TNPSC Thervupettagam

வாய்ப்பும் எச்சரிக்கையும்!

February 13 , 2025 4 hrs 0 min 24 0

வாய்ப்பும் எச்சரிக்கையும்!

  • ஆட்சியாளர்கள் வருவார்கள், போவார்கள். அதனால், அவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகளும் நிர்வாக நடவடிக்கைகளும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது.
  • எந்த ஒரு நாட்டின் நிதி நிர்வாகத்திற்கும் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் வரி விதிப்பு அவசியம். ஆனால், சுங்கவரி விதிப்பின் மூலம் தன்னைச் சார்ந்திருக்கும் நாடுகளை அச்சுறுத்துவது என்பது நாகரிகமான அணுகுமுறை அல்ல. சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்க சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பதுதான் சரியாக இருக்குமே தவிர, அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்து அண்டை நாடுகளின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைப்பது எந்த விதத்திலும் ஏற்புடைய செயல்பாடு அல்ல.
  • தனது திறந்த எல்லையைப் பயன்படுத்தி அண்டை நாடுகளில் இருந்தும், உலகின் பின்தங்கிய நாடுகளில் இருந்தும் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை அமெரிக்கா தடுக்க முற்படுவதில் யாரும் தவறு காண முடியாது. அதை எந்த ஒரு நாடும் அனுமதிக்கவும் செய்யாது. சட்டவிரோதமாகக் குடியேறுவது மட்டுமல்லாமல், போதைப் பொருள்களைக் கடத்துவதிலும் சிலர் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் தடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை.
  • கனடா, மெக்ஸிகோ நாடுகளின் மீது விதிக்கப்பட்ட 25% கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்க அரசு 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் புகையிலைப் பொருள்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆயுதங்கள், ராணுவம் சார்ந்த பொருள்களுக்கு தனது எதிர் வினையாக கனடா கூடுதலாக 25% வரி விதிப்பதாக அறிவித்தது தான் அதற்கு காரணம் என்று கூறிவிட முடியாது. அதிபர் ட்ரம்ப்க்கு உள்நாட்டில் தரப்பட்ட அழுத்தம்கூட மிக முக்கியமான காரணம்.
  • மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் லாபம் அடைவதைப் போலவே, அமெரிக்காவும் இறக்குமதிகளை நம்பி இருக்கிறது என்பதுதான் உள்நாட்டு அழுத்தத்தின் பின்னணி. குறிப்பாக, மோட்டார் வாகன உற்பத்தி கனடா, மெக்ஸிகோ நாடுகளில் உள்ள உதிரிப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களைச் சார்ந்து இருப்பதை அதிபர் டிரம்ப் மறந்து விட்டார் என்று தோன்றுகிறது.
  • அமெரிக்கா விதித்திருக்கும் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்து, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் . உற்பத்திக்கு அத்தியாவசியமான எஃகு, அலுமினியம், எரிசக்தி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு அவற்றின் விலைகள் அதிகரிக்கும். அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக சர்வதேசச் சந்தையில் அமெரிக்கப் பொருள்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படுவதுடன் தனது மிக நெருக்கமான தோழமை நாடுகள் உடனான உறவு பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
  • பிறகு ஏன் அமெரிக்க அதிபர் இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கினார் என்கிற கேள்வி எழுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே அதிக மதிப்புள்ள தொழில்நுட்பம் மேம்பட்ட பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் போன்றவற்றைத்தான் அமெரிக்கா ஏற்றுமதி செய்து வருகிறது. அதே நேரத்தில், அதிக அளவில் நுகர்வோர் சார்ந்த அன்றாட உபயோகப் பொருட்கள் பெரும்பாலானவை அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்படுகின்றன. பெரும்பாலான நாடுகள் குறிப்பாக இந்தியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா போன்றவை தொழில்நுட்ப மேம்பாடு அடைந்ததைத் தொடர்ந்து தாங்களே உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன.
  • இன்றைய நிலையில், நிலுவையில் உள்ள அமெரிக்கக் கடன் 33 டிரில்லியன் அமெரிக்க டாலர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது. அதை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா திணறுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அதிபர் டிரம்ப்பின் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை நாம் பார்க்க வேண்டும்.
  • இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்றால் ஓரளவுக்கு ஏற்படக்கூடும். அதே நேரத்தில் அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை நமக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் வாய்ப்பு உண்டு- நாம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால்...
  • இந்தியாவிலிருந்து மருந்துகள், ரத்தினக் கற்கள், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் உள்ளிட்டவைதான் அதிக அளவிலான அமெரிக்க ஏற்றுமதிகள். இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை வெறும் 3.2% மட்டுமே. சீனா மீதான இறக்குமதி வரியை அதிபர் டிரம்ப் அதிகரித்திருக்கும் நிலையில் ஜவுளி ,மின்னணு சாதனங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதிகளை அதிகரித்துக்கொள்ள நமக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • அதற்காக நாம் ஒரேடியாக மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது. அமெரிக்காவின் நுகர்வுச் சந்தையில் ஏற்படும் விலைவாசி உயர்வு, இறக்குமதிகளைப் பாதிக்கக்கூடும். வர்த்தகப் போர் தொடங்க இருக்கும் சூழலில், நமது ஏற்றுமதிகளைப் பாதுகாக்க நாம் இருநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதும், உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியமாகின்றன.

நன்றி: தினமணி (13 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories