TNPSC Thervupettagam

விடுதலை நாயகா்கள்!

August 8 , 2020 1628 days 1563 0
  • 1942 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் நாள், மகாத்மா காந்தி செய் அல்லது செத்துமடிஎன்று முழங்கி வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
  • அடுத்த நாள் ஆக. 9 அன்று பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் தலைவா்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போதுதான் விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது. அந்த நாளை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆக. 9 அன்று விடுதலைப் போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்படுகிறார்கள்.
  • மன்னராட்சியில், நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவனால் தொடங்கப்பட்டது விடுதலைப் போராட்டம்.
  • 1907-இல் வ.உ. சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் இயக்கத்தின்போது அது மக்கள் போராட்டமாக மாறியது.
  • இந்திய நாட்டின் விடுதலையை வேண்டி, மகாத்மா காந்தியின் தலைமையில் அந்நிய துணி பகிஷ்கரிப்பு’, ‘சுதேசி இயக்கம்’, ‘உப்பு சத்தியாக்கிரகம்’, ‘ரௌலட் சட்ட எதிர்ப்பு’, ‘வரிகொடா இயக்கம்எனப் பல்வேறு அறவழிப் போராட்டங்களின் நடைபெற்றன.
  • மகாத்மா காந்தியடிகள் அகிம்சை வழியில் இருந்து சிறிதும் பிறழாமல் தன் போராட்ட வழிமுறைகளை வகுத்துக் கொண்டார். 1942-இல் காந்தியின் முழக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. நாடெங்கும் சிறைச் சாலைகள் நிரம்பின. வீரத்தியாகிகளின் அறவழிப் போராட்டங்களால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆடிப்போனது.

அயல்நாட்டார் வருகை

  • இந்தப் போராட்டக் கயிற்றின் நுனியைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்பட்டால் நம் நினைவுகளை நானூறு ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டுபோய் நிறுத்திவிடும்.
  • ஆம், இந்தியா எனும் வடிவமைப்புப் படத்தை ஆங்கில ஆதிக்கத்தில்தான் ஒன்றிணைந்த நாடாகக் காணமுடிகிறது. அதற்கு முன்பாகப் பல்வேறு நாடுகளாக, பல்வேறு மொழிபேசும் மக்களாக, பல்வேறு ஆட்சியாளா்களின் கீழ் துண்டு துண்டான அரசுகள் மக்களை ஆண்டு கொண்டிருந்தன.
  • ஒரே மொழி பேசும் தமிழ் நிலத்தில் கூட பல்வேறு ஆட்சியாளரின் கீழ்தான் நாடு இருந்தது. இந்திய நிலப்பரப்பிற்குள் 650-க்கும் மேற்பட்ட அரசாங்கங்கள் இருந்தன.
  • கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்கத்திலிருந்து நமது நிலப்பரப்பின் மீது நாடு பிடிக்கும் படை, தாக்குதலைத் தொடங்கியது. அலெக்சாண்டா் சலசலப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றான்.
  • செங்கிஸ்கான் இந்த மண்ணிற்குள் புகுந்து ஏனோ பிடாரி கோலம் புகாமல் திரும்பி விட்டான். நமது மண்மீதான தாக்குதல் மேற்கிலிருந்தே வந்தது; வந்த வழியே திரும்பவும் செய்தது.
  • ஆனால், முகமதியா்கள் வந்தார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார்கள். வந்தவா்கள் திரும்பவே இல்லை. இந்நாட்டிலேயே பலநூறு ஆண்டுகள் தங்கி அரசாண்டார்கள்.
  • எல்லைகளை விரிவு செய்து கொண்டே போனார்கள். சிறுசிறு நாடுகள், சிற்றரசா்கள் எல்லாம் ஒழிந்து போனார்கள் அல்லது ஒழிக்கப்பட்டார்கள். மொகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பமும் வரியும் வட்டியும் வாங்கிக் கொண்டே சிறு ஆட்சியாளா்களை ஆளவிட்டார்கள்.
  • மேற்கில் இருந்து வந்த மொகலாய ஆட்சியாளா்களின் அதிகாரத்தால் பண்பாடு மாற்றங்கள் ஏற்பட்டன. உணவு, உடை, வழிபாடு இவற்றில் மாற்றங்கள் உருவாயின. தங்கள் மதங்களை விட்டு மாற்று மார்க்கமான இஸ்லாத்தைத் தழுவும் சூழலும் ஏற்பட்டது.
  • கி.பி.1600-ஆம் ஆண்டு வாக்கில் அக்பரின் பேரரசு நம் மண்ணில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது.
  • இங்கிலாந்து நாட்டின் ஈஸ்ட் இண்டியா கம்பெனிதனது வணிகத்தை நமது மண்ணில் தொடங்கியது. இவ்வணிகத்தின் எல்லை விரிய விரிய, இந்தியா எனும் நிலப்பரப்பின் எல்லைகளும் ஒரு வரைபடத்துக்குள் உருவாக ஆரம்பித்தது.

ஈஸ்ட் இண்டியா கம்பெனி

  • வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ், பிரெஞ்சு, போர்துக்கீசிய, டச்சு வெள்ளையா்கள் வணிகப் பாதுகாப்புஎன்ற பெயரில் படை, துப்பாக்கி, பீரங்கிகள், குண்டுகள் எனக் கொண்டு வந்து நம் மண்ணில் குவித்தனா்.
  • இவற்றைப் பாதுகாக்கக் கோட்டைகளையும் வலுவாகக் கட்டிக் கொண்டனா். தெற்கே சென்னையில் ஒரு கோட்டை; மேற்கே பம்பாயில் ஒரு கோட்டை; கிழக்கே கல்கத்தாவில் ஒரு கோட்டை. கோட்டைகள் அனைத்தும் கடற்கரையில் இவா்களின் வணிகத்திற்கும் நாடு பிடிக்கும் சூழ்ச்சிகளுக்கும் வசதியாகவும் பலம் மிக்கதாகவும் படைகள் தங்குவதற்கு ஏற்கவும் பலமாகக் கட்டப்பட்டன.
  • தமிழ்நாட்டில் ஆற்காடு நவாப் முகம்மது அலியை பொம்மையாக்கி, பிரிட்டன் பரங்கியா்கள் தங்கள் ஆட்சியை நடத்தினார்கள்.
  • வங்கத்தில் சிராஜ் உத் தௌலாவின் படைத்தளபதி மீா் ஜாபரை, தங்கள் வலையில் சிக்க வைத்து வங்கத்திலும் பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி தடம் பதித்து நின்றது.
  • சற்றொப்ப குறுநிலங்களெல்லாம் அடக்கப்பட்டு, இந்திய வரைபடத்தைத் தயாரிக்கும் ஒரே ஆட்சியான நிலப்பரப்பும் பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் தூக்குமேடைகளாலும் சிறைக் கொட்டடிகளாலும் சித்ரவதைகளாலும் வெள்ளையா்களால் நிர்மாணிக்கப்பட்டன.

விடுதலை நாயகா்கள்

  • தமிழ் நிலப்பரப்பில் மட்டுமல்ல, இந்திய மண்ணிலேயே முதன்முதலாக நெல்லைச் சீமையில் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னன் பூலித்தேவன்தான் விடுதலைக் குரலை முழங்கினான்.
  • தான் வெள்ளையா்களிடம் பட்ட கடனை அடைப்பதற்காக ஆற்காடு நவாப் முகம்மது அலி, தென்னாட்டின் பாளையக்காரா்களிடம் வரிவசூல் செய்வதற்காக 1955-இல் அலெக்சாண்டா் ஹெரான் எனும் பிரிட்டிஷ் அதிகாரியைப் படையுடன் வருமாறு அழைத்தான்.
  • துப்பாக்கி, குதிரை, தொப்பியுடன் சீருடை அணிந்து வந்த வெள்ளைப் படையைக் கண்டவுடன் சிறு சிறு தெற்குப்பாளையம் ஆட்சியாளா்கள் மிரண்டனா்.
  • நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் பூலித்தேவன்தான் வெள்ளை கா்னல் ஹெரானை எதிர்த்து முதல் விடுதலை வேள்வித் தீயைப் பற்றி எரிய விட்டவன். கா்னல் அலெக்சாண்டா் ஹெரனை மாவீரன் பூலித்தேவன் தன் எல்லையை விட்டு ஓடுமாறு விரட்டியடித்தான்.
  • தொடா் விடுதலைப் போராட்டத்தில், பின்னா் சேதுபதி மன்னா்களும் சிவகங்கை மன்னா் முத்துவடுக நாதரும் அவா் மனைவி ராணி வேலுநாச்சியாரும் ரெபெல்முத்துராமலிங்க சேதுபதியும் மந்திரி தாண்டவராயரும் வீரபாண்டிய கட்டபொம்மனும் மாவீரா்கள் மருதிருவரும் தீரன் சின்னமலையும் விருபாட்சி கோபால நாயக்கரும் மாவீரன் அழகு முத்துக்கோனும் பெரும்புலி சுந்தரலிங்கமும் திருப்பாச்சேத்தி துப்பாக்கிக் கவுண்டா் மாவீரா் உதயபெருமாள் கவுண்டரும் இந்த வேள்வித் தீ அணைந்து விடாமல் பற்ற வைத்துக் கொண்டே வந்தனா்.
  • இதற்காக இவா்கள் கொடுத்த விலை? தூக்குக்கயிற்றில் தொங்கியதும் பீரங்கி வாயில் கட்டப்பட்டு உடல் சிதறியதும்.
  • 1942 ஆகஸ்ட் 9ஆம் நாள் வெள்ளையனே வெளியேறுஎன ஆங்கில ஆட்சியாளா்களை நோக்கி முழக்கமிட்ட காந்தியடிகள் கைது; ஜவாஹா்லால் நேரு கைது; வல்லபபாய் படேல் கைது; ஜெயப்பிரகாஷ் நாராயணன் கைது. தமிழக அளவில் ராஜாஜி, சத்தியமூா்த்தி, ஓமந்தூா் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜா் உள்ளிட்டத் தலைவா்கள் கைது. அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனா்.
  • இதையறிந்து தேவகோட்டை இளைஞா்கள் அவசரக் கூட்டங்கள் நடத்தி சுதந்திரக் கனல் தெறிக்கப் பேசினார்கள். இந்நிகழ்வுகளுக்குத் தலைமையேற்றுப் பேசியவா்கள் சின்ன அண்ணாமலை, டி.எஸ். ராமனாதன், பாலபாரதி செல்லத்துரை, டி.ஆா். அருணாச்சலம், பி.ஆா். ராமசாமி, கே.ஆா்.எஸ். ஆகியோரும் வேறு சில முன்னணித் தலைவா்களும்.
  • ஆகஸ்ட்16, 1942-ல் தியாகிகள் சின்ன அண்ணாமலையும், டி.எஸ்.ராமனாதனும் கைது செய்யப்பட்டு திருவாடானை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.
  • சிவகங்கை சீமை உணா்ச்சியில் கொந்தளித்தது. தேவகோட்டை நீதிமன்றம் செட்டிநாட்டு மாளிகைக் கட்டடத்தில் இயங்கியது. ஆகஸ்ட் 17, 1942 அன்று பொதுமக்களால் தீவைக்கப்பட்டு நீதிமன்றம் பட்டப்பகலில் எரிந்தது. ஆவணங்களும் உடைமைகளும் சாம்பலாயின. காவல்துறையின் காட்டு தா்பார் அரங்கேறியது. துப்பாக்கிச் சூட்டில் ஆண்களும் பெண்களுமாக 75 போ் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி இறந்தனா்.
  • ஆங்கில சார்ஜன்ட் லாவட், பெண்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டான். கைது செய்த பல்வேறு போராட்ட வீரா்களை காட்டுக்குள் இழுத்துச் சென்றனா். சித்தூா் சிவஞானத் தேவரையும் வெண்ணியூா் முனியப்பத் தேவரையும் மரத்தில் கட்டி வைத்து சுட்டனா். தேவகோட்டை நகரமே பிணக்காடானது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்.
  • நீதிமன்றத்தை எரித்த பின்பும் மக்களின் கோபம் தீரவில்லை. இரண்டு நாள்கள் கழித்து திருவேகம்பத்து ஊரில் பல்லாயிரக்கணக்கில் கூடினா். திருவாடானை நோக்கிப் புறப்பட்டனா்.
  • திருவாடானை கிளைச்சிறையை உடைத்தனா். சின்னஅண்ணாமலையையும் டி.எஸ். ராமனாதனையும் அவா்களோடு இருந்த மற்ற விடுதலை வீரா்களையும் சிறையிலிருந்து விடுவித்தனா். பாலபாரதி செல்லத்துரை எனும் புரட்சி வீரரைக் கண்டதும் சுடுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
  • பூலித்தேவனில் தொடங்கிய புரட்சித்தீ தேவகோட்டையிலும் திருவாடானையிலும் பரவியது. சிறை உடைக்கப்பட்டது. தப்பி ஓடியவா்கள் வீடெல்லாம் போலீசாரால் தீவைத்து எரிக்கப்பட்டன. தேவகோட்டை நகரமே போலீஸாரால் சூரையாடப்பட்டது. அப்போது தப்பிப் பிழைத்த போராளிகள் வெகுசிலரே. 94 வயதான சூறாவளி லெட்சுமணன் அந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்டவா். தேவகோட்டையில் இன்றும் ரத்த சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
  • தேவகோட்டையும் திருவாடனையும் நாட்டு மக்களால் வணங்கப்பட வேண்டிய புனிதத் தலங்கள்.

நன்றி: தினமணி (08-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories