TNPSC Thervupettagam

விண்வெளிப் பயண ஒத்திகை: இந்தியாவின் கனவு என்ன?

November 11 , 2024 13 days 119 0

விண்வெளிப் பயண ஒத்திகை: இந்தியாவின் கனவு என்ன?

  • இந்தியாவின் முதல் ‘அனலாக் விண்வெளிப் பயணத்​’துக்கான ஏற்பாடுகள், லே நகரின் அருகே லடாக்கில் நிறுவப்​பட்டு​வரும் விண்வெளிப் பயண ஒத்திகை நிலையத்தில் தொடங்​கப்​பட​விருக்​கின்றன. இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயண மையம், விண்வெளிக் கட்டிடக் கலை நிறுவனம், ஆகா விண்வெளி ஸ்டுடியோ (Aaka Space Studio), லடாக் பல்கலைக்​கழகம், மும்பை ஐஐடி, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஒத்திகை நிலையத்தை உருவாக்​கிவரு​கின்​றன.

அனலாக் விண்வெளிப் பயணம் என்றால்?

  • ரயிலில் சில நாள்கள் பயணம் செய்யும்போது நமக்கு வேண்டிய உணவு முதலிய​வற்றை எடுத்துச் சென்றாலும், இடையே அத்தி​யா​வசியமாக ஏதாவது தேவை ஏற்பட்டால் வழியில் ரயில் நிலையத்தில் வாங்கிக்​கொள்ள முடியும். ஆனால், ஒரு சில வாரங்கள் செல்லும் நிலவுப் பயணமாக இருந்​தாலும் சரி, குறைந்​த​பட்சம் 400 முதல் 750 நாள்கள் ஆகும் செவ்வாய்ப் பயணமாக இருந்​தாலும் சரி, இடையே எந்தத் தேவைக்கும் பூமியை நம்பி​யிருக்க முடியாது. வெறும் தகவல் தொடர்பு மட்டுமே பூமியோடு சாத்தியம்.
  • குழந்தைகள் தங்களுக்குள் சிலரை ஆசிரியர்​களாக​வும், சிலரை மாணவர்​களாகவும் பாவித்து விளையாடு​வது​போன்றது ஒத்திகை மையம். விளையாட்டு போன்ற இந்த ஒத்திகை மூலம் இப்படிப்பட்ட பயணத்​தின்போது என்னென்ன சிக்கல்கள் ஏற்படலாம் என இனம் காண முடியும். சிக்கல்களை வரும்​முன்னே இனம் கண்டு தீர்வுகளை இனம் காணுவதுதான் ‘அனலாக் விண்வெளிப் பயணம்’ என்னும் விண்வெளிப் பயண ஒத்திகை.

ஒத்திகை எப்படி நடைபெறும்?

  • ஒத்திகை மையத்தில் ஒரு நபரோ பயணப் பணிக்​குழுவோ விண்கலம்போல வடிவமைக்​கப்பட்ட இடத்தின் உள்ளே நுழைவார்கள். அங்கே விண்கலத்தில் என்னென்ன வசதிகள் இருக்குமோ அவை மட்டுமே இருக்​கும். உணவு போன்ற​வற்றைப் பொதிந்து வைத்து​விடு​வார்கள். நீர் மறுசுழற்சி, காற்றி​லிருந்து கார்பன் டை ஆக்சைடை நீக்கி மறுபடி ஆக்ஸிஜன் செறிவு ஏற்றுவது போன்ற​வற்றுக்குப் பல கருவிகள் இருக்​கும்.
  • தொலைவு செல்லச்​செல்ல ரேடியோ அலைகள் பூமியை வந்தடைய நேரம் பிடிக்​கும். செவ்வாய்ப் பயணத்​தின்போது 15 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை நேரம் எடுக்​கும். இதன் உள்ளே செல்பவர்கள் தரைக்​கட்டுப்​பாட்டு மையத்​துடன் இதே தகவல் இடைவெளி​யில்தான் பேச முடிகிறபடி அமைக்​கப்​பட்​டிருக்​கும். அந்த நிலையத்தின் உள்ளே பதப்படுத்​தப்​பட்டுச் சேமிக்​கப்பட்ட உணவை மட்டுமே உண்ண முடியும்.
  • அதாவது, விண்வெளிப் பயணத்தில் ஏற்படும் அதே அனுபவங்கள் இந்த ஒத்தி​கையில் பெருமளவு செயல்​படுத்​தப்​படும். எடுத்​துக்​காட்டாக, இஸ்ரோவின் திட்டப்படி ஒரு நபர் 21 நாள்கள் லடாக்கில் அமையவிருக்கும் ஒத்திகை மையத்தில் தங்கி சோதனை மேற்கொள்​வார்.

ஏன் லடாக்?

  • லடாக் ஒரு குளிர் பாலைவனம். பெரும்​பாலும் மைனஸ் டிகிரி குளிர் நிலவும். செவ்வாய் கோளிலும் நிலவிலும் இதே போன்ற நிலைமை​தான். மேலும், லடாக்கின் புவியமைப்பும் நிலவு / செவ்வாய்க் கோளின் நிலப்​பரப்பை ஒத்துள்ளது. எனவே, அந்தக் கோள்களை ஆய்வுசெய்ய எடுத்​துச்​செல்லும் கருவிகளை முதலில் இங்கே சோதனை செய்து மேம்படுத்த முடியும். மேலும், விண்வெளியில் தனிமை​யில்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும்; லடாக்கில் மக்கள்தொகை சொற்பம் என்பதால் ஒத்தி​கைக்குத் தேவையான தனிமைச் சூழல் இருக்​கும்.

ஒத்திகைப் பயணம் ஏன் அவசியம்?

  • இதுவரை இஸ்ரோ செயற்​கைக்​கோள்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்​பியது. சமீப காலமாக மற்ற கோள்களுக்கு விண்கலங்களை அனுப்பி வெற்றி கண்டுள்ளது. ஆனால், ககன்யான் திட்டத்தின் மூலமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்ட​மிட்​டுள்ளது. மேலும், மனிதர்கள் தங்கி ஆய்வுசெய்ய விண்வெளி ஆய்வு மையம், நிலவில் ஆய்வு மையம் எனப் பல எதிர்​காலத் திட்டங்களை இஸ்ரோ வைத்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இதுபோன்ற ஒத்திகை சோதனைகள் அவசியம்.
  • சமீபத்​தில், 2019இல் நாசாவும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் இணைந்து இரண்டு வார கால நிலவுப் பயண ஒத்திகையை நடத்திப் பார்த்தன. இந்த ஒத்திகைப் பயணம் தொடங்கிய இரண்டாம் நாளே குடிநீர் அளவு அபாயகர​மாகக் குறைந்​து​போனது. அதுபோன்ற எதிர்​பாராச் சிக்கல் வந்தால் எப்படி அணுகுவது என இதுபோன்ற ஒத்திகைப் பயணங்கள் நமக்கு வழிகாட்டும்.

மற்ற ஒத்திகை மையங்கள்:

  • உலகிலேயே முதல் ஒத்திகை மையத்தை 1972இல் சோவியத் யூனியன் சைபீரி​யாவில் நிறுவியது. சுமார் 10 ஒத்தி​கைகள் இதில் மேற்கொள்​ளப்​பட்டன. அதில் ஒன்று, 180 நாள்கள் நீண்ட ஒத்திகை. BIOS-3 எனும் இந்த ஒத்திகை ஆய்வுகள் மூலம் அந்த நேரத்தில் இருந்த தொழில்​நுட்​பங்​களைப் பயன்படுத்தி, 99% காற்றை​யும், 85% தண்ணீரை​யும், தோராயமாக 50% உணவு - ஊட்டச்​சத்து​களையும் மறுசுழற்சி செய்ய முடிந்தது.
  • அதன் பின்னர் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம், சீனா இதே போன்ற ஒத்திகை நிலையங்களை ஏற்படுத்​தி​யுள்ளன. 520 நாள்கள் நீடித்த ரஷ்யாவின் ‘மார்ஸ் 500’ என்னும் ஒத்திகைதான் இதுவரை நடத்தப்​பட்​டுள்ள ஒத்திகை ஆய்வு​களில் மிக நீண்டதும், தொடர் தனிமை கொண்டதுமான ஆய்வு. ரஷ்யா, சீனா, இத்தாலி, கொலம்​பியா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு நபர்கள் ஒன்றுசேர்ந்து இந்த ஒத்திகை நிலையத்தில் வாழ்ந்து சாதனை புரிந்​துள்ளனர்.

எப்போது லடாக்கில் ஒத்திகைப் பயணம்

  • ஹெச்.ஏ.பி.-1 எனும் விண்வெளிப் பயண ஒத்திகை நிலையத்தில் ஒரு நபர் மட்டுமே வாழ முடியும். இதில் படுக்க இடம், சமைக்க இடம், கழிப்பறை, நீர், காற்று போன்ற​வற்றை மறுசுழற்சி செய்யக் கருவிகள் இருக்கும் என விண்வெளிக் கட்டிடக் கலை நிறுவனம், ஆகா ஸ்பேஸ் ஸ்டுடியோ தரவுகள் தெரிவிக்​கின்றன.
  • ஆனால், இந்த ஒத்திகை எப்போது தொடங்​கும், இந்த ஒத்திகைப் பயணத்தை யார் மேற்கொள்​வார்கள் என்பது போன்ற விவரங்களை இஸ்ரோ இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிட​வில்லை. எதிர்​காலத்தில் இந்தியா​வுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான நிஜப் பயணம் நிகழ்​வதற்கான தொடக்​கப்​புள்​ளியாக இந்த ஒத்திகை ஆக வேண்​டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories