TNPSC Thervupettagam

வாழ்க்கை விளையாட்டுகள்

February 23 , 2025 1 hrs 0 min 7 0

வாழ்க்கை விளையாட்டுகள்

  • எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’, குற்றவுணர்வால், கழிவிரக்கத்தால் மனித மனங்கள் படும்பாட்டை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் நாவல். ‘ஒரு மரணத்தால் இங்கே ஒன்றும் மாறிவிடப்போவதில்லை’ என்கிற தத்துவ விசாரம் அடிக்கடிச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஒரு மரணத்தால், ஒரு இல்லாமையால் பலதும் நிகழத்தான் செய்கின்றன. ‘சிற்றன்னை’யில் ஒரு மரணம், ஒரு குடும்பத்தையே புரட்டிப்போடுகிறது; இரு பிஞ்சுக் குழந்தைகளை மன ஊனமாக்குகிறது. இன்னொரு மரணத்துக்கும் காரணமாகிறது. இவையெல்லாம் தொந்தரவு செய்யும் ரீதியில் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது.
  • சிங்​கார​வடிவேலு ஒரு ஆசிரியர், இயல்பான மனச் சஞ்சலங்​கள், கோபதாபங்கள் உள்ளவர். அவரது ஒரு பெரிய வீடு கதையில் சொல்​லப்​படு​கிறது. அந்த வீட்டுக்​குள் ஒரு குட்​டிப் பெண் குறுக்​கும் நெடுக்​குமாக ஓடிக்​கொண்​டிருக்​கிறாள். அவரது மகள்; பெயர் குஞ்சு. மரகதம் என்கிற இளம் பெண் இருக்​கிறாள். அவள் யார், அவளுக்​கும் சிங்​கார​வடிவேலு​வுக்​கும் என்ன உறவு, இந்தக் கேள்வி​களுக்​கெல்​லாம் கதையோட்​டத்​தில்​தான் பதில் கிடைக்​கிறது. இது புது​மைப்​பித்தன் கையாண்​டிருக்​கும் உத்தி. குஞ்சு, புத்​திசாலித்​தனமான குழந்தை. அதனால் துறு​துறு​வென்று இருக்​கிறது. களைப்புடன் இருக்​கும் அப்பாவுக்கு சித்தி​யுடன் சேர்ந்து பலகாரத்​தைத் தானே எடுத்து​வந்து தருகிறது. ‘ஓடி வருகை​யிலே உள்ளம் குளிருதடி/ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி’ என்கிற பாரதி​யின் வரிகளுக்கு ஏற்ப உச்சி நுகரத் தூண்​டும் மழலை அது. சுந்​தர​வடிவேலு​வும் மகளை கூடிய​முட்டும் எடுத்​துக் கொஞ்​சிக் கொண்​டிருக்​கிறார்.
  • குஞ்சு கதாபாத்திர உருவாக்​கம், இந்த நாவலில் எடுத்​துச் சொல்ல வேண்​டியது. மொத்த நாவலுக்​குமான பாரத்தை அந்தப் பிஞ்​சுக் கைகளில்​தான் புது​மைப்​பித்தன் ஒப்படைத்​திருக்​கிறார். விளை​யாடத் துணை​யற்ற அந்தக் குழந்தை கற்பனையாக ஒரு விளை​யாட்டுத் துணையை உருவாக்​கிக் கொள்​கிறது. அந்தக் கற்பனைக்​கும் சேர்த்து அதுவே நொண்டி விளை​யாடு​கிறது. நொண்டி அடிக்​கக்கூட கெதி இல்லாத வயசு. அதனால் நொண்டிக் கட்டங்களை நடந்து தாண்டி, கடைசி​யில் ஒரு காலைத் தூக்​கிக் கொள்​கிறது. யாருக்கு வேண்​டும் சட்டம்?
  • ஒரு ரயில் எஞ்சின் பொம்​மை​யும் அந்தக் குழந்தை வைத்​திருக்​கிறது. ஒட்டிப் பிறந்த இரட்​டையர்​போல் அதனுடன்​தான் இருப்பும் நடப்பும். வாயால் ‘கூச்... குசு... குச்​...’ எனச் சப்தம் எழுப்பி ரயில் ஓட்டி​யும் விளை​யாடும் அந்தக் குழந்தை. ரயில் எஞ்சினைக் குளிப்​பாட்டி அதற்கு ஒரு உயர்​திணை அந்தஸ்​தை​யும் இந்தக் குழந்தை கொடுக்​கிறது. அவள், காப்பி போடும் ஒரு காட்சி இந்த நாவலில் இருக்​கிறது. வெள்​ளந்​தித்​தன​மும் புத்​திசாலித்​தன​மும் கூடிய ஒரு செயல் அது. வாசகர்களை ரசிக்​கவைக்​கும் இந்தக் காட்சி, நாவலுக்கு உள்ளே மரகதத்​துக்​குக் கோபத்தை வரவழைத்து​விடு​கிறது. அந்தக் குழந்தைக்​குப் பூனை பயம். அதை வைத்து மரகதம் குழந்​தையை பயமுறுத்​தி​விடு​கிறாள். அவள் குழந்​தை​யின் சிற்​றன்னை. அன்னை இடத்​தில் இருக்​கிறாள்.
  • அன்னையோ மாடி அறையில் ஒரு புகைப்​படத்​தில் இருக்​கிறாள். பயந்த குழந்தை புகைப்பட அன்னை​யிடம் முறை​யிடு​கிறது. இந்தச் சம்பவம், நாவலை இரண்டு துண்​டாக்​கிக் காட்டு​கிறது. இந்தக் குழந்தை கதாபாத்​திரச் சித்தரிப்பு​தான் இயக்​குநர் மகேந்​திரனைப் பாதித்​திருக்க வேண்​டும். இந்த நாவலின் பாதிப்​பில் எடுக்​கப்​பட்ட ‘உதிரிப்​பூக்​கள்’ படத்​தில் அதைக் காண முடி​யும். அந்தப் படத்​தில் புகைப்பட அம்மாவுக்கு மகேந்​திரன் உருவம் கொடுத்​திருப்​பார். அஸ்வினி​யும் இரு குழந்தை​களும் புதிரான எதிர்​காலத்​தைப் பார்த்​தபடி இருக்​கும் வேதனை தரும் படக் காட்சி, நாவலை அடுத்த கட்டத்​துக்கு மகேந்​திரன் நகர்த்தி​யதன் வெளிப்​பாடு.
  • சுந்​தர​வடிவேலு​வின் பையன் ராஜா, நாவலின் தொடக்​கத்​திலேயே சொல்​லப்​படு​கிறான். அவன் இறந்​து​விட்​டான். ஆனால், அவன் சுந்​தர​வடிவேலு​வின், மரகதத்​தின், குஞ்​சு​வின் நினை​வுகள் வழி மீண்​டும் மீண்​டும் உயிர்ப்​பிக்​கப்​படு​கிறான். நாவலும் அவனைத் தேடிப் பின்னே செல்​கிறது. அது நாவலின் இரண்​டாம் பாதி. ராஜா தன் அப்பா​வின் திரு​மணத்​தில் பையன்​களுடன் நிற்​கிறான். அவனுடைய தங்கையான குஞ்சு மாப்​பிள்​ளையான தன் அப்பா​வின் மடியில் இருக்​கிறாள். இந்தச் சின்ன பையன் ராஜா, குஞ்​சு​வின் விளை​யாட்டுத் தோழன். அவளது ரயில் விளை​யாட்​டில் இவன்​தான் சமிக்ஞை மரம்.
  • தாயில்​லாப் பிள்​ளை​களுக்கு அன்னையாக மரகதம் வீட்டுக்​குள் வருகிறாள். அவள் தனது சட்ட திட்​டங்​களுடன் இருக்​கிறாள். அவள் கொடுமைக்​காரி அல்ல. அவளது வீட்​டின் வளர்ப்​பில் கொஞ்சம் அப்படியாக இருக்​கிறாள். அதற்கு உதாரண​மாகச் சமையற்​கட்டுக்​குள் வேலைக்​காரர்களை அனும​திக்​காமல் அவளே வேலைகளை எடுத்​துப் போட்டுச் செய்​கிறாள். அவளது கட்டுப்​பாட்​டால் ராஜா மழையோடு போய் மாடு துரத்தி, விழுந்து காய்ச்சல் வந்து அன்னந்​தண்ணி இறங்​காமல் செத்​தும்​போய்​விடு​கிறான். அம்மா மாதிரியா அண்ணன் செத்​துப் போய்​விட்​டானா? எனக் கேட்​கிறது குழந்தை. இந்த மரணம் பெருங்​குற்​றவுணர்​வை​யும் தனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்​கிறது என விதியை நொந்​து​கொள்​ளும் கழிவிரக்​கத்​தை​யும் சித்திக்​கும் அப்பாவுக்​கும் ஏற்படுத்து​கிறது.
  • சுந்​தர​வடிவேலு​வின் பணி பற்றிய விவரிப்புடன் இந்த நாவலை புது​மைப்​பித்தன் தொடங்​கு​கிறார். ஆனால், அது நாவலுக்கு எந்தவிதத்​தி​லும் பலம் சேர்க்க​வில்லை. ராஜா​வின் மரணத்​துக்​குப் பிறகு குஞ்​சுவைக் கையாள்​வ​தில் ஒரு பயம் சுந்​தர​வடிவேலு​வுக்​கும் மரகதத்​துக்​கும் வந்து​விடு​கிறது. அதனால் நாவலுக்​குள் ஒரு தாத்தா வருகிறார்.
  • அந்தக் குழந்தை அவருடன் செல்​கிறது. ஆனால், நான்​-லீனியராக முன்னும் பின்னுமாக நகர்ந்து இறந்த காலக் காட்​சி​யில் முடிகிறது. இந்த இறுதிக் காட்​சி​யின் மனக் குழப்​பங்​களைக் கடந்​து​தான் கதாபாத்​திரங்கள் நிகழ்​காலத்​தில் படைக்​கப்​பட்​டுள்ளன. அதில் ஒரு குழப்​பம். ‘உலகமே பைத்​தி​யாரக் கும்​பல், காரண காரியத் தொடர்​பற்ற குழப்​பம்’ என இறுதி​ வரியில் புது​மைப்​பித்தனே கூறுகிறார்.
  • மனித உணர்​வு​களைச் சொல்​லும் விதத்​தில் இந்த நாவல் வெற்றி​பெறுகிறது. இந்த நாவலில் ஒரு நாடோடி வருகிறார். குடும்ப பந்தங்களை அறுத்த ஒரு சந்நி​யாசி அவர். அவரது குறுக்​கீடு நாவலின் உள்ளடுக்கு எனப் புரிந்​து​கொள்​ளலாம். குழந்​தை​யுடன் விளை​யாடி அவரும் குழந்​தைமை​யால் ஈர்க்​கப்​பட்டு​விடு​கிறார். சட்​டெனத் தன்னிலை உணர்ந்து ​வில​கிச் சென்​று​விடு​கிறார். ஆனால், சுந்​தர​வடிவேலும் நா​மும் ​விலக ​முடி​யாமல் அ​தில் உழன்​று​வரு​கிறோம். இந்த நம் வேதனைக் கதையைத்​தான் புது​மைப்​பித்​தன்​ இ​தில்​ சொல்​லி​யிருக்​கிறார்​.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories