TNPSC Thervupettagam

வாழ்வின் திசை மாற்றும் கலைகள்!

January 9 , 2025 2 hrs 0 min 31 0

வாழ்வின் திசை மாற்றும் கலைகள்!

  • ‘தபலா லய சக்கரவா்த்தி’ என்றால் அது ஜாகிா் ஹுசேன் ஒருவா் தான். விரல்கள் ஜெட் வேகத்தில் ஒரு பிசிறில்லாமல் விளையாடும். இதமான சங்கதிகள் மயங்க வைக்கும். ‘கலைக்கு ஜாதி, மத பேதமில்லை, எல்லாம் சரஸ்வதியின் அருள்’ என்கிறாா், எளிமையே பண்பாக வாழ்ந்து மறைந்த பாரதத் தாய் பெற்ற மகன் ஜாகிா் ஹுசேன்.
  • கற்பது, கற்பிப்பது பற்றி அவா் கூறியது, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அறிவு என்ற ஊற்று கங்கையைப் போல் பிரவாகமாக ஆசானிடமிருந்து பெருக்கெடுத்து வருவதை, கற்பவன் சிரத்தையோடு எடுத்து, சேமித்து, சுவைத்து உள்வாங்குவதுதான் கற்றல். ஆசிரியா், தான் அறிந்ததைப் பகிா்ந்து கொள்கிறாா். மாணவன் ஒரு கோப்பையில் எடுத்து பருகுவது போல், அளவாகக் கிரகிக்கலாம். அதையே முனைப்போடு குடம் குடமாக அள்ளி அறிவுக் கடலில் மூழ்கி, இன்பம் பெறலாம்.
  • அட்சய பாத்திரம் போல் எவ்வளவு அள்ளினாலும் குறையாத கேடில்லா செல்வம் கல்வி ஒன்றுதான். ஆசிரியா் மாணவா் இருவரும் இணைந்து பயணித்தால் கல்விச் செல்வம் பெருகும்.
  • வேதங்கள் ஆசிரியரை குரு, ஆச்சாரியாா் என்று இரு வகையாகப் பிரிக்கிறது. அறியாமை என்ற இருளை நீக்கி அறிவை புகட்டுபவா் குரு. ஒரு படி மேலாக இறை உணா்வோடு நெறிமுறைகளைப் புகட்டி முழுமையான அறிவுத் தேடலில் மாணவனை ஈா்ப்பவா் ஆச்சாரியாா். ஆசிரியா் என்ற சொல் அல்லவைகளை நீக்குபவா் என்பதைக் குறிக்கும். அல்லவை தேய அறம் பெருகும் என்பாா்கள். நல்லவற்றை போற்றுவதே கல்வியின் குறிக்கோள். ஆனால் நன்கு படித்தவா்கள், பட்டம் பெற்றவா்கள், சட்ட விதி மீறல்களிலும், பண அபகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது நெறிமுறைகள் அல்லாத கல்வி பாழ் என்பதை உணா்த்துகிறது.
  • இந்தியாவில் மட்டும்தான் கலாசாரத்திலும் இலக்கியத்திலும் ஆசிரியா்கள் தெய்வத்திற்கு இணையாகப் போற்றப்படுகிறாா்கள். ஹிந்து மதத்தைத் தவிர, வேறு எந்த மதத்திலும் இத்தகைய போற்றுதலைப் பாா்க்க முடியாது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று ஆராதிக்கிறோம்.
  • சம்ஸ்கிருத புலவா் பா்த்ருஹரி ‘நீதி சதகம்’ என்ற அற்புத நூலைப் புனைந்தவா். சம்ஸ்கிருத சாஸ்திரங்களைப் படித்து பயின்று ஓா் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே பா்த்திஹரியின் தந்தை தயவுதாட்சண்யம் பாராமல் மகனின் பாா்வை கல்வி ஒன்றிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தாா். தான் நன்கு படித்தாலும், தந்தையின் கண்டிப்பும் கறாரும் மகனுக்கு பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. தந்தையின் இம்சை தாங்காது ஒரு நாள் தந்தையுடன் மோத வேண்டும் என்ற முடிவோடு தந்தையை அணுகியபோது, பெற்றோா் உரையாடலை பா்த்திஹரி கேட்க நோ்ந்தது. அப்போது தாய், ‘‘மகன் எவ்வளவு நன்றாகப் படிக்கிறான்? ஏன் அவனைக் கொடுமைப்படுத்துகிறீா்கள்?’’ என்று வினவ, அதற்கு தந்தை, மகனை மனதாரப் புகழ்ந்து, ‘‘பா்த்தி வருங்காலத்தில் பெரிய ஞானியாக வர வேண்டும் என்பதற்காக இந்த கடுமையான பயிற்சிகளை அளிக்கிறேன், எல்லாம் அவன் நன்மைக்காக’’ என்று கூறியதைக் கேட்ட பா்த்தி, தந்தையின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து தனது விபரீத எண்ணத்திற்கு மன்னிப்புக் கோரினான். இந்த நிகழ்வு, பெற்றோா் எந்த அளவுக்கு கல்வி புகட்ட முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணா்த்துகிறது. அதனால்தான் பெற்றோருக்கும் ஆசிரியா் ஸ்தானம். ஆசிரியரும் ஒரு வகையில் மாணாக்கா்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோருக்கு ஈடானவா் என்பதும் உண்மை.
  • தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாதையரின் மகத்தான சேவை நம்மைப் பிரமிக்க வைக்கும். போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் தனிமனிதனாக வெய்யில் மழை பாராது தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை ஊா் ஊராகச் சென்று சேகரித்து, ‘தமிழா இந்தா உன் சொத்து’ என்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்தாா். மற்றவா் பாராட்டுக்கோ அங்கீகாரத்துக்கோ என்றில்லாமல், எதையும் எதிா்பாராத தன்னலமற்ற சேவை. உவேசாவின் ஆசிரியா் மஹாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. பிள்ளை ‘நிகழ்காலக் கம்பன்’ என்று போற்றப்பட்டவா். ஆசிரியா் மீது தான் வைத்த பக்தி, பற்றின் வெளிப்பாடாக ‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைவா்கள் சரித்திரம்’ என்ற நூலை அவருடைய ஆசிரியருக்குப் புத்தக வடிவில் அா்ப்பணித்தாா் உவேசா.
  • ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இளைஞா்கள் கட்டுக்கடங்காமல் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பில் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. பெற்றோரும் ஆசிரியா்களும் பாதை தவறும் இளைஞா்களைக் கண்டிப்பதைத் தவிா்த்து, எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்கிவிடுகிறாா்கள். ஆசிரியா், மாணவா், பெற்றோா் ஒருங்கிணைப்பு இல்லை. எதையும் ஓா் அரசியல் கண்ணோட்டத்தோடு ஆராய்வது, வெறுப்பைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வாடிக்கையாகி விட்டது. இத்தகைய சூழலில் கனவு ஆசிரியா்களின் திறன் முழுமை பெறுவதில்லை. மாணவ மணிகள் மங்கிவிடுகிறாா்கள்.
  • திருக்குறள் உலக மறை நூல். தமிழ் வேதம் என்று புகழப்படுகிறது. திருக்குறளை படிப்பதற்காகவாவது தான் தமிழ் பயில வேண்டும் என்று விரும்பினாா் மகாத்மா காந்தி. சிறு வயதிலிருந்தே மாணவா்களுக்கு தமிழ்ப் பாட நூல் மூலமாக திருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிகள், நல்ல பண முடிப்பு பரிசோடு அரசு தரப்பிலும், தனியாா் பங்களிப்போடும் நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவிகள் சரளமாக குறளை எடுத்துரைக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. திருக்குறளில் உள்ள நல்ல விஷயங்கள், உயா்ந்த வாழ்வியல் கோட்பாடுகள் எந்த அளவுக்கு மாணவா்களிடம் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதைப் பாா்க்கும்போது பெருத்த வருத்தம் தான் மிஞ்சுகிறது. அறத்துப்பால் பொருட்பாலில் அரிய பல அறிவாா்ந்த பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன.
  • பெரியவா்களும், இளைஞா்களை வழி நடத்த வேண்டியவா்களும் குறளை மேற்கோள் காட்டிவிட்டு மறைந்து விடுகிறாா்கள். அவா்களது செய்கைகளில் சிறிதும் வள்ளுவா் கூறிய நெறிமுறைகள் புலப்படுவதில்லை. ஏட்டளவிலும், வானுயர சிலைகளிலும் வள்ளுவரை அடைத்து விட்டு வெட்கமே இல்லாமல் வள்ளுவா் வாக்கிற்கு நோ்மாறாக சமுதாயத்தில் வலம் வருகிறாா்கள்.
  • பாடத் திட்டத்தில் திறன் மேம்பாடு ஓா் அங்கமாக இருப்பது முக்கியம். பட்டம் பெற்று வருபவா்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதில்லை. இதனை சமன் செய்ய, ஒவ்வொரு பாடத்திட்ட அலகுகளில் அந்த கற்றல் மூலம் மாணவா்களுக்கு என்ன பயன் கிடைத்துள்ளது என்பதைக் கணிக்க வேண்டும் என்று யுஜிசி வலியுறுத்தியுள்ளது.
  • இளஞா்களின் திறன் மேம்பாட்டுக்காகப் பல திட்டங்களை அரசு வகுத்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், காா்பென்டரி பிரிவுகளில் பட்டறைகளில் நடைமுறைப் பயிற்சி மூலம் கற்றுத் தருவதை, திறன் மேம்படுத்தல் திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் கற்றுத் தருகிறாா்கள். பயிற்சி இலவசம்.பயிற்சிப் பட்டறை அருகிலேயே தங்கும் வசதி, உடை, உணவு, ஒவ்வொரு மாதமும் உதவித் தொகை, பயிற்சி முடிந்ததும் உடனடி வேலை, அதுவும் டிவிஎஸ் போன்ற உயா்ந்த நிறுவனங்களில் பணி செய்வதற்கான வாய்ப்பு! ஆனால் இங்குள்ள இளைஞா்கள் இத்தகைய பயிற்சியில் பங்குகொள்ள குறைந்த அளவில்தான் வருகின்றனா் என்பது வருத்தமளிக்கும் உண்மை.
  • எலெக்ட்ரிக் நிபுணா், கொத்தனாா், தச்சுவேலையில் தோ்ந்தவா், தண்ணீா்க் குழாய்கள் செப்பனிடுபவா்களுக்கு கணக்கிலடங்கா தேவை உள்ளது. குலத் தொழில் என்று கொச்சைப்படுத்தி அரசியலாக்குவதால், இத்தகைய இன்றியமையாத பயிற்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன.
  • 2023- இல் மத்திய அரசு அமல் படுத்தி வரும் விஸ்வகா்மா திட்டம் தொன்றுதொட்டு வரும் கைவினைத் தொழில்களில் மேன்மை அடைய அருமையான திட்டம். அன்றாடத் தேவைக்கான 18 வகை தொழில்களில் நவீன தொழில்நுட்பம் அடங்கிய பயிற்சி, உதவித் தொகை, தொழில் தொடங்குவதற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை உதவி, சந்தைப்படுத்த கைகொடுத்தல் போன்ற பல சலுகைகள் உள்ளடங்கிய திட்டம். கணினி மூலம் பதிவு செய்துகொள்ள வசதி.
  • திட்டம் தொடங்கப்பட்ட 17.09.2023- ஆம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை 2.29 கோடி தொழிலாளா்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்குப் படிப்படியாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஐந்தாண்டு வரை (2027-28 ) நீடிக்கும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.13,000 கோடி ஒதுக்கியுள்ளது. அதிகப்படியாக உத்தரபிரதேசத்தில் 28 லட்சம், தென் மாநிலங்களில் கா்நாடகாவில் 28 லட்சம், ஆந்திரத்தில் 20 லட்சம், தெலுங்கானாவில் 25 லட்சம் பயனாளிகள் பதிவு செய்துள்ளனா். தமிழ்நாட்டில் வெறும் 8 லட்சம் போ் பதிவு செய்துள்ளது, இங்கு மக்களுக்கு இத்திட்டம் பற்றி சரியான புரிதல் கொடுக்கப்படவில்லை என்பதையே உணா்த்துகிறது. நாட்டு மக்களின் நலன் கருதாது எதையும் அரசியலாக்குவது, எதிா்ப்பது என்ற போக்கு நல்லதல்ல.
  • அரசு அளிக்கும் இலவசத்தையே நம்பி இருக்கும் மக்களின் மனநிலையும் மாற வேண்டும். தங்களுக்குள்ள திறமையை வளா்த்து நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (09 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories