- திசை தெரியாமல் தவிக்கும் உயர்-மேல் நிலைப் பள்ளி மாணவர்களின் நிலை, பள்ளிகளின் அவல நிலைக்கு இணையாக உள்ளது. வழிகாட்ட ஆளில்லாத எளிய குடும்பத்து மாணவர்கள், கருணையற்ற போட்டி உலகின் கத்தி முனையில் நடக்க இயலாமல் சரிந்துவிழும் இளைஞர்கள், சுய அழிவிலும், சமூக எதிர்ப்பிலும், வன்முறைகளிலும் தங்களை இழந்துகொண்டிருக்கும் கதியற்ற வளரிளம் பருவத்தினர் எனப் பலரையும் பார்க்கிறோம். இரண்டு பக்கங்களிலும் ஏற்பட்டுள்ள இந்த இழப்புகளை எவ்வாறு ஈடுசெய்வது?
- விரிவடைய வேண்டிய கனவு: முன்னாள் மாணவர்களை அரசுப் பள்ளிகளுடன் இணைக்கும் ஒரு புதிய திட்டத்தைப் பள்ளிக் கல்வித் துறை தொடங்கியிருக்கிறது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், இதுதொடர்பாக முன்னாள் மாணவர்களுக்குப் பல முறை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்; எவ்வகைகளில் எல்லாம் முன்னாள் மாணவர்கள் பள்ளிகள் மேம்பட உதவ முடியும் என்கிற வேண்டுகோளைத் தலைமைச் செயலர் இறையன்பு முன்வைத்திருக்கிறார்.
- அங்கொன்றும், இங்கொன்றும் விதிவிலக்காக நடக்கும் தர்ம காரியமாக இல்லாமல், தமிழ்நாடு முழுதும் பரவி, தலைமுறைகள் சங்கமிக்கும் பெரும் இயக்கமாக நிகழ வேண்டிய மாற்றம் இது.
- செய்ய வேண்டியவை: ஒவ்வொரு அரசுப் பள்ளியும், அரசு உதவிபெறும் பள்ளியும், இதற்கென்று ஒரு குழுவை அமைக்க வேண்டும். பழைய பதிவேடுகளை எடுத்துத் தூசு தட்டி, முன்னாள் மாணவர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். பள்ளியின் இன்றைய மாணவர்களும் குழுவில் இடம்பெற வேண்டும். அவர்களின் வேண்டுகோள், ஒவ்வொரு பள்ளி மாணவரின் தனித்துவக் குரலில், கவிதை வரிகளில், பிஞ்சு மொழியில் பதிவுசெய்யப்பட்டு, பள்ளி முன்னோர்களின் மனதைத் தொட வேண்டும்.
- இது ஒரு மாணவர் இயக்கமாக வேண்டும். சமூக ஊடக உலகில் முன்னாள் மாணவர் ஒருவரை எளிதாகக் கண்டறிய முடியும்; அவர் இதயத்தைத் தொட்டு, ஆர்வத்தைத் தூண்டினால் போதும். ஓராயிரம் பேர் இணைந்த வாட்ஸ்ஆப் குழுக்கள் ஒரு வாரத்தில் பிறந்துவிடும்.
- அரசுப் பள்ளி முன்னாள் மாணவர் பலர், தனியார் பள்ளிகளில் பயின்ற பணக்கார மாணவர்களைப் போல மேம்பட்ட பொருளாதார நிலையில் இருக்கிறார்கள். இன்னும் தட்டப்படாத அவர்களின் கதவுகளைத் தட்டினால், நிச்சயம் திறக்கும்.. வழி பிறக்கும்.
- ஊரின் குரல் ஒலிக்கட்டும்: இதில் பள்ளி அமைந்திருக்கும் ஊரின் குரலும் இணைய வேண்டும். ‘நம் பள்ளி, நம் பெருமை’ என்பது முதலில் ஊர் கொண்டாடும் சொந்தம். இன்றைய முன்னாள் மாணவர் பலர், அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்தாம். ஊரின் ஆலமரத்திலும், வேப்பமரத்திலும் தொங்கிய தொட்டில்களில், ஆயாவின், ஆச்சியின் தாலாட்டில் உறங்கியவர்கள்தாம். அவர்கள் இன்று நியூ யார்க், லண்டன் என எங்கிருந்தாலும் ஏதோ ஒரு நாளில் அந்த நினைவுகளில் கண்கள் பனிப்பவர்கள்தாம். முன்னாள் மாணவரை அழைக்கும் குரலில் பாட்டிமார்களின் வாஞ்சைக் குரலும் கலக்க வேண்டும்.
- வளரிளம் பருவத்தினருக்கு வழிகாட்ட... முன்னாள் மாணவர் உதவிக்கரம் நீட்ட வேண்டியது முக்கியமாக, பள்ளியின் வளரிளம் பருவத்தினருக்குத்தான். இன்றைய மாணவர்களின் செயல்பாடுகளைச் சிலர் கரித்துக்கொட்டுகிறார்கள். உண்மையில், இவர்கள் அன்புக்கும் புரிதலுக்கும் ஆதரவுக்கும் ஏங்குகிறவர்கள்.
- வளரிளம் பருவத்தினர் குறித்த பிரச்சினைகள் இன்று விடையற்ற கேள்விகளாக நம் முன் நிற்கின்றன. அவர்களைப் பரிவுடன் அணுக, பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் இல்லை. வாழ்வில் வெற்றி கண்ட முன்னாள் மாணவர் அந்த வெற்றிடத்தை நிரப்பும் அரிய, புதிய பணியை மேற்கொள்ள வேண்டும்.
- பள்ளிகளின் வளரிளம் பருவ மாணவர்கள் மனம்விட்டுப் பேச, அரித்தெடுக்கும் பிரச்சினைகளைக் கொட்ட, அறிவுரை கேட்க, ஆறுதல் பெற வயதில் முதிர்ந்தவர்களும் இன்று துணையாக இல்லை. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அதற்கான நேரமோ, பரிவோ, பொறுமையோ இல்லை. இரண்டு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் இல்லை. முன்னாள் மாணவர்களின் தொடர்புகள் வழி உருவாகும் உரையாடல் இந்நிலையை மேம்படுத்தும்.
- முன்னாள் மாணவர் ஒவ்வொருவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆயிரம் மாணவர்களின் ஆராதனைக்கு உரிய நாயகர்களாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை இழக்கலாமா?
நன்றி: தி இந்து (04 – 04 – 2023)