TNPSC Thervupettagam

விண்வெளியில் வேலைவாய்ப்பு

October 7 , 2023 462 days 333 0
  • செயற்கைக்கோள்களின் தகவல் தொடா்பு பின்னலில் பூமி நம் உள்ளங்கைப் பந்தாகி விட்டது. தற்போது மொத்தம் 7,702 செயற்கைக்கோள்கள் பூமியைச்சுற்றி வருகின்றன. அவற்றின் பயன்பாடுகள் தகவல் தொடா்பு (3135), புவி கண்காணிப்பு (1052), தொழில்நுட்ப வளா்ச்சி (383), பயண வழிகாட்டுதல் (154), விண்வெளி அறிவியல் (108) - என்றவாறு கடந்த 66 ஆண்டுகளாக மனித குலத்திற்கு உதவி வருகின்றன.
  • அமெரிக்கா (2926), சீனா (493), ஐக்கிய குடியரசு (450), ரஷியா (167), ஜப்பான் (90), ஐரோப்பா (62), இந்தியா (58), கனடா (52), ஜொ்மனி (44), பன்னாட்டுச் செயற்கைக்கோள்கள் (61) என்றவாறு இந்த நாடுகள் நீண்ட காலமாக விண்வெளியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இவை பல வணிக செயற்கைக்கோள் நிறுவனங்களின் தாயகமாக இருப்பதால் இது குறித்து வியப்படையத் தேவையில்லை.
  • ஆனால், 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வெறும் 14 நாடுகள் மட்டுமே செயற்கைக் கோள்களை இயக்கி வந்தன. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் 91 புதிய விண்வெளிப் பயண நாடுகளின் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகினறன.
  • இந்தப் பயணம், 1957 அக்டோபா் 4- இல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1-ஐ ரஷியா செலுத்தியது முதல் தொடங்கியது. 1967 அக்டோபா் 10 அன்று ‘புற விண்வெளி அமைதி உடன்படிக்கை’ செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.
  • அதனால்தான் அக்டோபா் 4 முதல் 10 வரையிலான ஒரு வாரம் ‘உலக விண்வெளி வாரமாக’ கொண்டாடப் படும் என்று 1999- ஆம் ஆண்டு ஐ. நா. சபை அதிகாரபூா்வமாக அறிவித்தது.
  • வளா்ந்து வரும் விண்வெளித் துறையின் வணிக முக்கியத்துவத்தையும், தொழில் முனைவோருக்கான அதிகரித்துவரும் வாய்ப்புகளையும், நன்மைகளையும் முன்னிலைப் படுத்தும் வகையில் ‘உலக விண்வெளி வாரக் கழக வாரியம்’ அறிவித்துள்ள இந்த ஆண்டுக்கான கருப்பொருள், ‘விண்வெளியும் தொழில் முனைவோரும்’ என்பதாகும்.
  • உலக நாடுகள் செயற்கைக்கோள்களைக் குறைந்த எடையில் திறன்மிக்கதாகக் குறும் படிவத்தில் உலக நாடுகளும் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றுள் 10-100 கிலோ நுண் செயற்கைக்கோள், 1-10 கிலோ ‘நானோ’ செயற்கைக்கோள், 1 கிலோவிற்கும் குறைவான ‘பிக்கோ’ செயற்கைக்கோள் போன்று தயாரிப்பதால், விண்வெளிச் செலவுகள் குறைந்து வருகின்றன.
  • கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளால் ஏவுகலன்களைச் செலுத்துவற்கான செலவும் குறைகிறது. அமெரிக்காவில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ போன்ற நிறுவனங்கள் மீள் பயன்பாட்டுக்குரிய ராக்கெட்டுகளை உருவாக்குகின்றன. அதனால் ஒருமுறை பயன்படுத்திய பிறகு 3 கோடி டாலா் செலவில் தயாரித்த உபகரணங்கள் துருப்பிடித்து வீணாவது இல்லை.
  • ‘ஸ்பேஸ் எக்ஸ்’ சமீபத்தில் 13-ஆவது முறையாக அதே முதல் நிலை உந்தும ஊக்கிக் கட்டத்தினை மீண்டும் பயன்படுத்தியது ஒரு சாதனை தான். மறைமுகமாக இது மிகப்பெரும் பொருளாதாரச் சிக்கனத்தையும் ஏற்படுத்துகிறது. உள்ளபடியே ஆளற்ற செயற்கைக்கோள் ஏவும் திட்டங்களில் மீள் பயன்பாட்டு ஏவுகலன்கள் வா்த்தக ரீதியில் லாபகரமானவை.
  • புவி சுற்றி வரும் விண்வெளி நிலையங்களில் வளரும் தாவரங்களும், பயிர்களும் வேளாண்மையில் புதுமைகள் விளைவிக்கலாம். புவி சுற்றுப்பாதையில் நிறையீா்ப்பு குறைந்த விண்வெளியில் பொருட்கள் உற்பத்தி சில அதிசயங்களை நிகழ்த்தலாம்.
  • வணிகப் பயன்பாட்டுக்கு உரிய தொலைநிலை உணா்வு, தகவல் தொடா்புச் செயற்கைக் கோள்கள் பொருளாதாரம் பெருக்க வல்லவை.
  • 1970-களில் இருந்து செயற்கைக்கோள் தொலைக்காட்சியுடன் வணிகத் தளத்தின் வடிவங்கள் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும், விண்வெளியானது அரசின் களமாகவே கருதப்பட்டது. தென் கொரியா போன்ற நாடுகள் பல்கலைக்கழகங்கள் வழி போதிய பயிற்சி பெற்று விண்வெளித் தொழில்நுட்பத் திறமையினை மேம்படுத்திச் சொந்தமாக விண்வெளி வாணிபத்தில் ஈடுபட விழைகின்றன.
  • இது தவிரவும், மனிதா்களை விண்வெளிச்சுற்றுலா அழைத்துச் செல்வது வாடிக்கையாகவும் வர வாய்ப்பு உள்ளது. தொடக்கத்தில் இதற்கான கட்டணம் பயணியின் உடல் எடைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் ஏற்ப வேறுபடும்.
  • 1960-களில் விண்வெளிப் பந்தயம் தொடங்கியது. தாழ்புவி சுற்றுப்பாதைக்கு ஒரு கிலோ உண்வுப் பண்டம் எடுத்துச் செல்ல ஒரு லட்சம் டாலா் (ஏறத்தாழ 83 கோடி ரூபாய்) செலவாகும்.
  • இதே கணக்கில் 2023 ஏப்ரலில் எலோன் மஸ்க் என்பவரின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’, ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ ஆகிய திட்டங்களில் சா்வதேச விண்வெளி நிலையம் செல்ல வாடிக்கையாளா் மூவருக்கு எட்டு நாள் பயணத்திற்காக ஐந்தரை கோடி டாலா் கட்டணம் வசூலிக்கப்பட்டதாம்.
  • சில விண்வெளி சுற்றுலா ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் சந்திரனுக்குச் செல்வதற்கான செலவை அறிவித்துள்ளன. நிலாவிற்கு அருகில் அதன் சுற்றுப்பாதையில் வட்டமடித்துத் திரும்புவதற்கு ஒரு இருக்கைக்கு 15 கோடி டாலா். இது பல மாத விண்வெளிப் பயிற்சியை உள்ளடக்கிய கட்டணம்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, 2030-இல் தாழ்புவி சுற்றுப்பாதைக்குச் செல்ல ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.6 கோடியாக இருக்கும்.
  • உலகளாவிய செயற்கைக்கோள் தகவல்தொடா்பு, உண்மையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாட்டின் வெளிப்பாடாக அமையும். தொலைநிலைக் கல்வி, தொலைநிலை மருத்துவம் போன்ற பலவற்றை மேற்கொள்ள முடியும்.
  • உலக விண்வெளி வாரம், அறிவியல்-தொழில்நுட்பம்-பொறியியல்-கணிதவியல் ஆகியவற்றுடன் வணிகமும் படிக்க உலகளாவிய மாணவா்களை ஊக்குவிக்கும். மேலும் விரிவடைந்து வரும் வணிக விண்வெளித் துறையின் வேலை வாய்ப்புகளையும் பெருக்கும்.
  • நம் நாட்டிலும் மாணவா்களால் தயாரிக்கப்பட்ட, ‘அணு சாட்’, ‘ஸ்டூட் சாட்’, ‘யூத் சாட்’ ‘ஜூக்னு’, ‘எஸ்.ஆா்.எம். சாட்’, ’சத்யபாமா சாட்’, ‘ஸ்வயம்’, ‘ப்ரதம்’, ‘பைசாட்’, ‘என்.ஐ.யு.சாட்’, ‘கலாம் சாட்’ போன்ற சிறு செயற்கைக்கோள்கள் இந்திய விண்வெளித்துறையின் ஒத்துழைப்புடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
  • விண்வெளித் தொழில் முனைவோர்க்கான நிறுவனங்களை மூன்று விதமாகப் பார்க்கலாம். முதலாவது செயற்கைக்கோள்களையும், அவற்றைச் சுமந்து செலுத்தும் ஏவுகலன்களையும் சொத்துகளாகக் கொண்ட நிறுவனம். இரண்டாவது, செயற்கைக்கோளைக் கண்காணித்து இயக்கும் நிபுணா்களைக் கொண்ட செயற்கைக்கோள் கட்டுப்பாட்டுப் புவிநிலையம் போன்ற நிறுவனம்.
  • இது விண்வெளி வா்த்தகத்தில் செயல்படும் வாடிக்கையாளா்களை நேரடியாகவும் கணிசமாகவும் சார்ந்து இருக்கும். மூன்றாவது, விண்வெளி சேவைகளின் தரவுகளை நேரடியாகச் சார்ந்திருக்கும் நிறுவனம். அதாவது செயற்கைக்கோள் அனுப்பும் எண்மவியல் தரவுகளை அலசி ஆராய்ந்து, பகுப்பாய்வு செய்து, பிம்பங்களாகவும், வரைபடங்களாகவும் வழங்கும்.
  • ஆயினும், உந்துகலன்களின் கனரக பாகங்கள், எரிபொருள்கள், கணினி மென்பொருள்கள் போன்ற சிறப்புக் கூறுகளின் தரக்கட்டுப்பாடு, நம்பத்தன்மை, பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் மேற்பார்வை சில இடங்களில் தேவைப்படும்.
  • 2021-ஆம் ஆண்டில், இந்திய விண்வெளித் துறையை தனியார் துறைகளும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தொடங்கும் வகையில் ‘இந்தியன் ஸ்பேஸ் அசோசியேஷன்’ அறிமுகமானது. ‘லார்சன் அண்ட் டூப்ரோ’, ‘நெல்கோ’ (டாடா குழுமம்), ‘ஒன்வெப்’, ‘வால்சந்த் நகா் இண்டஸ்ட்ரீஸ்’ போன்ற தனியார் நிறுவனங்கள் இந்த அமைப்பின் உறுப்பினா்களாக உள்ளன.
  • அத்துடன், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’, ‘டேட்டா பேட்டா்ன்ஸ் (இந்தியா) லிமிடெட்’, ‘ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்’, ‘கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ்’, ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ போன்ற பெருநிறுவனங்களும், ‘அக்னிகுல் காஸ்மோஸ்’, ‘பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்’, ‘துருவா ஸ்பேஸ்’, ‘ஸ்பேஸ் ஓவா் கார்ப்’, ‘பிக்சல்’, ‘சாட்டிலைஸ்’, ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’, ‘மனஸ்து ஸ்பேஸ்’, ‘எரிஷா ஸ்பேஸ்’ போன்ற தொடக்க நிறுவனங்களும் குறிப்பிடத்தக்கவை.
  • இந்தியாவைத் தவிர ஏனைய விண்வெளி நாடுகள், ‘நாசா’ எனப்படும் ‘நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’, ஐரோப்பிய விண்வெளி முகமை, ‘ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகமை’, ரஷியக் கூட்டமைப்பின் மாநில நிறுவனமாக ‘ரோஸ்கோஸ்மோஸ்’, சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம்’ எனப்பல்வேறு விண்வெளி முகமைகளையே இயக்கி வருகின்றன.
  • இந்தியாவும் 2023 ஜூலை 30 வரை, 34 நாடுகளின் மொத்தம் 431 அயல்நாட்டுச் செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருவாய் ஈட்டி வருகிறது. இந்தியாவின் விண்வெளித் தொழில்துறையில் 500-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், 45,000-க்கும் அதிகமான பணியாளா்களும் உள்ளனா்.
  • 2019-ஆம் ஆண்டில், இந்தியாவின் விண்வெளித் துறை 700 கோடி டாலா் (உலகளாவிய விண்வெளித் துறையில் 2% ) அளவு வா்த்தகத்தில் ஈடுபட்டது. 2024- ஆம் ஆண்டுக்குள் வா்த்தகம் 5,000 கோடியாகும் என்று எதிர்பார்க்கிறது.
  • மார்க் வில்லியம்ஸன் என்கிற விண்வெளி பொருளாதார நிபுணா், ‘ஸ்பேஸ் அண்ட் கம்யூனிகேஷன்’ என்ற அறிவியல் இதழில் ‘அடுத்த ஐந்தாண்டுகளில் தற்போதைய விண்வெளி வணிக நாடுகளுடன் வா்த்தக ரீதியில் போட்டியிடும் அளவுக்கு இந்தியா முன்னேறி விடும் என்பது உண்மை.
  • இல்லையென்றலும் மேலை நாட்டு விண்வெளி உற்பத்தியாளா்கள் அலட்சிப்படுத்துகிற அல்லது விலை அதிகப்படுத்தி விட்ட செயற்கைக்கோள் நுட்பங்கள் பலவற்றையும் மூன்றாம் உலக நாடுகளுக்கு அல்லது வளா்ந்து வரும் நாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்ய முயலும் என்று எதிர்பார்க்கலாம்’ என (செப்டம்பா்-அக்டோபா் 1996) கணித்துரைத்தார் (செப். அக். 1996). அவரது அன்றைய கணிப்பு இன்று ஈடேறி வருகிறது எனலாம்.
  • அக். 4 - 10 உலக விண்வெளி வாரம்.

நன்றி: தினமணி (07 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories