TNPSC Thervupettagam

வாடிக்கையாளர் சேவையை வளப்படுத்துமா செயற்கை நுண்ணறிவு?

February 27 , 2025 2 days 19 0

வாடிக்கையாளர் சேவையை வளப்படுத்துமா செயற்கை நுண்ணறிவு?

  • ‘வேறு எந்தத் துறையில் வேண்டுமானாலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்துவிடலாம், பரவலாகலாம். ஆனால் வாடிக்கையாளர் சேவை என்கிற பிரிவுக்குள் அதனால் நுழைந்துவிட முடியாது’ - இப்படி ஒரு கண்ணோட்டம் சிறிது காலத்துக்கு முன்பு வரைகூட இருந்தது.

பழைய பார்வை:

  • இந்தக் கோணத்​துக்குப் பல நியாயமான காரணங்கள் உண்டு. ஒரு வாடிக்கை​யாளர் தனக்கு ஏற்பட்ட அதிருப்​தியைப் பலவித கோணங்​களில் வெளிப்​படுத்​தும்​போது, அதை நிறுவனத்தின் ஊழியர்கள் (அதாவது மனிதர்கள்) சரியாகப் புரிந்து​கொள்ள முடியும். அதற்கேற்​றாற்போல் பதிலளிக்க முடியும்.
  • எடுத்​துக்​காட்டாக, ஒரு நிறுவனத்தில் கடன் வேண்டி விண்ணப்​பித்​தவர், தன் மகளின் நிச்சய​தார்த்தம் அடுத்த வாரம் இருப்​ப​தாக​வும், எனவே தான் விண்ணப்​பித்த கடன் தொகையை உடனே அளிக்​கு​மாறும் கேட்டுக்​கொண்​டால், அதைக் கடன் நிறுவனத்தில் உள்ள ஊழியர்​களால் புரிந்து​கொண்டு செயல்​படுத்த முடியும்.
  • செயற்கை நுண்ணறிவு என்றால் (அதாவது, கணினியில் செலுத்​தப்பட்ட தகவல்கள் என்றால்) விண்ணப்​பித்து இரு வாரங்​களுக்குப் பிறகுதான் எந்தக் கடனும் வழங்கப்​படும் என்ற இயந்திரத்​தனமான பதிலை அளிக்​கக்​கூடும். இதனால் நிறுவனத்​துக்கும் கெட்ட பெயர் ஏற்பட சாத்தியம் உண்டு. உணர்வு​பூர்வமாக ஒன்றைப் புரிந்து​கொள்​வதில் மனிதர்​களுக்குச் சமமாக செயற்கை நுண்ணறிவு இருந்துவிட முடியாது.
  • வழக்கமான சூழல்​களில் இருந்து மாறுபட்ட ஒன்றை எதிர்​கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி மாற்றி அமைத்​துக்​கொள்வது என்பது - மனிதர்​களுக்கு எளிதாக இருக்கும் அளவுக்குச் செயற்கை நுண்ணறி​வுக்கு இருக்​காது. குறிப்பாக, தான் எதிர்​கொள்வது செயற்கை நுண்ணறிவு என்பதை வாடிக்கை​யாளர் தெரிந்து​கொள்​ளாமல் நிறுவனப் பிரதிநிதி முட்டாள்​தன​மாகவும் தன் சூழலைப் புரிந்து​கொள்​ளாதவ​ராகவும் இருக்​கிறார் என எண்ணக்​கூடும்.
  • வாடிக்கை​யாளர்கள் பல்வேறு கலாச்​சாரப் பின்னணியைச் சேர்ந்​தவர்களாக இருப்​பார்கள். அவர்கள் பேசும் விதம், அவர்களின் எதிர்​பார்ப்புகள் போன்றவை மாறுபடும். நிறுவனத்தின் சார்பாக ஊழியர்கள் இவர்களிடம் தகவல்​தொடர்பு வைத்துக்​கொள்​ளும்​போது, வாடிக்கை​யாளர்​களுக்குத் தகுந்த முறையில் தாங்கள் பேசும் விதத்தை மாற்றி அமைத்​துக்​கொள்​வார்கள். ஆனால், செயற்கை நுண்ணறிவை இப்படி​யெல்லாம் வடிவமைக்க முடியாது.

மாறும் சூழல்:

  • மேலே குறிப்​பிட்டவை காலம்​காலமாக நாம் நம்பிக்​கொண்​டிருப்பவை. ஆனால், செயற்கை நுண்ணறிவு இதையெல்லாம் மாற்றிக்​கொண்டு வருகிறது. வாடிக்கை​யாளர் சேவை என்கிற பிரிவிலும் அது தன்னை நிலைநிறுத்​திக்​கொள்ளத் தொடங்கி​விட்டது. இயற்கை மொழிச் செயலாக்கம், பேச்சு அங்கீ​காரம், இயந்திரக் கற்றல் போன்ற நவீனத் தொழில்​நுட்​பங்​களால் வாடிக்கை​யாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவு இயக்கப்​படு​கிறது.
  • தொலைபேசியின் எதிர்​முனையில் அதிருப்தி அடைந்த வாடிக்கை​யாளர் கத்திக்​கொண்​டிருந்​தால், அவரைச் செயற்கை நுண்ணறி​வினால் சமாதானப்​படுத்த முடியாது என்பார்கள். ஆனால் ஒலிப்​ப​திவு, ஒலிபெருக்கி தயாரிக்கும் ஒரு நிறுவனத் தயாரிப்பு​களில் சில குறைபாடுகள் ஏற்பட, பங்குச் சந்தையில் அதன் மதிப்பு குறையத் தொடங்​கியது. அதைவிட முக்கியமாக அவர்களது தயாரிப்பில் அதிருப்தி கொண்ட வாடிக்கை​யாளர்கள் தொலைபேசியில் தங்கள் அதிருப்தியை வெளிப்​படுத்தத் தொடங்​கினர்.
  • அவர்களில் பலருக்கும் தெரியாது தாங்கள் உரத்த குரலில் குறைகூறிக் கொண்டிருப்​பதைக் கேட்டுக்​கொண்டு உரையாடுவது மனிதர்கள் அல்ல, செயற்கைத் தொழில்​நுட்பம் என்பது (வாடிக்கை​யாளர்கள் சேவையைப் பார்த்​துக்​கொள்ள ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை அணுகி​யிருந்தது மேற்படி நிறுவனம்). இந்தத் தொழில் தொடர்பான தொழில்​நுட்ப விவரங்களை நன்கு உள்வாங்​கிக்​கொண்ட அந்தச் செயற்கை நுண்ணறிவு அமைப்பு தானாகவே ஒரு குறிப்​பிட்ட சிக்கலைத் தீர்ப்​ப​தற்கான தீர்வை முன்வைத்தது என்பதுதான் மலைக்க வைக்கும் விஷயம்.

சிறப்​பியல்​புகள்:

  • ஊழியர்​களுக்கு வேலை நேரம் என்று ஒன்று உண்டு. ஆனால், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்​தும்போது 24 மணி நேரமும், அத்தனை நாள்களிலும் அதைப் பயன்படுத்​திக்​கொள்ள முடியும். பல்வேறு நாடுகளில் நேரம் மாறுபடும் என்பதை​யும், அந்த நாடுகளில் எல்லாம் சில நிறுவனத் தயாரிப்பு​களுக்கு வாடிக்கை​யாளர்கள் இருப்​பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். அதாவது, வாடிக்கை​யாளர் சேவை முகவர்​களுடன் தொடர்​பு​கொள்ள வாடிக்கை​யாளர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய​தில்லை.
  • மின்னஞ்சல், சமூக ஊடகங்கள், தொலைபேசி போன்ற பலவற்றின் மூலம் கிடைக்​கப்​பெறும் வாடிக்கை​யாளர் தகவல்​களைச் செயற்கை நுண்ணறிவால் இணைக்க முடியும். ஒவ்வொரு மனிதப் பிரதி​நி​தியும் வித்தி​யாசமான தன்மை கொண்ட​வர்களாக இருப்​பார்கள். வேறுபட்ட திறமை கொண்ட​வர்களாக இருப்​பார்கள்.
  • ஒவ்வொரு​வருக்கு ஒவ்வொரு திறமை இருக்​கும். அதில் அவர்கள் சிறப்​பாகப் பணிபுரிந்​தா​லும், அவர்கள் சிரமப்​படும் பிரிவு​களும் இருக்​கும். செயற்கை நுண்ணறிவு, எல்லாத் தகவல்​களையும் தனக்குள் வாங்கிக்​கொள்​வ​தால், அவற்றைப் பகுப்​பாய்வு செய்து அவர்களுக்குப் பேருதவியாக இருக்​கும். இதனால் ஊழியர்​களின் பணிச்சுமை குறைகிறது.
  • பல வாடிக்கை​யாளர்கள் ஒரே கேள்வியை மாறிமாறிக் கேட்டாலும் செயற்கை நுண்ணறிவு எந்தச் சலிப்பும் இல்லாமல் குறிப்​பிட்ட பதிலைக் கூறும். பலவித மொழிகளில் இயங்கும் தன்மை செயற்கை நுண்ணறி​வுக்கு உண்டு என்பதால், உலக அளவில் பல நாடுகளில் உள்ள வாடிக்கை​யாளர்​களுடன் அதனால் தொடர்​பு​கொள்வது எளிதாகிறது. தயாரிப்புகள், சலுகைகள், விநியோகம் பற்றிய அறிவிப்பு​களையும் நினைவூட்​டல்​களையும் அவர்கள் முன்கூட்டியே பெறுகின்​றனர்.
  • வாடிக்கை​யாளர் சேவை என்கிற கோணத்தில் செயற்கை நுண்ணறிவு முழுவதுமாக மனிதர்​களின் இடத்தைப் பிடித்து​வி​டாது. ஆனால், வாடிக்கை​யாளர் சேவை என்பதன் பரிணா​மத்தை அதனால் மாற்றியமைக்க முடியும். அடுத்த மூன்று ஆண்டு​களில் வாடிக்கை​யாளர் சேவையில் 80 சதவீதத்தைச் செயற்கை நுண்ணறிவு தன்​வச​மாக்​கி​விடும் என்​கிறார்கள். ச​வால்​தான். என்ன நடக்​கிறது எனப் ​பார்​ப்​போம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories