TNPSC Thervupettagam

விதிமுறைகள் – ஊடகம்

April 8 , 2019 2090 days 1364 0
  • முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), சுட்டுரை (டுவிட்டர்) ஆகியவற்றின் மூலம் மின்னல் வேகத்தில் தகவல்கள் சர்வதேச அளவில் பரப்பப்படுவது மனித இனத்திற்கு அறிவியல் தந்திருப்பதை மாபெரும் வரம் என்று சொல்வதா? அல்லது அவற்றைப் பயன்படுத்தி வதந்திகளும், பொய்யுரைகளும், தவறான தகவல்களும் பரப்பப்படுவதை சாபம் என்று கொள்வதா என்று அறுதியிட்டுக் கூற முடியாமல் விக்கித்துப்போய் இருக்கிறது ஒட்டுமொத்த மானுட இனம்.
வதந்திகள்
  • வதந்திகள் பரப்புதல், பொய்யை உண்மைபோல் சித்தரித்தல், காழ்ப்புணர்வுடன் தனிமனிதத் தாக்குதல் நடத்துதல் என்று முகநூல் மூலமும் கட்செவி அஞ்சல் மூலமும் செய்யப்படும் பரப்புரைகள் ஏற்படுத்துகின்ற பாதிப்பைச் சொல்லி மாளாது. குறிப்பாக, பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்களை தரக்குறைவாக நையாண்டி செய்வதும், அவர்களது ஆளுமையைக் கேள்விக்குறியாக்குவதும் ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்துவிடும் போலிருக்கிறது. இத்தகைய சூழலில் கட்செவி அஞ்சல் நிறுவனம் சில விதிமுறைகளைப் புகுத்தி, வதந்திகள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
  • யார் வேண்டுமானாலும் இணைய இணைப்பைப் பயன்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கென மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்திக் கொண்டு செல்லிடப்பேசிகள் மூலம் கட்செவி அஞ்சல் கணக்கைத் தொடங்கிவிடலாம். தவறான முகவரியுடனும், தகவல்களுடனும் கட்செவி அஞ்சல் கணக்குகள், தங்களது முகமாக அறிமுகத்தளம் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
குழுக்கள்
  • இதெல்லாம் போதாதென்று கட்செவி அஞ்சலில் உறுப்பினராக உள்ளவர்களை இணைத்து யார் வேண்டுமானாலும் குழுக்களை உருவாக்கலாம். அந்தக் குழுக்களின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவோ, பரப்பவோ முடியும். இந்த வசதியைப் பயன்படுத்தித்தான் வதந்திகளும், அருவருக்கத்தக்க ஆபாசங்களும், முகம் சுளிக்க வைக்கும் பதிவுகளும் கட்செவி அஞ்சல் மூலம் பரப்பப்படுகின்றன.
  • யார் வேண்டுமானாலும் ஒரு குழுவை அமைத்து அதில் ஒருவருடையே ஒப்புதல் இல்லாமலேயே கட்செவி அஞ்சலில் கணக்கு வைத்திருப்போரை இணைத்துக் கொள்ளும் வழிமுறைக்கு அந்த நிறுவனம் சில தடைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இனிமேல் ஒருவருடைய அனுமதியில்லாமல் எந்த ஒரு குழுவிலும் யாரையும் இணைத்துவிட முடியாது.
  • இப்போதைய நிலையில் குழுவில் இணைக்கப்பட்டாலும் அதிலிருந்து விலகிக் கொள்ளும் உரிமை ஒருவருக்கு இருக்கிறது என்றாலும்கூட, குழுவில் இணைத்துக் கொண்டு பகிரப்படும் பதிவுகளைப் பார்த்த பிறகுதான் விலகுவதற்கான முடிவை எடுக்க முடியும். இனிமேல் அப்படியல்ல. அனுமதியில்லாமல் எந்தவொரு குழுவிலும் யாரையும் இணைக்க முடியாது என்பதால், குழுவை அமைப்பவர் இன்னார் என்பதை இணைக்கப்படுபவருக்குத் தெரிவித்தாக வேண்டும்.
அடையாளம்
  • ஏற்கெனவே கட்செவி அஞ்சலில் ஐந்து பேர் அல்லது ஐந்து குழுக்களுக்கு மேல் எந்த ஒரு பதிவையும் ஒருவர் அனுப்ப முடியாது என்கிற வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மட்டுமே விமர்சனத்துக்குரிய பதிவுகளையும் வதந்திகளையும் தடுத்துவிட முடியவில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறை பெரிய அளவில் உதவுமா என்பது சந்தேகம்தான். கட்செவி அஞ்சலில் ஒவ்வொரு முதல் பதிவுடனும் அதைப் பதிவு செய்பவர் யார் என்கிற விவரம் இணைக்கப்பட்டால் மட்டுமே வதந்தி பரப்புபவரையும், தவறான தகவல் தருபவரையும் அடையாளம் காணவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் இயலும். அதை உறுதிப்படுத்தாத வரை, கட்செவி அஞ்சலைத் தவறாகப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது.
  • முகநூலைப் பொருத்தவரை அதில் கணக்கு வைத்திருப்பவரை அடையாளம் காண்பது எளிதல்ல. யார் வேண்டுமானாலும் தவறான தகவலைக் கொடுத்து மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த மின்னஞ்சல் முகவரியின் அடிப்படையில் முகநூல் கணக்கைத் தொடங்க முடியும். அப்படிப்பட்ட முகநூல் கணக்குகள் மூலம் வதந்திகளையும் பொய்யுரைகளையும் பரப்ப முடியும். இதனால் ஏற்படுகிற பாதிப்பு அளப்பரியது.
  • கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய 687 போலி முகநூல் கணக்குகள், முகநூல் நிறுவனத்தால் முடக்கப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம், பல்வேறு பெயர்களில் முகநூல் கணக்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் தவறான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இதேபோல காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஏனைய அரசியல் கட்சிகளும் பல்வேறு தனிநபர்கள், நிறுவனங்களும்கூட முகநூல் கணக்குகளை ஏற்படுத்தி அதன் மூலம் பரப்புரைகள் செய்து வருகின்றன. விமர்சனத்துக்குரிய பதிவுகளையும் வதந்திகளையும் பரப்புவதற்குப் பயன்படுத்துகின்றன. முகநூலையும், கட்செவி அஞ்சலையும் எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு பொள்ளாச்சி சம்பவம் சமீபத்திய எடுத்துக்காட்டு.
கட்செவி
  • கட்செவி அஞ்சலில் பதிவு செய்பவர் குறித்த விவரம் இணைக்கப்பட வேண்டும் என்பதுபோல, முகநூலைப் பொருத்தவரை அதில் கணக்கு தொடங்கும் யாராக இருந்தாலும் செல்லிடப்பேசி எண்ணையும், ஆதார், வாக்காளர் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏதாவதொரு தன்விவர அத்தாட்சியையும் இணைக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். சுட்டுரையைப் பொருத்தவரை செல்லிடப்பேசி எண் இல்லாமல் கணக்கு தொடங்க முடியாது. அதேபோல, முகநூலுக்கும் அடிப்படை விதிமுறைகள் வகுக்கப்படுவது அவசியம். இதன் மூலம் ஒரே நபர் பல முகநூல் கணக்குகளைத் தொடங்கி, அதைத் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்படும். சமூக ஊடகங்கள் சில விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டேயாக வேண்டும். தனி மனித சுதந்திரம் என்கிற பெயரில் வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பும் அநாகரிகத்தை அனுமதிப்பது பேராபத்து!

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories