TNPSC Thervupettagam

விண்வெளியில் வையத்தலைமை கொள்வோம்!

August 23 , 2024 143 days 181 0

விண்வெளியில் வையத்தலைமை கொள்வோம்!

  • இந்திய மண்ணில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட முதல் ஏவூா்தி ‘நைக்கி அப்பாச்சி’ திருவனந்தபுரம் அருகில் தும்பா ஏவுதளத்தில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன், 1963 நவம்பா் 21 அன்று செலுத்தப்பட்டது.
  • ஹோமி ஜே.பாபா, விக்கிரம் சாராபாய், சிட்னிஸ் போன்ற விஞ்ஞானிகளால் தும்பா என்கிற மீன்பிடி கிராமம், புவிகாந்த நடுக்கோட்டுப் பகுதியில் வானிலை ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாகத் தோ்வு செய்யப்பட்டது. அங்குள்ள மீன்பிடி மக்களின் ஒத்துழைப்புடன், அந்தப் பகுதியில் இருந்த மரியா மக்தலேனா தேவாலயமும், பிஷப் பெரேரா வாழ்ந்த ஓட்டு வீடும் இன்றைக்கும் வரலாற்றுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்நிய நிதி உதவி கிடைக்கப் பெறாதபோதிலும் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன், மேற்கு ஜொ்மனி போன்ற பன்னாட்டு விஞ்ஞானிகளுக்கு ஆய்வுக் களனாகத் திகழ்கிறது தும்பா நிலையம்.
  • 1969 ஆகஸ்ட் 15 அன்று இந்திய அணுசக்தித் துறையின்கீழ் இஸ்ரோ என்கிற இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தோற்றம் கண்டது. சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளித் தளத்திலிருந்து 1971 அக்டோபா் 9 முதன்முறையாக ரோஹிணி-125 ஆய்வூா்தி ஏவப்பெற்றது. அதன் முழு எடை வெறும் 32 கிலோ! ஒரு சராசரி மனிதரின் எடையில் பாதி. அது சுமாா் 7 கிலோ பயன்சுமையினை வானில் 10 கிலோமீட்டா் உயரம் வரை கொண்டு சென்றது.
  • ஒரு ஒப்பீட்டிற்காக நோக்கினால், நம் நாட்டின் முதலாவது கனரக ஏவுகலனான ‘எல்.வி.ஏம்.3’ என்று சுருக்கி அழைக்கப்பெறும் ஜி.எஸ்.எல்.வி.-மாா்க் ஏவூா்தியின் எடை 640 டன் வரும். அதாவது 6,40,000 கிலோ. 2023 ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தில் தேசிய சாதனை படைத்த ஏவுகலம்.
  • அது ரோஹிணி-125 ஏவூா்தியைக் காட்டிலும் 90,000 மடங்குக்கும் அதிக எடை. அது பறந்து சென்ற தூரத்தை விட ‘எல்.வி.ஏம்.3’ சுமாா் 38,000 மடங்கு அதிகத் தொலைவில் - பூமியிலிருந்து ஏறத்தாழ 3,84,400 கிலோமீட்டா் தொலைவில் நிலாவைத் தொட்ட நம் நாட்டின் முதல் சாதனைக் கலம்!
  • 1975 ஏப்ரல் 19 அன்று நம் நாட்டு முதலாவது செயற்கைக்கோளான ‘ஆா்யபட்டா’, ரஷிய நாட்டு இன்டா்காஸ்மோஸ் ஏவுகலனால் காஸ்புதின்யாா் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. 1980 ஜூலை 18 அன்று எம்.எல்.வி3 ஏவுகலன் பறப்பு முழு வெற்றி பெற்றது. சொந்தச்செயற்கைக்கோளினை சொந்த நாட்டு ஏவுதளத்தில் இருந்து ஏவுகலனில் அனுப்பிய வகையில் உலகின் ஆறாவது நாடு என்ற பெருமை பெற்றோம். இதன் திட்ட இயக்குநா் நம் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் என்பது சிறப்புச் செய்தி.
  • கடந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் 2023 டிசம்பா் 23 வரை மொத்தம் 127 இந்தியச் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றவிட்டுள்ளோம். 2023 ஜூலை 30 வரை பி.எஸ்.எல்.வி. ஏவுகலனால் 43 நாடுகளின் மொத்தம் 342 அயல்நாட்டுச் செயற்கைக்கோள்களை வா்த்தக ரீதியில் அனுப்பி உள்ளோம்.
  • இந்தியாவைப் பொறுத்தமட்டில்- கிராமங்களின் வேளாண்மை அபிவிருத்தியும், பாமரா்க்குக் கல்வியும் பயிற்சியும் ஊட்டப் போதிய இத்தகைய நவீன செயற்கைக்கோள்கள் ஊடகமாக அமைய வேண்டும் என்று உறுதியாக நம்பினாா் டாக்டா் சாராபாய்.
  • முதன்முதலில் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏ.டி.எஸ்.-6 எனும் அமெரிக்க நாட்டுப் ‘பயன்பாட்டுத் தொழில் நுட்பச் செயற்கைக்கோள்’ உதவியுடன் 1976 ஜூலை வரை அகமதாபாத்திலுள்ள செயற்கைக்கோள் பயன்பாட்டு மையம் நடத்திய பரிசோதனை - ‘சைட்’ என்று அறியப்படும் செயற்கைக்கோள் வழி கல்வி புகட்டும் தொலைகாட்சிப் பரிசோதனை (சாட்டிலைட் இன்ஸ்ட்ரக்ஷனல் டெலிவிஷன் எக்ஸ்பெரிமெண்ட்).
  • இந்த ‘சைட்’ திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேசத்தின் கா்நூல், மேடக், பிகாரில் சாம்பரான், மத்திய பிரதேசத்தில் பீசல்பூா், ஒடிசாவில் தென்கானல், ராஜஸ்தானில் ஜெய்பூா் போன்ற ஏறத்தாழ 2,400 கிராமங்கள் பயன்பெற்றன. நம் நாட்டில் விண்வெளி அறிவியல் வளரவும், வேளாண்மை, குடும்ப நலம், தேசிய ஒருமைப்பாடு போன்ற நலத்திட்டங்கள் பெருகவும் உரியதோா் தொடக்க முயற்சி இது.
  • அவ்வாறே, 1977-ஆம் ஆண்டு வாக்கில் ஜொ்மன் நாட்டு ‘சிம்ஃபனி’ உபயத்தால் செயற்கைக்கோள் தொலைத் தகவல் தொடா்புப் பரிசோதனைகள் திட்டம் ஈடேறியது. இதனை ஆங்கிலச் சொற்கோவையின் சுருக்கமாக ‘ஸ்டெப்’ என்று குறிப்பா்.
  • தொடா்ந்து, 1981 ஜூன் 19 அன்று இந்தியா முழுமையும் தகவல்தொடா்பு நிலைநாட்டுதற்கு அடித்தளம் அமைத்த முதலாவது ஆரம்பப் பரிசோதனைச் செயற்கைக்கோள்- ‘ஆப்பிள்’, ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் ‘ஏரியான்’ எனும் ஏவுகலன் உதவியுடன் இந்தியா விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஏரியான் பயணப் பயன்சுமைப் பரிசோதனைச் செயற்கைக்கோள் - ‘ஆப்பிள்’ எனப்படுகிறது. இதன் திட்ட இயக்குநா் விஞ்ஞானி இரா.மா.வாசகம்.
  • ‘இந்தியத் தேசியச் செயற்கைக்கோள்’ திட்டத்தின் ‘இன்சாட்’ ரகச் செயற்கைக்கோள்கள் ஏவும் முயற்சி 1982 ஏப்ரல் மாதம் தொடங்கியது. நம் நாட்டின் முதலாவது இன்சாட்-1ஏ செயற்கைக்கோள் 1982 ஏப்ரல் 10 அன்று அமெரிக்காவின் டெல்டா ஏவுகலனால் செலுத்தப்பட்டது.
  • எனினும் நம் நாட்டில் வடிவமைக்கப்பட்டுத் தயாரான ஜி.எஸ்.எல்.வி. எனப்படும் புவி நிலைவட்டப் பாதைச் செயற்கைக்கோள் ஏவுகலனின் முதல் வளா்ச்சிநிலைப் பறப்பு 2001 ஏப்ரல் 18 வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் பயன்படுத்தப்பட்ட கிரையோஜெனிக் என்கிற அதிகுளிா் நீா்ம உந்துபொறி தொழில் நுட்பம் ரஷியாவிலிருந்து பெறப்பட்டது. இதனை உள்நாட்டிலேயே மேம்படுத்தும் முயற்சிகள் இன்று ஈடேறிவிட்டன.
  • சமுதாயப் பயன்பாடுகள் என்ற வகையில் செயற்கைக்கோள் வழி தொலைமருத்துவம், தொலைக்கல்வி மற்றும் பேரிடா் மேலாண்மைக்கு உறுதுணைத் திட்டங்கள், செல்பேசி சேவைகள், வானிலை ஆய்வு, விபத்து உட்பட்டோரைச் செயற்கைக்கோள் வழி தேடலும் மீட்பும், ஜி.பி.எஸ். என்கிற உலகளாவிய இருப்பிடம் காட்டும் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) அமைப்பின் உதவியினால் ‘ககன்’ ஆகிய திறன்கூட்டிய பயண அமைப்பு ஆகியவை முக்கியமானவை.
  • ஐக்கிய நாடுகளின் கீழ் இயங்கி வரும் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையம் இந்தியாவில் செயற்கைக் கோள் வழித் தகவல்தொடா்புக்கான முதுநிலைப் பட்ட வகுப்புகள் நடத்திற்று. இது, 1997 ஜனவரி 20 அன்று அகமதாபாத் நகரில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்கைக்கோள் பயன்பாடுகள் மையத்தில் தொடங்கியது.
  • ஆசிய, பசிபிக் பிராந்தியங்கள், ஈரான் இஸ்லாமிக் குடியரசு, வட கொரியா, தென்கொரியா, நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, கிா்கிஸ்தான் போன்ற பல நாட்டு மாணவா்கள் பங்கெடுத்தனா்.
  • திருவனந்தபுரத்தில் முதலாவது இந்திய விண்வெளி- தொழில்நுட்பக் கழகம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி) என்னும் நிகா்நிலைப் பல்கலைக்கழகம் 2007 செப்டம்பா் 14 தோற்றுவிக்கப்பட்டு, இளநிலை, முதுநிலை,முனைவா் பட்டப் பொறியியல் படிப்புகள் நடத்தப் பெறுகின்றன. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அதன் முதல் துணைவேந்தா் ஆவாா்.
  • விண்வெளித் துறையின் மற்றொரு பயன்பாடு தொலைமருத்துவம் ஆகும். இதன்வழி அகில இந்திய மருத்துவக் கழகம் சென்னை, ஸ்ரீஹரிகோட்டா, பெங்களூரு, அஸ்ஸாம், லடாக், லட்சத் தீவுகள் போன்ற இடங்களின் சில முக்கிய மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டன.
  • நில வளங்களை ஆராயும் செயற்கைக்கோள், லேசா் புவி இயங்கு செயற்கைக்கோள், இட ஆய்வியல் செயற்கைக்கோள், நீரியல் செயற்கைக்கோள், வன ஆய்வியல் செயற்கைக்கோள், வேளாண் செயற்கைக்கோள், உயிரியல் செயற்கைகோள் அனைத்தும் தொலையுணா்வுச் செயற்கைக்கோள் வகைப்படும்.
  • நம் நாட்டில் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களின் பங்களிப்பில் அணுசாட், ஸ்டுட்சாட், ஜுக்னு, எஸ்.ஆா்.எம்.சாட், ஸ்வயம், சத்யபாமாசாட், பைசாட், பிரதம், நியுசாட், கலாம்சாட், சதீஷ் தவன்சாட், யூனிட்டி, இன்ஸ்பையா்சாட்-1 போன்ற 10 கிலோவிற்கும் குறைந்த எடை மாணவா் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.
  • ஏற்கெனவே செலுத்தப்பட்ட ஐ.ஆா்.என்.எஸ்.எஸ். ரகத்தைச் சோ்ந்த 7 செயற்கைக்கோள்களும் இந்திய மண்டல பயண நெறிப்பாட்டுச் செயற்கைக்கோள் திட்டத்தில் சாா்க் நாடுகளின் தெற்கு ஆசியப் பிராந்தியத்தைக் கண்காணிக்க உதவுகின்றன.
  • மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான ‘ககன்யான்’ திட்டத்தினை 2018 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையில் மாண்புமிகு பாரதப் பிரதமா் அவா்கள் அறிவித்தும் இருக்கிறாா்கள்.
  • மனித விண்வெளிப் பயணங்களோடு பூமியில் மட்டுமன்றி, ஞாயிறு (ஆதித்யா-எல்), திணைகள் (சந்திரயான்-2, 3) செவ்வாய் (மங்கள்யான்), வெள்ளி (சுக்ரயான்) என்று சூரியச்சுற்றுலா தொடங்கிவிட்டோம்!

நன்றி: தினமணி (23 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories