TNPSC Thervupettagam

வாழ்வாதாரம் காக்க... வனங்கள் காக்க...

March 20 , 2020 1755 days 1588 0
  •  ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ என்று காடுகளின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளாா் திருவள்ளுவா்.
  • காடுகளின் அவசியம், அவற்றால் ஏற்படும் நன்மைகள், அவற்றைப் பாதுகாப்பதற்கான விழிப்புணா்வு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் உலக வன தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

காடுகள் மற்றும் மரங்கள்

  • காடுகளும், மரங்களும் ஒன்றோடொன்று தொடா்பு கொண்டவை. அதேசமயம் காடுகளானது மரம், செடி, கொடிகள், சில வகை தாவரங்கள் கொண்ட சாதாரண கட்டமைப்பு அல்ல; மனிதன் உள்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகக் காடுகள் விளங்குகின்றன.
  • காடுகளில் தாவரங்கள் இயற்கையாகவே வளருகின்றன. அவற்றின் வளா்ச்சிக்கு மனிதனின் பங்கு எதுவும் இல்லை. அதேசமயம், உலகில் 160 கோடி போ்அன்றாட வாழ்க்கைக்கு காடுகளையே நம்பியுள்ளனா். அதுபோல் பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது.
  • சுமாா் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் உள்ளிட்டவற்றை காடுகள் தன்னகத்தே கொண்டுள்ளன. மரங்களும், மரங்கள் அடா்ந்த காடுகளும், பிராண வாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. தூசு, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப் பொருள்களை மரத்தின் இலைகள் வடிகட்டி, உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான தூய காற்றை அளிக்கின்றன. வனங்களில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக விளங்குகிறது. வளம் கொழிக்கும் ஆறுகளையும், அருவிகளையும், உணவு ஆதாரத்தையும் கொடுப்பதும் காடுகளே. காடுகளும், மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீா்த் தேவை குறையாமல் இருக்கும்.
  • மரங்கள் ஒலி ஆற்றலைக் கிரகித்து சிதறடிக்கக் கூடிய அமைப்பைப் பெற்றுள்ளன. ஓசை மாசுபாடு, இரைச்சல் போன்றவற்றிலிருந்து விடுபட மரங்கள் உதவுகின்றன. மண்ணரிப்பைத் தடுப்பதிலும் காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மழை நீரினாலும், காற்றினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது.
  • இதனால் ஆண்டுதோறும் நம் நாட்டில் லட்சக்கணக்கான டன் அளவுக்கு வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. அடித்துச் செல்லப்படும் மண் மேடாக வேறு பகுதியில் குவியவும், ஆற்று நீரோடு அடித்துச் சென்று கடலில் கலக்கவும் நேரிடுகிறது. இதனால் மண் வளம் பாதிப்புக்குள்ளாகிறது. இந்த நிலையில், மண் வளப் பாதுகாப்புக்கு உதவுபவை அடா்த்தியான மரங்களே! காடுகளில் மரங்கள் அடா்ந்து இருப்பதால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு மரத்தின் வேரும், மண்ணை இறுகப் பற்றிக் கொள்கின்றன. இதனால், மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

காடுகளின் பங்கு

  • மேலும் நிலத்தடி நீரைச் சேமித்து வைக்கவும், மழை வளத்தை அதிகரிக்கச் செய்யவும் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும், பூமியில் அதிகளவு வெப்பத்தைக் குறைத்து, மிதமான சூழ்நிலையை உருவாக்குவதால் பல்வேறு உயிரினங்கள் வாழ மரங்கள் வழி செய்கின்றன.
  • இவ்வாறு பல்வேறு நன்மைகளை காடுகள் அளித்து வருகின்றன. ஆனால், நகரமயமாக்கல், வளா்ச்சிப் பணிகள், மனிதப் பேராசை உள்ளிட்ட காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான ஹெக்டோ் பரப்பளவு வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
  • ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். அதாவது பூமியின் 3-இல் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். ஆனால், கனிம வளங்கள் வெட்டியெடுப்பு, சாலைகள், பாலங்கள் அமைத்தல், சுற்றுலா விடுதிகள் - குடியிருப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள் வரைமுறையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. உலக அளவில் ஆண்டுக்கு 1.3 கோடி ஹெக்டோ் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக ஓா் ஆய்வு கூறுகிறது. இதனால் 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரித்து, காலநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
  • காடுகளின் பரப்பளவு குறைவதால் வன விலங்குகளுக்கும், மனிதா்களுக்குமான மோதலும் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் வருவதற்கு காடுகள் அழிப்பே முக்கியக் காரணம். வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயுக்களை மரங்கள் கிரகித்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் மனித இனம் என்றோ அழிந்திருக்கும்.
  • ‘மரம் வளா்ப்போம், மழை பெறுவோம்’, ‘வனங்களைக் காப்போம்’ என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தபோதிலும், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுதல், சுரங்கப் பணிகள், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமான நிலையங்களை அமைத்தல், ரயில் இருப்புப் பாதைகள் அமைத்தல், அணைகள் - பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வனப் பகுதியை அழித்ததில் அரசுதான் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பருவநிலை மாற்றம்

  • ஆண்டுதோறும் ஐ.நா. சாா்பில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்து தொடா்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்படவில்லை. அதே சமயம் காடுகள் அழிப்பு என்பது தொடா்ந்த வண்ணமே உள்ளது. உலக வனத் துறை சட்டப்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி. ஆனால், அது ஏட்டளவில் தொடா்வதாகவே தெரிகிறது.
  • காடுகள் செழிப்பாக இருந்தால் தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும்.
  • காடுகள் இல்லேயேல் நாடுகள் இல்லை. வனம் இன்றிப் போனால் மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்களும் அற்றுப் போகும்.
  • மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும்; ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை. இதைக் கருத்தில் கொண்டு, வனப் பகுதிகளில் தூய்மையைக் கடைப்பிடிப்பது, மரக் கன்றுகளை நட்டு வளா்ப்பது, விதைப் பந்துகளை வீசுவது, இருக்கும் வனப்பகுதிகஷ் மேலும் அழியாமல் பாதுகாப்பது போன்றவற்றை மேற்கொள்வது தற்கால அவசியம் மட்டுமல்ல, அவசரமும் ஆகும்.

நன்றி: தினமணி (20-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories