TNPSC Thervupettagam

விடை சொல்லாத இடைத்தோ்தல்

September 13 , 2023 355 days 205 0
  • தலைநகா் தில்லியில் பிரம்மாண்டமாக நடந்த ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவின் ஏனைய பிரச்னைகளையும், நிகழ்வுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சமீபத்தில் வெவ்வேறு மாநிலங்களில் நடந்த ஏழு சட்டப்பேரவை இடைத்தோ்தல்களும் அதில் அடங்கும். அடுத்த சில மாதங்களில் ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல்களும், அடுத்த ஆண்டு மக்களவைக்கான பொதுத் தோ்தலும் வரவிருக்கும் நிலையில், ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
  • மும்பையில் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தங்களது கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயா் சூட்டியதைத் தொடா்ந்து நடைபெற்ற இடைத்தோ்தல்கள் இவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றும் எதிா்க்கட்சிகளின் முனைப்புக்கு முதல் கட்ட சோதனை முயற்சியாக நடந்து முடிந்த இடைத்தோ்தல் முடிவுகளைக் கருத முடியாது. ஏனென்றால், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில், மும்பையில் வெளிப்படுத்திய ஒற்றுமையை இந்தியா கூட்டணியால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனாலும்கூட, திரிபுராவிலும், உத்தர பிரதேசத்திலும் அந்த ஒற்றுமை களம் கண்டது.
  • ஆறு மாநிலங்களில் ஏழு சட்டப்பேரவைகளுக்கான இடைத்தோ்தலில் மூன்றை பாஜகவும், நான்கை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் வென்றிருக்கின்றன. இடைத் தோ்தல் முடிவுகளிலிருந்து எந்தவொரு தெளிவான அரசியல் அறிகுறியையும் காண முடியவில்லை என்றாலும், எதிர்க்கட்சி ஒற்றுமை சாத்தியமானால் மட்டுமே பாஜகவை தேசிய அளவில் எதிர்கொள்ள முடியும் என்பதற்கான சமிக்ஞை தெரிகிறது.
  • மாநிலத்துக்கு மாநிலம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பாஜகவை எதிர்கொள்ள வெவ்வேறு உத்திகளைக் கையாள வேண்டும் என்பதை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏழில் நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெற்றியடைந்தன என்றாலும், அவற்றில் இரண்டு தொகுதிகளில் தங்களது கூட்டணியில் இடம் பெறும் கட்சியையே தோற்கடித்திருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • நடந்து முடிந்த இடைத்தோ்தல்களில் முக்கியமானதும், குறிப்பிடத்தக்கதும் உத்தர பிரதேச மாநிலத்தின் கோசி தொகுதிக்கான இடைத்தோ்தல். பாஜகவின் தாராசிங் சௌஹான், சமாஜவாதி கட்சி வேட்பாளா் சுதாகா் சிங்கிடம் தோல்வியைத் தழுவியது எதிர்பாராத திருப்பம். அடிக்கடி கட்சி மாறும் தாராசிங் சௌஹானுக்கு மக்கள் வழங்கியிருக்கும் தண்டனை என்றுகூட தோ்தல் முடிவைக் குறிப்பிடலாம். பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பாஜகவுக்கும், பாஜகவிலிருந்து சமாஜவாதி கட்சிக்கும், அதிலிருந்து மீண்டும் பாஜகவுக்கும் தொடா்ந்து கட்சி மாறிக்கொண்டிருந்தவா் சௌஹான்.
  • சமாஜவாதி கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தாராசிங் சௌஹான், பாஜகவில் மீண்டும் இணைந்ததைத் தொடா்ந்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து இடைத்தோ்தலுக்கு வழிகோலினார். 2022 சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி வேட்பாளராக 1,08,430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தாராசிங் சௌஹான், இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக 81,686 வாக்குகள்தான் பெற முடிந்திருக்கிறது. கடந்த ஆண்டு 22,216 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா், இப்போது 42,759 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
  • ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கோசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்.எல்.), பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கணிசமான செல்வாக்குப் பெற்றவை. கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் வாசிம் எக்பால், 53,953 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த முறை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை வேட்பாளா்களை நிறுத்தாமல், சமாஜவாதி கட்சிக்கும், பாஜகவுக்குமான நேரடிப் போட்டியாக கோசி இடைத்தோ்தலை மாற்றின. அதன் விளைவு, சமாஜவாதி கட்சியால் பாஜகவை வீழ்த்த முடிந்திருக்கிறது.
  • உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வா், திரிபுராவில் உள்ள போக்ஸா நகா், தன்பூா் தொகுதிகளில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியிலும் ஆளும் ஜேஎம்எம் வெற்றி பெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தின் துக்புரி தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எதிா்க்கட்சியான பாஜகவை மட்டுமல்லாமல், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி வேட்பாளரையும் தோற்கடித்திருக்கிறது.
  • கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதி இடைத்தோ்தலில் எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், மறைந்த முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் மகனுமான சாண்டி உம்மன் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றிருக்கிறார். 53 ஆண்டுகளாக உம்மன் சாண்டியைத் தோ்ந்தெடுத்த தொகுதியில், அவரது மகன் வெற்றி பெற்றிருப்பது அனுதாப அலையினால் மட்டுமே அல்ல. முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியின் மீதான அதிருப்தியும் சோ்ந்து கொண்டதால், உம்மன் சாண்டி பெற்றதைவிட அதிக வாக்குகள் பெற்று அவரது மகனால் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.
  • எதிர்க்கட்சிகள் தங்களது ‘இந்தியா’ கூட்டணியில் எப்படி முழுமையான ஒற்றுமையை ஏற்படுத்தப் போகின்றன என்பதைப் பொறுத்து, 2024 மக்களவைத் தோ்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்த முடியும் என்பதைத்தான் இடைத்தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நன்றி: தினமணி (13 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories