TNPSC Thervupettagam

விக்ரமின் சமிக்ஞை: இழப்பைக் கடந்து தொடரட்டும் சந்திரயானின் சாதனை

September 13 , 2019 1956 days 1041 0
  • சமீப நாட்களாக நிலவுக்கான தரையிறங்கு கலம் ‘விக்ரம்’ பற்றிய கவலை இந்தியர்களை ஆக்கிரமித்திருக்கிறது.
  • நிலவை ஆராயும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முயற்சியில், இந்தக் கலம் சற்று வேகமாக விடுபட்டு, நிலவின் தரையில் சாய்ந்ததுடன் தகவல் தொடர்பையும் இழந்துள்ளது.
  • மற்றபடி, நிலவை ஆராயும் முயற்சி வெற்றிகரமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. விக்ரமிடமிருந்து சமிக்ஞைகள் பெறுவதுகூடச் சாத்தியம்தான் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளில் ஒருசிலருக்கு இருக்கிறது.

நிலவில் ஆய்வுக் கருவி

  • நிலவில் தரையிறங்குக் கலத்தை இறக்கும் வேலையை ‘இஸ்ரோ’ முதன்முறையாக இப்போதுதான் மேற்கொண்டுள்ளது. நிலவில் ஆய்வுக் கருவியைத் தரையிறக்கப் பல நாடுகள் 38 முறை முயன்று, அதில் பாதியளவில்தான் வென்றுள்ளன என்பதிலிருந்தே இது சிக்கலான செயல் என்பது புரிகிறது.
  • இதில் எங்கே பிசகினோம் என்று விஞ்ஞானிகள் நிச்சயம் கண்டுபிடித்து அதை அடுத்த முறை சரிசெய்துவிடுவார்கள் என்பதால் பெரிதாகக் கவலைப்பட ஏதுமில்லை.
  • நிலவின் தரையிலிருந்து 35 கிமீ உயரத்திலிருந்து மணிக்கு 6,000 கிமீ வேகத்தில் விடுவிக்கப்பட்ட ‘விக்ரம்’ படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு தரைக்கு அருகே கொண்டுசெல்லப்பட்டது.
  • இன்னும் 2 கிலோ மீட்டர்களே இருந்த நிலையில்தான், அது தகவல் தொடர்பை இழந்தது.

பிரக்யான்

  • விக்ரமைத் தரையில் இறக்குவதும் ‘பிரக்யான்’ என்ற உலாவி மூலம் நிலவின் மேற்பரப்பை 14 நாட்களுக்கு ஆய்வுசெய்வதும்தான் ‘சந்திரயான்-2’ சோதனையின் முக்கிய நோக்கங்கள்.
  • எனவே, முழு முயற்சியுமே தோற்றுவிட்டதாகக் கருதுவது தவறு. 90% முதல் 95% வரையில் இச்சோதனை வெற்றியிலேயே முடிந்திருக்கிறது.
  • நிலவைச் சுற்றிவரும் சுற்றுக்கலன் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அது அடுத்த 7 ஆண்டுகளுக்குத் தனது பணிகளைச் செய்துகொண்டிருக்கும்.
  • மிகத் துல்லியமான புகைப்படங்களை அது எடுத்து பூமிக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கிறது, என்னென்ன மாறுதல்களுக்கு அது உள்ளாகிறது, நிலவில் கனிமங்கள் உள்ள இடங்கள் எவை, நிலவு எப்படி உருவாகியிருக்கும், நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் உறைந்து காணப்படுகிறதா என்றெல்லாம் ஆராய அது அனுப்பும் புகைப்படங்கள் உதவும்.
  • நிலவின் தென்துருவத்தில் உள்ள பள்ளங்கள் சூரிய ஒளியே படாமல் மறைவுப் பகுதியில் காணப்படுகின்றன.
  • அங்கே தண்ணீர் இருக்க வாய்ப்புகள் அதிகம். நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்தால் உயிரினம் வாழத் தகுந்த சூழலுக்கான வாய்ப்புகள் உண்டு.
  • ஆகவே, ‘சந்திரயான் - 2’ திரட்டும் தரவுகளை அறிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் ‘நாசா’ ஆர்வமாக இருக்கிறது.
  • 2024 வாக்கில் தென்துருவத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும் ‘நாசா’ விரும்புகிறது.
  • நிலவில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகளை ஏற்கெனவே அனுப்பிய விண்கலங்கள் தெரிவித்துள்ளன. ‘சந்திரயான் - 2’ அதை உறுதிப்படுத்தக்கூடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories