TNPSC Thervupettagam

விசிலடிக்கும் செந்நாய்களும் காபித் தோட்ட நினைவுகளும்

February 15 , 2025 8 days 34 0

விசிலடிக்கும் செந்நாய்களும் காபித் தோட்ட நினைவுகளும்

  • சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்குக் காட்டுயிர்கள் மீது நீண்ட காலமாக ஆர்வம் உண்டு. தொலைதூரக் காடுகளில் உள்ள காட்டு விலங்குகள் எவ்வாறு உயிர்வாழ்கின்றன, தொடர்பு கொள்கின்றன, வளர்கின்றன என்பது பற்றி அடிக்கடி யோசிப்பேன். அவற்றில் குறிப்பாக இரைகொல்லிகளின் வேட்டையாடுதல் என்னைப் பெரிதும் கவர்ந்தது. வேட்டையாடுவதற்கு முழுமையான மன, உடல் வலிமை தேவைப்படுகிறது.
  • அத்துடன் பொறுமை உணர்வு, வியூகம் வகுத்தல், உணவைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடு ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன. இரைகொல்லிகள் மீதான என்னுடைய இந்த ஆர்வம் தொடரும் என்று அந்தக் காலத்தில் நான் நினைத்திருக்கவில்லை. செந்நாய், கீரி, சிறுத்தை, புனுகுப்பூனை, கரடி போன்ற காட்டுயிர்களைப் பற்றிய முறையான ஆராய்ச்சி நோக்கி எதிர்காலத்தில் நகர்வேன் என அப்போது எனக்குத் தெரியாது.
  • செந்நாய் (Cuon alpinus) என்றும் அழைக்கப்படும் இந்தியக் காடுகளுக்கே உரிய உயிரினம் நம்பமுடியாத ஒரு வேட்டையாடும் விலங்கு. கூட்டமாக வாழும் இந்த உயிரினம் இந்தியாவின் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மத்திய இந்தியா, வடகிழக்கு இந்தியக் காடுகளில் வாழ்கிறது. நாய்க் குடும்பத்தின் பிற விலங்குகளைப் போல அலறுதல், குரைத்தல் போன்றவற்றுக்கு மாறாக விசில் அடித்தும், கீச்சிட்டும் இவை தொடர்புகொள்கின்றன.
  • செந்நாய்கள் மிகவும் திறமையான வேட்டையாடிகள். அவை இரையை துரத்தத் தொடங்கும்போது, கூட்டத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனக்கான இடத்தை முடிவுசெய்து, ஒருமித்துத் துரத்தலை மேற்கொள்கின்றன. கூட்டத்தின் உறுப்பினர்களுக்கு இடையேயான சரியான ஒருங்கிணைப்பும் தகவல்தொடர்பும் குழுப் பணிக்குச் சிறந்த உதாரணமாக அமைகிறது. குறுகிய துரத்தலுக்குப் பிறகு, இரையை அவை விரைவாகப் பிடித்துவிடுகின்றன. செந்நாய்யின் எடையைவிட 10 மடங்கு அதிகமிருக்கும் காட்டு மான்கள், மாடுகள் போன்ற இரையைக்கூட விரைவாகப் பிடிக்கின்றன.

கண்டேன், கண்டேன்!

  • கடந்த இரண்டு ஆண்டுகளாக, கேரளத்தில் மாநிலம் தழுவிய செந்நாய் சார்ந்த ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபட்டுவருகிறேன். நெல்லியம்பதியில் நாங்கள் நடத்திய ஓர் ஆய்வின்போது, நானும் என் குழுவினரும் துண்டுதுண்டாகக் காடுகள் சிதறிக் கிடக்கும் ஒரு காபித் தோட்டத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தோம்.
  • கணக்கெடுப்பு நடத்துவதற்காகக் குறிப்பிட்ட ஒரு பாதையில் நாங்கள் நடந்து சென்றோம். அருகில் ஒரு நீரோடையின் மெல்லிசை தோட்டத்தின் வழியாக தவழ்ந்து எங்கள் காதுகளை வந்தடைந்து. தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் பாதையில் ஆங்காங்கே இருந்தன.
  • கணக்கெடுப்பின்போது, நீரோடை அருகே அடர்ந்த கருமை நிற வாலுடன் இரண்டு செந்நாய்களைக் கண்டேன். என் மனதில் உற்சாகம் அதிகரித்தது. ஆனால், எனது கூட்டாளி சிறிது தூரம் முன்னே சென்றிருந்தார். நான் அவரைப் பின்னுக்கு இழுத்தேன். நாங்கள் இருவரும் ஆற்றின் அருகே மூன்று செந்நாய்களைக் கண்டோம். அவற்றைப் பார்த்த உற்சாகத்தில் என் கைகள் நடுங்கினாலும், அவை காட்டுக்குள் மறைவதற்கு முன்பு மங்கலான சில ஒளிப்படங்களை எடுக்க முடிந்தது.
  • செந்நாய்களை இன்னும் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். அவற்றின் பாதையை எச்சரிக்கையுடன் பின்பற்றினேன். அப்போதுதான் அற்புதமான ஒரு காட்சியைக் கண்டேன். நீரோடைக்கு அருகிலுள்ள பாறைகளில் ஐந்து செந்நாய்களைக் கொண்ட ஒரு குழு சிதறி அமர்ந்திருந்தது. பகலில் தோட்டத் தொழிலாளர்களால் பரபரப்பாகிவிடும் ஒரு காபித் தோட்டத்துக்கு நடுவில், நள்ளிரவில் இப்படிக் காட்டுயிர்கள் கூடுவது ஓர் அரிய காட்சி!

புதிய அனுபவம்:

  • நானும் எனது கூட்டாளியும் அவற்றைத் தொந்தரவு செய்யாதபடி பாதுகாப்பான இடைவெளியில், ஒரு காபிப் புதருக்கு அருகில் அமைதியாக உட்கார்ந்து அந்தக் கூட்டத்தைக் கவனித்தோம். நாங்கள் முதலில் பார்த்த மூன்று செந்நாய்கள் நீரோடைக்கு அருகில் அலைந்து கொண்டிருந்தன. மற்ற இரண்டும் புதர்களுக்குப் பின்னால் மறைந்திருந்தன. அவற்றின் மெல்லிய அலறல்கள் மட்டுமே எங்களுக்குக் கேட்டது.
  • அந்தக் குழுவின் தலைமைச் செந்நாய் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. அவற்றின் சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லாததை உறுதிசெய்தது. எனது இருகண்ணோக்கி மூலம், அவை தண்ணீர் குடிக்கின்றனவோ என்று நினைத்துக் கவனம் செலுத்தினேன். ஆனால், புதிதாகக் கொல்லப்பட்ட கடமானை அவை விருந்தாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
  • தலைமைச் செந்நாய் கடமையுணர்வுடன் கூட்டத்தை மேற்பார்வையிட்டுக்கொண் டிருந்தது, அதேநேரத்தில் அதன் துணையோ உணவை அனுபவித்து உண்டது. அருகில், ஓர் இளம் செந்நாய் உண்பதற்காகப் பொறுமையுடன் காத்திருந்தது, மற்ற இரண்டும் ஓய்வெடுத்தபடி காத்திருந்தன. சிறிது நேரம் கழித்து, மக்கள் வரும் சத்தம் கேட்டது. தலைமைச் செந்நாய் காதுகள் விறைக்க விழிப்புடன், மக்கள் வருவதைக் கண்டறிந்து, ஒரு நுட்பமான சமிக்ஞையால் கூட்டத்தை எச்சரித்தது.
  • அடுத்த கணத்தில், எந்தத் தடயமும் இல்லாமல் காபிப் புதர்களில் செந்நாய்கள் மறைந்துவிட்டன. அப்பகுதிக்கு வந்த காபித் தோட்டத் தொழிலாளர்கள் இறந்த கடமானைக் பார்த்தனர். இது செந்நாய்களின் வேலை என்பதை உணர்ந்தனர். செந்நாய்யின் நடத்தை பற்றிய அவர்களின் புரிதலை அவர்களின் உரையாடல் வெளிப்படுத்தியது. வேட்டையாடிய செந்நாய்கள் சாப்பிடத் திரும்பும் என்பதற்கான சாத்தியத்தை அங்கீகரித்து, சற்று நேரம் கழித்து அங்கே திரும்பி வருவது என அவர்கள் முடிவுசெய்தனர். செந்நாய்கள் உணவை அமைதியாக அனுபவிக்க விட்டுச்சென்றனர்.

தகவமைக்கும் இயற்கை:

  • சிறிது தயக்கத்துடன், எங்கள் மேற்பார்வையைத் தொடர்ந்தோம். ஆர்வம் அதிகமாகி, அவ்வப்போது இருகண்ணோக்கி வழியாக அவற்றைப் பார்க்க வேண்டும் என்கிற தூண்டுதல் ஏற்பட்டது. அடுத்து நான் பார்த்த காட்சி என்னை உணர்வுவயப்படுத்தியது. உணவுக்கு இடையில் ஐந்து செந்நாய்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.
  • இவை அனைத்தும் ஒரு மனித குடியிருப்பிலிருந்து நூறு மீட்டர் தொலைவில்தான் நடந்து கொண்டிருந்தன. வேகமாக மாறிவரும் காலங்களில்கூட இயற்கை தன்னை எவ்வாறு தகவமைத்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது என்பதற்கான நினைவூட்டலாக இது இருந்தது.
  • செந்நாய்கள் முதன்மையாகக் காடுகளைச் சார்ந்த வேட்டையாடும் உயிரினங்கள். அவை மனித நடமாட்டத்திலிருந்து வெகு தொலைவில் வாழவே பொதுவாக விரும்புகின்றன. காலப்போக்கில் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் காபி, தேயிலைத் தோட்டங்கள் போன்ற வேளாண் தோட்டங்களில் மனிதர்களுடன் சேர்ந்து வாழ அவை பழகிவிட்டதாகத் தெரிகிறது.
  • தோட்டங்களாகத் திருத்தப்பட்ட இந்த வாழிடங்கள், இன்றைக்கு அவற்றின் புகலிடங்களாக இருக்கின்றன. செந்நாய்கள், பல இரைகொல்லி உயிரினங்கள் மாறுபட்ட இந்த நிலப்பரப்புகளில் செல்வதைப் பார்ப்பது, சவால்களைச் சமாளிப்பது, அவை செழிப்பாக இருக்க வழிகளைக் கண்டறிவது ஆகிய அம்சங்கள் எனது ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டிருக்கின்றன.
  • இந்த உயிரினங்களுடனான எனது அனுபவம் இப்போதுதான் தொடங்கி யிருக்கிறது. காட்டுயிர்கள்-மனிதர்கள் ஓரிடத்தைப் பகிர்ந்துகொள்ளும் தனித்துவம் வாய்ந்த இந்த உறவைப் புரிந்துகொள்வது என்பது புதிதாகப் போடப்பட்ட அசாதாரணமான, சுவையான காபியை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.
  • இப்போது நான் நகரத்திற்குத் திரும்பிவிட்டேன். ஓர் ஆராய்ச்சியாளரைப் போல தரவுகளைப் பகுப்பாய்வு செய்கிறேன். என் காபியின் ஒவ்வொரு துளியும் விசில் அடிக்கும் அந்த செந்நாய்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. அது சார்ந்த நினைவுகள் என் காபிக்குக் கூடுதல் சுவையையும் அளிக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories