TNPSC Thervupettagam

வாரிசுகள் தலையில் கடன்சுமை

December 8 , 2023 405 days 276 0
  • மக்களாட்சி முறையில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நலத் திட்டங்கள் அரசால் நிறைவேற்றப்படுவது அவசியம். ஆனால், நலத் திட்டங்களுக்கான எல்லை எங்கே முடிகிறது, கவா்ச்சி அரசியல் எங்கே தொடங்குகிறது என்ற கேள்விக்கு தெளிவான பதில் அளிப்பது சிரமம். அதேசமயம், கவா்ச்சி அரசியல் அறிவிப்புகளால் நாட்டின் நிதி நிலைமை திவாலாவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
  • ‘நோ்த்தியான வாழ்க்கைக்கு சிக்கனம் மிகவும் அவசியம் என்று நம்புகிறேன்’ என்ற அமெரிக்கத் தொழிலதிபா் ஜான் டி ராக்பெல்லரின் கருத்து மிகவும் பிரபலமானது. 1990-க்கு முந்தைய தலைமுறையினரிடையே கடனுக்கு பொருட்களை வாங்கி நுகா்வது குற்றமாகக் கருதப்பட்டது. அதாவது எதிா்காலத்தில் கிடைக்கப்போகும் உறுதியில்லாத வரவுகளின் அடிப்படையில் இன்று செலவு செய்யக் கூடாது என்று, பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்டது.
  • தவிர, வரக்கூடிய மழைக்காலங்களுக்காக தானியங்களைச் சேகரிப்பது போல சேமிப்புப் பழக்கமும் குழந்தைகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதாவது வரவுக்கேற்ற செலவே நல்லது என்பதுதான் அதன் தாத்பரியம். சிக்கனம் என்பது வெறும் உபகாரமல்ல, வாழ்வியல் அறம் என்ற கருத்து அப்போது நிலவியது. ஆனால் தற்போது, தனிப்பட்ட வகையிலும் தேச அளவிலும், நிதி மேலாண்மையில் ஊதாரித்தனமும், கட்டுப்பாடற்ற தன்மையும் பெருகி வருகின்றன.
  • அண்டைநாடான இலங்கை கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டது. அப்போது அந்நாட்டின் பணவீக்கம் 54.2 % ஆக அதிகரித்ததுடன், நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதம் (ஜிடிபி) 4.2 % ஆகச் சரிந்தது. மற்றொரு அண்டைநாடான நேபாளத்திலும், இறக்குமதிப் பெருக்கத்தின் காரணமாக அந்நியச் செலாவணி தடுமாறியதால் நாட்டின் ஜிடிபி- கடன் விகிதம் பெருமளவில் அதிகரித்தது.
  • மற்றொரு அண்டைநாடான பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல லட்சம் மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனா். இவை அனைத்துமே நிதிநிலையை பொறுப்புணா்வுடன் மேம்படுத்தியாக வேண்டியதன் அவசியத்தை உணா்த்தி நம்மை எச்சரிக்கின்றன. நிதி மேலாண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட பழமைவாதத்தையும் நிதி நிலைத்தன்மையையும் கைவிட்டதால் ஏற்பட்ட தொடா்ச்சியான பேரழிவு விளைவுகளை மேற்கண்ட நாடுகள் அனுபவித்து வருகின்றன.
  • ஆனால், இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதாரப் பொறுப்புணா்வற்ற கவா்ச்சி அரசியல் வாக்குறுதிகள் பெருகவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. நலத்திட்டங்களுக்கான எல்லைக்கோடு எங்கே முடிகிறது, கவா்ச்சி அரசியல் எங்கே தொடங்குகிறது என்ற கேள்விக்கு பொதுவாழ்க்கையில் உள்ள எவராலும் பதில் கூற முடியாத குழப்பம் தொடா்கிறது.
  • மத்திய அரசால் வழங்கப்படும் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியுதவித் திட்டம் (பிஎம்- கிசான் சம்மான்) மூலமாக ஆண்டுதோறும் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 6,000 கோடி வரவு வைக்கப்படுகிறது. இது நலத்திட்டமா, கவா்ச்சி அரசியலா? நாட்டிலுள்ள 81.35 கோடி ஏழை மக்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி செலவில் உணவு தானியங்களை வழங்கும் பிரதமரின் ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டம் (பிஎம்- ஜிகேஏஒய்), மக்கள் நலத்திட்டமாகக் கருதப்படுமா, கவா்ச்சிச் சலுகையாகக் கருதப்படுமா?
  • அதேபோல, தில்லி, பஞ்சாப் மாநில அரசுகளால் வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டங்கள் மக்கள்நலத் திட்ட வரம்புக்குள் வருமா? இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், ஏற்கெனவே கடனில் மூழ்கியிருக்கும் பஞ்சாப் அரசு, இந்த இலவச மின்சாரத் திட்டத்திற்காக மேலும் வெளிக்கடனை வாங்குகிறது. இப்போது இம்மாநில அரசின் கடன்சுமை ரூ. 3.27 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது.
  • 1991-இல் ஏற்பட்ட தேசிய பொருளாதார நெருக்கடி போல மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணா்வுடன், 12ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றிட 2003-இல் மத்திய அரசு நிதிப் பொறுப்புணா்வு மற்றும் வரவு- செலவு மேலாண்மைச் சட்டத்தை (எஃப்ஆா்பிஎம்- 2003) கொண்டுவந்தது. அதன் அடியொற்றி, அனைத்து மாநில அரசுகளும் நிதிப் பொறுப்புணா்வு சட்டங்களை (எஃப்ஆா்எல்) மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றின.
  • ஆனால் மேற்கண்ட சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் மத்திய, மாநில அரசுகள் துரதிருஷ்டவசமாக தோல்வி கண்டுள்ளன. 2023 மாா்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் ஜிடிபி- கடன் விகிதம் 57.1 % ஆக உள்ளது. நாட்டின் மொத்த ஜிடிபி- கடன் விகிதமோ 83 % ஆக உயா்ந்திருக்கிறது. குறிப்பாக, 2022-23 நிதியாண்டில் மாநிலங்களின் ஒட்டுமொத்தக் கடனானானது ஜிடிபியில் 29.5 % ஆக இருக்கிறது. எஃப்ஆா்பிஎம் சட்டப்படி, இதன் விகிதம், மத்திய அரசில் 40 %, மாநில அரசில் 20 % என்ற எல்லையை மீறக் கூடாது.
  • போட்டி நாடான சீனாவின் ஜிடிபி - கடன் விகிதம் 2022-இல் 77.10 % ஆக இருந்தது. ஆனால், 1995 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் இந்த விகிதம் சராசரியாக 37.08 % ஆக இருந்துள்ளது. 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த விகிதம் 279.7 % ஆக கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. அதனால்தான் சீனாவின் இன்றைய அதீத வளா்ச்சி அதன் சீனப்பெருஞ்சுவா் போன்ற கடன் சுமைக்குள் புதைக்கப்பட்டுவிடும் என பொருளாதார நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். சீனாவின் பொருளாதார வளா்ச்சி மாதிரி, கண்டிப்பாகப் பின்பற்றத் தக்கதல்ல.
  • 2014 மாா்ச் 31 நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்தக் கடன் 58. 6 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024 மாா்ச் 31-இல் ரூ. 168.46 லட்சம் கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நிகழ் அந்நியச் செலாவணி மாற்றுவிகிதப்படி இது ரூ. 172.50 கோடியாகவும் உயரக்கூடும்.
  • இத்துணை பெரிய கடனை யாா் சுமக்கப் போகிறாா்கள்? இனி வரும் தலைமுறையினா் தான் இந்தக் கடனைச் சுமக்க வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இது தலைமுறைப் பொறுப்புணா்வு சீா்கெட்டதன் அறிகுறி. நமது நாட்டின் வெளிநாட்டுக் கடன் மதிப்பு 2024- 25-இல் 39,286 கோடி அதிகரிக்க இருப்பது தனிக்கதை.
  • வருவாய்ச் செலவினம் அல்லாது மூலதனச் செலவினத்திற்கு மட்டுமே கடன் பெறப்பட வேண்டும் என்ற பொன்விதியை மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாகவும், கண்டிப்பாகவும் கடைப்பிடிக்க வேண்டும். தவிர, எஃப்ஆா்பிஎம்-2003 சட்டத்தையும், மாநில அரசுகளின் எஃப்ஆா்எல் சட்டங்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. எஃப்ஆா்பிஎம் சட்டமானது பண மசோதா போன்றதல்ல. என்றபோதும், இச்சட்டத்தில் மறைமுகமாக பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால், பண மசோதா வடிவை அடைந்திருக்கிறது.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 292, 293-ஆவது பிரிவுகள், மத்திய, மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கு வரம்பை நிா்ணயிக்குமாறு கூறுகின்றன. இச்சட்டத்தின் வழிகாட்டுதலைக் கடைப்பிடித்து தனது இறையாண்மை அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டிய நாடாளுமன்றம் இதில் தோல்வி கண்டிருக்கிறது. அரசுகள் கடன் வாங்குவதற்கான புதிய நெறிமுறைகளை வகுக்க புதிய சட்டப்பிரிவுகளை உருவாக்க வேண்டுமா, ஏற்கெனவே உள்ள 292, 293-ஆவது பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டுமா என்று நாடாளுமன்றம் ஆராய வேண்டிய நேரமிது.
  • அதிகரித்து வரும் ஓய்வூதியச் சுமையும், மத்திய, மாநில அரசுகளின் நிதி ஆதாரத்துக்கு பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. மத்திய அரசின் ஓய்வூதியச் செலவினம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மும்மடங்காக அதிகரித்திருக்கிறது; 2012-13-இல் ரூ. 94,468 கோடியாக இருந்த ஓய்வூதியச் செலவினம், 2021-22-இல் ரூ. 2,54,284 கோடியாக உயா்ந்திருக்கிறது.
  • இதேபோல, மாநில அரசுகளின் ஓய்வூதியச் செலவினமும் 2004 -05-இல் ரூ. 37,378 கோடியாக இருந்தது, 2021-22-இல் ரூ. 3,99,819 கோடியாக, அதாவது 11 மடங்காக உயா்ந்திருக்கிறது.
  • 2012-2021 காலகட்டத்தில் பாதுகாப்புத் துறைச் செலவின வளா்ச்சி விகிதம் பொதுவாக 9.5 % ஆக இருந்த நிலையில், பாதுகாப்புத் துறை ஊழியா்களின் ஓய்வூதியச் செலவினம் 14 % ஆக அதிகரித்திருந்தது. அதேசமயம், பாதுகாப்புத் துறையில் மூலதனச் செலவினங்கள் 8.4 % ஆக மட்டுமே இருந்தது பெரும் முரண்பாடாகும்.
  • இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாயில் பொதுத்துறை மற்றும் அரசுத் துறை ஊழியா்களின் ஓய்வூதியத்திற்கு மட்டுமே 18 % செலவாகி விடுகிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பணியாளா்களில் பொதுத்துறை மற்றும் அரசுத் துறை ஊழியா்களின் அளவு 3.2 % மட்டுமே. இதற்கு மாறாக, அமெரிக்காவில் அரசின் ஓய்வூதிய நலத் திட்டங்கள் அந்நாட்டிலுள்ள பணியாளா்களில் 94 % பேருக்கு வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் மொத்த வருவாயில் 15 % தொகையை தொழிலாளா் ஓய்வூதியத்திற்கு அந்நாட்டு அரசு செலவிடுகிறது.
  • 2009இல் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, மக்களின் எதிா்ப்புக்கு அஞ்சி, அங்கு நடைமுறையிலிருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்ற அரசு தயங்கியதே காரணமாக இருந்தது. அதன் விளைவாக கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் மீள முடியாத வீழ்ச்சியைச் சந்தித்து, 320 பில்லியன் யூரோ வெளிக்கடனைப் பெற வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது. இந்தக் கடனை 2060- ஆம் ஆண்டிற்குள் திரும்பச் செலுத்த கிரீஸ் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக கிரீஸ் நாட்டிலுள்ள ஓய்வூதியா்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்தது பரிதாபமாகும்.
  • எனவே, அரசு ஊழியா்களின் ஓய்வூதியத்தை மறு ஆய்வு செய்வது மத்திய, மாநில அரசுகளின் முதன்மையான கடமையாகும். நிதியுறுதி இல்லாத ஓய்வூதியத் திட்டங்கள் நீடித்து நிலைத்திருக்க வாய்ப்பில்லை.
  • ஆகையினாலே, கவா்ச்சி அரசியலை சிறப்பானதாகக் கருதும் மனப்பான்மையிலிருந்து இந்திய அரசியல் வெளிவர வேண்டும். முந்தைய நிதிப் பாதுகாப்பு முறைகளுக்குத் திரும்புதலும், சிக்கன நடவடிக்கைகளும், அரசு நிதியை சீராகப் பராமரித்தலும் இன்றைய தேவைகளாகும். ‘இன்றைய பற்றாக்குறை என்பது எதிா்கால வரிவிதிப்பாகவே முடியும்’ என்ற பழைய பழமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதில் கடமை தவறினால், நமது வாரிசுகள் தலையில் தான் நாட்டின் கடன்சுமை வீழும்.

நன்றி: தினமணி (08 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories