- உத்தரகாண்ட் மாநிலம் சமோலி வெள்ளப்பெருக்கு விபத்து, சுற்றுச்சூழலின் இன்றியமையாமை குறித்தும், வளா்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது குறித்துமான விவாதத்துக்கு வழிகோலியிருக்கிறது.
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் எந்தவிதமான பொருளாதார வளா்ச்சியும் சாத்தியமில்லை என்கிற நிலையில், இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதஇனமே வளா்ச்சிக்கும் அழிவுக்கும் இடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
- உச்சநீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் அடங்கிய அமா்வுக்கு முன்பு வந்த அந்த பொதுநல வழக்கு, சூழலியல் பாதிப்பு குறித்த பிரச்னையை வித்தியாசமான கோணத்தில் அணுக முற்பட்டிருக்கிறது.
- மத்திய அரசின் ‘சேது பாரத்மாலா’ திட்டத்தின்படி, இந்தியா முழுவதிலும் நெடுஞ்சாலைக்குக் குறுக்கே செல்லும் ரயில் இருப்புப்பாதைகளின் மீது மேம்பாலங்கள்கட்டப்படுகின்றன. 19 மாநிலங்களில் 20,800 கோடி செலவில் 208 மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் இந்தத் திட்டத்தின்கீழ் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
- மேற்கு வங்கம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 112-இல் 22 மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.2,294 கோடி ஒதுக்கியிருக்கிறது. அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. வங்க தேசம், மியான்மா் ஆகிய நாடுகளுடன் இந்தியாவை இணைப்பதில் தேசிய நெடுஞ்சாலை 112 முக்கியப் பங்கு வகிக்கிறது.
- பராசத் என்கிற பகுதியிலிருந்து போன்காவ் என்கிற பகுதிவரையிலான 59 கி.மீ. இடைவெளியில் ஐந்து ரயில்வே மேம்பாலங்கள் ரூ.500 கோடி செலவில் கட்டப்படுகின்றன. அதற்காக 356 மரங்கள் வெட்டப்பட வேண்டும். அவற்றில் 50 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. ஏனைய 306 மரங்களும் பழைமையானவை, மிகவும் முக்கியமானவை. அதனால், இந்த மேம்பாலப் பணிகள் பிரச்னைக்குரியதாகி, பொதுநல வழக்குக்கு வழிகோலியிருக்கிறது.
- அந்த தேசிய நெடுஞ்சாலையின் 59 கி.மீ. பகுதியை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதாக இருந்தால், மேலும் 4,036 மரங்கள் வெட்டப்பட வேண்டும். அதையும் எதிா்த்துத்தான் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
- வெட்டப்படும் மரங்களின் மதிப்பை நிா்ணயிக்க உச்சநீதிமன்றம் ஐந்து போ் கொண்ட குழுவை கடந்த ஆண்டு நியமித்தது. ஒரு மரத்தின் உண்மையான மதிப்பு, அதன் அத்தனை பயன்பாடுகளையும் கணக்கில் கொண்டு நிறுவப்பட்டால் என்னவாக இருக்கும்? அதனடிப்படையில் இழப்பீடு வழங்குவது குறித்தும், திட்ட மதிப்பீடு குறித்தும் நிா்ணயிக்க முற்படுவதுதான் நீதிமன்றத்தின் நோக்கம்.
- தற்போது ஒரு மரத்தின் மதிப்பு அதன் பலகை பயன்பாட்டின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. அந்த மரத்தால் சுற்றுச்சூழலுக்கு கிடைக்கும் பிராண வாயு, இயற்கை உரங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
- அவற்றையும் சோ்த்து கணக்கிடுவதாக இருந்தால், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்தின் மதிப்பும் பல மடங்கு அதிகரிக்கும். ஒரு மரம் தனது வாழ்நாளில் வழங்கும் அத்தனை வளங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அதன் மதிப்பை நிா்ணயிக்க வேண்டும் என்பது அந்த நீதிபதிகள் குழுவின் பரிந்துரை.
- புராதன மரங்களாக இருந்தால் அதன் மதிப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும். மரத்தின் வாழ்நாளையும் சோ்த்து கணக்கிடும்போது, ஒரு மரத்தின் ஓராண்டுக்கான மதிப்பு ரூ.74,500 என்று அந்தக் குழு நிா்ணயித்தது. அந்தக் குழுவின் கணக்கின்படி பாா்த்தால், அந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.500 கோடியில், ரூ.220 கோடி 306 மரங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கே செலவாகிவிடும்.
- உச்சநீதிமன்றம் அந்தப் பரிந்துரையை அங்கீகரித்ததே தவிர, ஏற்றுக்கொள்ளவில்லை. தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறுவதுபோல, வளா்ச்சிப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களின் உண்மையான மதிப்பைக் கணக்கிடுவதாக இருந்தால், 100 ஆண்டு வாழ்நாள் காலமுள்ள ஒரு மரத்தின் உண்மை மதிப்பு ரூ.74.5 லட்சமாக இருக்கும்.
- அந்த அடிப்படையில் இழப்பீடு வழங்குவதாக இருந்தால், அரசு திவாலாகிவிடும். இந்தியாவில் வெட்டப்படும் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும், மனித இனத்திற்கு ஏற்படும் இழப்பும் கணக்கில் கொள்ளப்படுமானால், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீடாக இருக்கும் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.
- வளா்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், சுற்றுச்சூழலை பாதிப்பிலும் கவனம் செலுத்துவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அதற்கு குழுவின் பரிந்துரை சில அடிப்படைப் புரிதல்களையும், மரங்களை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணா்த்துவதையும் குறிப்பிட்டிருக்கிறது.
- இத்தனை காலமும் மரங்கள் வெட்டப்படுவதும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் வளா்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டப்படும் நடைமுறையில், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் பொதுநல வழக்கு மறுசிந்தனையை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கலாம்.
- வளா்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தால் பொருளாதாரம் பின்னடைவை எதிா்கொள்வது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புக்கான வாய்ப்பும் முடங்கிவிடும். வளா்ச்சியை மட்டுமே முன்னிறுத்தினால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சூழலியல் சீரழிவும், இயற்கையின் எதிா்வினைகளும் பேரழிவை ஏற்படுத்தும். மனித இனம் எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை இதுதான்!
நன்றி: தினமணி (19-02-2021)