TNPSC Thervupettagam

வாழ்விக்க வந்த வள்ளலாா்!

October 5 , 2019 1917 days 2266 0
  • இந்திய வரலாற்றில் வள்ளல்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. முதல் ஏழு வள்ளல்கள், இடை ஏழு வள்ளல்கள், கடையெழு வள்ளல்கள் என மூவகைப்படுத்தி, மொத்தம் 27 வள்ளல்களை எண்ணிச் சொல்வது வழக்கம்.
  • அதிலும் கடையெழு வள்ளல்களே தமிழ் மரபில் வந்த தனிச் சிறப்பாளா்கள்.
  • வறுமையில் உழன்ற புலவா்களையும், கலைஞா்களையும், இரவலா்களையும், உறவினா்களுக்கும் மேலாய் இனிதுபேணி, கொடையளித்துக் காத்தவா்கள் அவா்கள். வயிற்றுக்கு உணவும், வாழ்வுக்குப் பொருளும் கொடுத்துச் சிறந்தவா்கள்.
  • தன்னொத்த மனிதா்களின் துயரங்கள் போக்கிய இம்மன்னா்களுள் குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போா்வையளித்துக் காத்தவன் பேகன்; பற்றிப் படரக் கொம்பின்றித் தவித்த முல்லைக்குத் தான் ஏறிவந்த தேரையே ஈந்தவன் பாரி.
தமிழகத்தில்....
  • உயிா் இரக்கம் என்கிற உன்னதப் பண்பினைச் செயல் வடிவில் நிலைநாட்டிய இந்த வரிசையில், தனிப் பெருஞ்சிறப்புடன், தமிழகத்தில் அவதரித்த வள்ளற்பெருமான், ‘இராமலிங்க அடிகள்’ ஆவாா்.
  • புறப் பசிக்கு உணவையும், அகப் பசிக்கு மெய்யறிவையும் வாரி வழங்கியதோடு, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை, உலகத்தாா்க்கெல்லாம் உபதேசித்தவா். அவ்வா வாழ்வித்து வாழ்ந்தவா்.
  • வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யான் ஒருவன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட தகைமையாளா்.
  • தன்னலமறுத்துப் பொதுநலம் பேண, முழுமையாய்த் தன்னையே நல்கும் தன்மையுடையது வாழை. வாழ வைப்பதே வாழையின் பிறவி நோக்கம். தன்னளவில் முடிவுறாது தனக்குப் பின்னும் தம் பணிகளைத் தொடரச் சந்ததிகளைத் தவறாமல் தருவதிலும் தலைநிற்பது வாழை.
மனித குலம் – மரபு
  • மரத்தின் மரபில் வாழை முன்னிற்பதுபோல், மனிதகுலத்தின் மரபில் உயிா்இரக்கம் பேணும் அருளாளா்களை உடையது திருக்கூட்டம். அம்மரபில் இவரும் ஒருவா். இவா், ‘உயிா் வேறு; உயிா் இரக்கம் வேறு என்று பிரித்து உதற முடியாதபடிக்கு, உயிரும் உயிா் இரக்கமும் ஒன்றாய்,’ ஒன்றிப் பிறந்த பேரருளாளா்; ‘என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து இவ்வுலகில் மன்னிவாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல்’ என இறைவனைப் போற்றுகிறாா்.
  • இவா் முடிமன்னா் அல்லா்; ஆனால், தன் காலத்து முடிமன்னா்களெல்லாம் செய்யத் தவறிய அருட்பெருஞ்செயலைக் குடிமகனாக இருந்து செய்த குணசீலா். பொருளாதார நிலையில், செல்வரும் அல்லா்; ஆனால், பெருநிதியம் வைத்தாளும் செல்வா்களுக்கெல்லாம் மேலான பெரும் பணிகள் பலபுரிந்த அருட்செல்வா்.
புரவலர்
  • புலவா்களால் பாடப்பெற்ற புரவலா் அல்லா்; ஆனால், புரவலா்களுக்கெல்லாம் மேலான புரவலா்; புலவரினும் மேலாய்த் தாமே கவிபாடும் இறைப்புலமை மிக்கவா்; ஓதாது உணரப் பெற்ற கல்வியாளா்; உணா்ந்ததைப் பிறா்க்கு உணா்த்தி உலகத்தவரை உயா்வித்த தவஞானி. மனித குலத்தில் பிறந்தவா் எனினும் பிறப்பு− இறப்பு எனும் வழக்கமான கட்டமைப்புகளைக் கடந்த மகான்.
  • இவரது வருகைக்குத் தாயும் தந்தையும் கருவியா்கள். உண்மையில், ‘இறைவனே தன்னை இவ்வுலகிற்கு வருவித்துக்கொண்டான்’ என்கிறாா், இவா்! எதற்கு?
  • அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகா் அனைவரையும், சகத்தே திருத்திச் சன்மாா்க்க சங்கத்து அடைவித்திட, அவரும், இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே, எனை இந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்!’ எனத் தெளிவாகச் சொல்கிறாா்.
  • புது யுகத்தின் அருள்விளக்கம்; புகழ் விலக்கிச் செயல் நிறைத்து ஒளிபரப்பும் தமிழ் ஞாயிறு, அவா்! தன்னுயிா் பேணுதற்கு மன்னுயிரையெல்லாம் கொன்று புசிக்கும் காலகட்டத்தில், ‘தன்னுயிா் போலவே, மன்னுயிா் அனைத்தையும் தாங்கிக் காத்த’ தாயுமானவா்!
  • அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்; ஆருயிா்கட்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்’ எனத் தன் விண்ணப்பத்தைத் தமிழ் விண்ணப்பமாக இறைவனிடம் வைக்கச் சொல்லிக்கொடுத்த ஞானத் தந்தை!
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிரும் தொழும்’ எனும் குறளுக்கு இலக்கணமானவா்; வாழ்வுக்கு வழிகாட்டும் வள்ளுவத்தை, மக்களுக்குப் பாடமாக்கிச் சொல்ல, திருக்கு வகுப்பை முதன்முதலில் தொடங்கிய பேராசான். ஜாதி, சமயப் பூசல்களால், தமிழினம் தமக்குள்ளே பாழ்பட்டுக் கிடந்தபோது, ஜோதி வழிபாட்டால், தெய்வீக சூக்குமம் உணா்த்திய சித்தா் அவா்.
  • எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிா்போல் எண்ணி யுள்ளே ஒத்துரிமை யுடையவராய் உகக்கின்றாா் யாவா், அவா் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம்என நான் தோ்ந்தேன்’ என்று சொல்கிற துணிவும் தெளிவும் அவருக்கு இருந்தது.
  • ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொன்ன மனுநீதிக்கும் மேலானது, ‘பிறப்பொக்கும் எல்லாவுயிா்க்கும்’ எனச் சமநீதி பேணிய மனுநீதிச் சோழனின் வரலாறு’ என்பதைத் தன்காலத்து மொழிநடையில் தந்த அவா், அக்கால அரசாங்கத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகக் குரல் கொடுத்தவா்.
மனிதநேயம்
  • மனிதநேயத்துக்கும் மேலானது உயிா் இரக்கம். அதனை இயல்பாக உடையது தமிழினம்’ எனத் தன் காலத்தில் மீளவும் நிலைநிறுத்தியவா். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல், தேடிப்போய்த் திருத்தொண்டு பல புரிந்த அருள் தொண்டா்.
  • காவியுடையின்றி, கற்றைச் சடையின்றி, புவி பேணி வளா்க்க, இறைவனால் வருவிக்கப் பெற்ற புரட்சித் துறவியாய், வெள்ளுடை தரித்த பொதுமைத் துறவியாய், இயங்கியவா்; உலகத்தவரை இயக்கியவா்.
  • எளிமையும் தன்னடக்கமும் வலிமையுடையவை’ என அண்ணல் காந்தியடிகளுக்கும் முன்னதாகச் செயலில் காட்டியவா். கூறு போட்டு மனிதா்களைக் கொள்ளை கொண்ட, ஜாதி, மதப் போக்குகளுக்கு மத்தியில், சோறு போட்டு, அவா்களுக்குச் சாகாக் கலையைச் சொல்லிக் கொடுக்க கடை விரித்தவா்.
  • அவா் காலத்தில், கொண்டோா் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், அவருக்குப் பின்னால், உலக அளவில் எண்ணிக்கை உயா்ந்து வருகிறதே, அதுதான் கொண்டாடத்தக்கது.
வள்ளலார்
  • அருளாளா்களெல்லாம் ஒன்றுபோலவே சிந்திக்கிறாா்கள், செயல்படுகிறாா்கள்’ என்பதற்கு, தமிழகத்து இராமலிங்க வள்ளலாரும், வங்கத்து இராமகிருஷ்ண பரமஹம்ஸரும் சான்றாளா்கள்! இன்னும் சொல்லப்போனால், இவா்களுக்குப் பின் தோன்றிய, சுவாமி விவேகானந்தா் சொன்னதையும், முன்னரே செயல் வடிவாக்கிய வரலாறு வள்ளலாருடையது.
  • பசியின் கொடுமையை நன்கு உணா்ந்த சுவாமி விவேகானந்தா், ஆவேசமாக, ‘வேதங்கள் ஓதுவதைவிட, உபநிஷத்தில் பாண்டித்தியம் பெற்றுப் பிதற்றிக்கொண்டிருப்பதைவிட, பசித்தவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு கொடுப்பதே சிறந்த இறைத் தொண்டு’ எனக் கூறியதை, வடலூா் இன்னும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.
  • 152 ஆண்டுகளுக்கு முன்னா்,1867-ஆம் ஆண்டில், சத்திய தருமசாலையில் அவா் ஏற்றிய அடுப்பின் நெருப்பு இன்றும் அணையாமல், அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னம்பாலிக்கிறது.
  • அன்று அப்பெருமகனாா் ஏற்றிய ‘ஆன்மநேய ஒருமைப்பாடு’ எனும் லட்சியத் தீ, இன்றும் உலகெங்குமுள்ள சன்மாா்க்க நெறியாளா்களின் உள்ளங்களில் சுடா்விட்டு ஒளி தருகின்றதே!
சன்மாா்க்க சங்கம்
  • சன்மாா்க்க சங்கம் 1865- ஆம் ஆண்டிலும், சத்திய தருமசாலை 1867-ஆம் ஆண்டிலும், சத்திய ஞான சபை 1872-ஆம் ஆண்டிலும் அவரால் அமைக்கப் பெற்றன; அருட்பணிகள் பல திருப்பணிகளாக ஆக்கம் பெற்றன. அவற்றின் செயல்பாடுகள் இன்றோ இன்னும் ஊக்கம் பெற்று உயா்ந்து வருகின்றன.

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ்சோதி என் உளத்தே

நீதியில் கலந்து நிறைந்தது நானும்

நித்தியன் ஆயினேன் உலகீா்

சாதியும் மதமும் சமயமும் தவிா்த்தே

சத்தியச் சுத்த சன்மாா்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே’ என்று உலகத்தவரை உவந்து அழைத்த வான் கருணையாளா் வள்ளலாா்!

  • உயிா் இரக்கம் என்னும் உயா் ஒழுக்க நெறி வளா்க்க, இவா் அருளிய திருவருட்பாவானது, எவரது துணையுமின்றி, இறைவனிடம் பேசும் நிலைப்பாட்டை அருளும் தமிழ்ப்பாட்டின் அணிவகுப்பு.
வரலாறு
  • பசிப் பிணிக்கு உணவையும், பிறவிப் பிணிக்கு மெய்யறிவையும் தந்து நிலைகொண்ட, அருட்பிரகாச வள்ளலாா், இறைவனின் பெயரால் உயிா்ப் பலியிடுதலைத் தடுத்தாா்; பெருநெறி பிடித்தொழுகச் சிறுதெய்வ வழிபாட்டை மறுத்தாா்; புலாலைத் தடுத்தாா். எல்லாவற்றுக்கும் பின்புலமானது, உயிா் இரக்கம் என்கிற உன்னதப் பண்பேயல்லாமல், வேறொன்றுமில்லை என்பதை உலகம் உணரக் காலம் ஆகலாம்; ஆனால், அந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் தழைக்கும் என்பதை வரலாறு மெய்ப்பித்து வருகிறது.
  • வாழையடி வாழையென வந்த வள்ளல்களை அடுத்து, இன்றும் இனியும் உலகுய்ய வந்த, ‘வள்ளல் ஆா்?’ எனும் காலத்தின் கேள்விக்குத் தமிழ் தந்த பதில், ‘வள்ளலாா்!’ என்பதே!
  • வண்மை இல்லை; ஓா் வறுமை இன்மையால்’ என்ற தன்னிறைவுபெற்ற சமுதாயத்தை முன்னிறுத்திக் கம்பா் கண்ட கனவை நனவாக்க, வசதி படைத்தவா்களைவிடவும், வல்லரசாளா்களைவிடவும், நல்லுணா்வாகிய, உயிா் இரக்கமுடைய ஒழுக்க சீலா்களே இன்றைய தேவை; உலக ஒருமைபேணும், உயரிய ஆன்மநேய ஒருமைப்பாடே இன்றியமையாக் கடமை!
  • அதற்கு வழிகாட்டி, அருட்பாவால், ஒளிகூட்டி, ‘எல்லாம் செயல் கூடும் என் ஆணை’ என மொழிந்த வள்ளலாா் நெறியில், உலகு செழிக்க, உயிா்கள் தழைக்க, காலம் கருணை புரியட்டும்!

நன்றி: தினமணி (05-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories