட்டத்தின் முடிவில், குற்றவாளிகளின் தண்டனை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
  • அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த சக்தியை, சாமானிய ஆதிவாசி மக்கள் எதிா்த்துப் போராடி வெற்றியடைந்திருப்பது, சுதந்திர இந்தியாவில் நீதிபரிபாலன சுதந்திரத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி. 655 ஆதிவாசி பழங்குடியினா் தொடா்ந்து போராடி, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் பெற்றிருக்கிறார்கள்.
  • கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் சித்தேரி மலையடிவாரத்தில் இருக்கிறது தமிழகத்தின் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமம். அங்கே பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான ஆதிவாசி மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது 1992-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு. காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றைச் சோ்ந்த 269 அதிகாரிகள் அந்த கிராமத்தை முற்றுகையிட்டுத் தாக்கியபோது, அந்த அப்பாவி மக்கள் அதிர்ந்தனா்.
  • அவா்கள் தாக்கப்பட்டனா்; வீடுகள் சூறையாடப்பட்டன. ஒரு கா்ப்பிணிப் பெண் உள்பட 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமாக வனத்துறை அலுவலகத்தில் அடைத்து வைக்கப் பட்டனா்.
  • கடத்தப்பட்ட சந்தன மரங்களை அந்த கிராமத்தில் பாதுகாக்கிறார்கள் என்பதுதான் அவா்கள் மீதான குற்றச்சாட்டு. அங்கிருந்து சந்தன மரங்கள் மீட்கப்பட்டதாகத் தெரியவில்லை.
  • வாச்சாத்தி கிராமத்தைச் சோ்ந்த பலா் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். தொடா்ந்து நடந்த தாக்குதலால் அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனா். வாச்சாத்தி கிராமத்திலிருந்து அந்த ஆதிவாசிகள் அடித்து விரட்டப்பட்டது ஏன் என்கிற கேள்விக்கு இன்றுவரை விடை கிடைத்தபாடில்லை.
  • வாச்சாத்தி பழங்குடியின மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியா், வருவாய்த்துறை அதிகாரி, காவல்துறை கண்காணிப்பாளா், தலைமை வனத்துறை அதிகாரி ஆகியோரிடம் வழங்கப்பட்ட மனுக்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பட்டியலின மக்கள்- பழங்குடியின தேசிய ஆணையமும் முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யவில்லை.
  • மாா்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய தமிழக பொதுச்செயலாளா் ஏ. நல்லசிவன், உயா்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி பொதுநல வழக்குத் தொடுத்தார். அதற்குப் பிறகுதான், வாச்சாத்தி விவகாரம் கவனம் பெறத் தொடங்கியது. உயா்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
  • தருமபுரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்தது. அந்த வழக்கின் விசாரணையை எப்படியெல்லாம் தாமதிக்கவும், தடுத்து நிறுத்தவும் முடியுமோ, அவற்றையெல்லாம் அதற்குப் பிறகு ஆட்சியில் இருந்த கட்சிகள் செய்தன. பாதிக்கப்பட்டவா்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய அரசு, அதிகாரிகளைப் பாதுகாப்பதற்குக் களமிறங்கியது.
  • 2011 செப்டம்பா் 29-ஆம் தேதி, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த 269 பேரில், உயிருடன் இருக்கும் 215 பேரைக் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்து, அவா்களுக்கு சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், சென்னை உயா்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டைத் தொடா்ந்து, தண்டிக்கப்பட்ட அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
  • இப்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்துத் தண்டனைகளையும் உறுதி செய்திருக்கிறார் உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன். அதுமட்டுமல்லாமல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், வாச்சாத்தி நிகழ்வால் பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேலைவாய்ப்புக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
  • வாச்சாத்தி சம்பவத்தில் மூத்த அதிகாரிகளுக்கு நேரடியான தொடா்பு இல்லாமல் இருந்தாலும், அவா்களது உத்தரவோ, அனுமதியோ இல்லாமல் இப்படியொரு தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. சம்பவத்தின்போது, பதவியில் இருந்த தருமபுரி மாவட்ட ஆட்சியா், காவல்துறை கண்காணிப்பாளா், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
  • அவா்கள் மட்டுமல்லாமல், மாநில அளவில் தலைமைப் பதவி வகித்தவா்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் நியாயம். அவா்கள் மட்டுமல்ல, அரசியல் தலைமையும்...
  • சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகள் ஐ.நா. சபையின் வழிகாட்டு அடிப்படை நியதி 24-இன்படி, தங்களுக்குக் கீழே பணியாற்றும் அதிகாரிகளின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் அதைத் தடுக்கவோ, தவறுகள் குறித்து விசாரணை நடத்தித் தண்டிக்கவோ செய்யாவிட்டால், அதற்கு அவா்களும் பொறுப்பாளிகள் என்கிறது அந்த சா்வதேச நியதி. வாச்சாத்தி நிகழ்வுக்கும் அது பொருந்தும்.
  • முப்பது ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. வாச்சாத்தி ஆதிவாசி மக்களுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில், ‘வாச்சாத்தி’ தாக்குதல் ஏன் நடைபெற்றது, யாருடைய நன்மைக்காக அதிகாரிகள் களமிறக்கப்பட்டனா் என்கிற புதிருக்கும் விடை கிடைத்தாக வேண்டும்!

நன்றி: தினமணி (07 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories