TNPSC Thervupettagam

விதியைத் திறந்து பார்த்த சுபத்திரை

September 15 , 2024 123 days 142 0

விதியைத் திறந்து பார்த்த சுபத்திரை

  • பீஷ்மரின் வீழ்ச்​சிக்குப் பிறகு குருஷேத்​திரப் போரைத் துரோணர் தலைமையேற்று நடத்துகிறார். பதின்​மூன்றாம் நாள் யுத்தத்தில் யுதிஷ்டிரனைச் சிறைப் பிடிக்க துரோணர் பத்மவியூகம் அமைக்​கிறார். யுதிஷ்டிரனுக்காக உருவாக்​கப்பட்ட பத்மவியூ​கத்தில் அபிமன்யு மாட்டிக்​கொள்​கிறார். பத்மவியூ​கத்தை உடைத்​துக்​கொண்டு உள்ளே செல்லத் தெரிந்த அவருக்கு, வெளியேறும் வழி தெரிய​வில்லை. துரோணர், கிருபர், சகுனி, கர்ணன், அஸ்வத்​தாமன், கிருதவர்மன் உள்ளிட்ட கௌரவர் படையால் கொடூர​மாகக் கொல்லப்​படு​கிறார் அபிமன்​யு.
  • பெரும் துயரமடைந்த சுபத்​திரை, அபிமன்​யுவின் மறைவுக்குத் தன் அண்ணன் கிருஷ்ணனே காரணம் என்கிறார். போரின் நிறைவில் இறந்து​போனவர்​களுக்காக நீர்க்கடன் செலுத்​தப்​படு​கிறது. அந்நாளில் சுபத்​திரைக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்தான் எழுத்​தாளர் ஜெயமோகனின் ‘பத்ம​வியூகம்’ கதையின் மையம். பாரதப் பிரதி​களில் இந்த உரையாடல் இல்லை. ஜெயமோகன்தான் சுபத்திரை கதாபாத்​திரத்தின் வழியாக இதை நடத்துகிறார்.
  • சுபத்​திரை, திரௌபதியை எப்படிப் புரிந்​து​கொண்டார் என்கிற இடமும் புனைவில் முக்கி​யத்துவம் பெறுகிறது. திரௌப​தியின் சபதத்தை நிறைவேற்றவே கிருஷ்ணனுடன் சேர்ந்​து​கொண்டு பாண்ட​வர்கள் குருஷேத்​திரப் போரை நடத்து​கிறார்கள் என்பது சுபத்​திரையின் எரிச்சல். பாண்ட​வர்கள் போரில் வெற்றி​பெற்று ஆட்சிக் கட்டிலேறும்போது சக்ரவர்த்தினி​யாகச் சிம்மாசனத்தில் அமரப் போகிறவர் திரௌபதி. அதற்கு ஏன் என் மகனைப் பலிகொடுக்க வேண்டும் என்கிற கோபமும் சுபத்​திரை​யிடம் இருக்​கிறது. அர்ஜுனனை நான்கு பெண்கள் திருமணம் செய்து​கொள்​கிறார்கள். அதில் திரௌப​தியும் சுபத்​திரையும் மட்டுமே அர்ஜுனனுடன் இருப்​பவர்கள். சுபத்​திரைக்கு முன் அர்ஜுனனை மணந்து​கொண்ட திரௌப​திக்கே எல்லா மரியாதையும் கிடைக்​கிறது. இவ்விரு​வருக்கு இடையிலான இந்தப் பிரச்​சினை​களையும் ஜெயமோகன் சிறப்​பாகக் கையாண்​டிருக்​கிறார். இவையெல்லாம் மூலப் பிரதி​களில் இல்லாதவை.
  • அர்ஜுனனின் இருப்பும் சுபத்​திரையால் கடுமையாக விமர்​சிக்​கப்​படு​கிறது. அர்ஜுனன் ஒரு பெண் வேட்டைக்​காரன் என்ற குற்றச்​சாட்டை சுபத்​திரையும் உறுதிப்​படுத்து​கிறார். கங்கைக் கரையில் முதிய​வர்​களும் பெண்களும் குழந்தை​களுமே நிரம்​பி​யிருக்​கிறார்கள். இளைஞர்களே இல்லாத கங்கைக் கரை சுபத்​திரைக்குள் பெரும் பதற்றத்தை உருவாக்கு​கிறது. இந்தப் போர் பெரும் திரளான விதவை​களைத்தான் உருவாக்​கியது. அதுதான் குருஷேத்​திரப் போரை வெற்றிகரமாக நடத்தி​முடித்த கிருஷ்ணனின் ஆகப்பெரும் சாதனையாக சுபத்​திரையால் பார்க்​கப்​படு​கிறது.
  • தன் உதிரத்​திலிருந்து உருவான குரு வம்சத்தின் அழிவை வியாசர் பார்க்​கிறார். இச்சூழலில், போர் தொடர்பான சுபத்​திரையின் கேள்விக்கு வியாசர் அளிக்கும் பதில்கள் முக்கிய​மானவை. “இதெல்லாம் எதற்காகத் தாத்தா? யாருடைய லாபத்​திற்​காக?” என்கிறார் சுபத்​திரை. “எதற்காக என்று மட்டும் கேட்காதே. அப்படிக் கேட்க ஆரம்பித்தால் தெய்வங்களே திகைத்து நின்று​விடு​வார்கள்” என்கிறார் வியாசர். எல்லா​வற்றுக்கும் காரணம் இவர்தான் என்று கிருஷ்ணனைக் கைகாட்டு​கிறார் சுபத்​திரை. “ஆட்சிக்​காகச் சகோதரன் கழுத்தைச் சகோதரன் அறுக்​கலாம்” என்று உபதேசம் செய்தவர் இவர்தான் என்கிறார் சுபத்​திரை. தங்கையின் குற்றச்​சாட்டை கிருஷ்ணன் அமைதி​யாகக் கேட்டுக்​கொண்​டிருக்​கிறார். அந்தச் சூழலில் கிருஷ்ணனால் அப்படித்தான் இருக்க முடிகிறது.
  • போரை மனிதர்​களால் தொடங்க மட்டும்தான் முடியும்; அதன் முடிவு தொடங்​கிய​வரின் எல்லைக்கு அப்பாற்​பட்டது என்பதை கிருஷ்ணரை அருகில் வைத்துக்​கொண்டே வியாசர் சொல்கிறார். விதியைத் திறந்து பார்க்கும் விபரீத விளையாட்​டையும் சுபத்திரை ஆடுகிறார். இந்தப் பகுதி​யில்தான் புனைவு பெரும் பாய்ச்சலை நிகழ்த்​தி​யுள்ளது.
  • அடுத்த பிறவியி​லாவது பத்மவியூ​கத்​திலிருந்து வெளியேறும் வழியை அபிமன்​யு​விற்குச் சொல்ல வேண்டும் என்கிறார் சுபத்​திரை. வியாசர் ஒரு ரிஷியை அழைத்து​வரு​கிறார். அடுத்த பிறவியின் சுவரைத் தாண்ட நினைப்பது தெய்வங்​களின் அதிகாரத்​திற்கு அறைகூவலிடும் செயல் என்கிறார் ரிஷி. இச்செயலுக்குப் பின் நிகழும் எதைப் பற்றியும் சுபத்திரை கவலைப்​பட​வில்லை. அவருக்கு அபிமன்​யுவுடன் உரையாட வேண்டும்; பிறவி​கள்​தோறும் தொடரும் விதியின் சூட்சுமத்தை அவருக்குச் சொல்ல வேண்டும். அடுத்த பிறவியி​லாவது தன் இறப்புக்குப் பின்னாலுள்ள காரணத்தை அவர் அறிந்​து​கொள்ள வேண்டும்; இதற்காக எந்த அறத்தையும் மீற சுபத்திரை தயாராக இருக்​கிறார்.
  • ஜெயமோகன் அடுத்த பிறவி குறித்த இன்னொரு திறப்​பையும் இப்பு​னை​வினூடாகக் காட்டு​கிறார். கருபீடம் ஏறிவிட்ட அபிமன்யு ஒரு தாமரை மலரில் புழுவாக நெளிந்​து​கொண்​டிருக்​கிறான். அபிமன்யு அருகில் இன்னொரு புழு நெளிந்​து​கொண்​டிருக்​கிறது. அந்தப் புழு யாரெனக் கேட்கிறார் சுபத்​திரை. “அது எதற்கு உனக்கு?” என்கிறார் ரிஷி. சுபத்திரை அடம்பிடிக்​கிறார். அந்தப் புழு, கோசல மன்னன் பிருகத்​பாலன் என்கிறார். பிறவி​கள்​தோறும் இருவருக்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவு தொடர்வதை ரிஷி அறிவிக்​கிறார்.
  • பதின்​மூன்றாம் நாள் யுத்தத்தில் அபிமன்​யுவைக் கொல்லவந்த கோசல மன்னனான பிருகத்​பாலனைக் கொன்று​விட்டே அபிமன்யு தன் மரணத்தைத் தழுவு​கிறார். இந்தப் பிறவியில் அவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள். சுபத்​திரைக்குப் பதற்றம் அதிகரிக்​கிறது. முந்தைய பிறவி​களிலும் அவர்கள் இருவருக்கும் தொடர்​பிருந்​திருக்​கிறது. அவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதைத் தவிர, அவர்கள் என்னவாகப் பிறந்​திருக்​கிறார்கள் என்பதை ரிஷியால் அறிய இயலவில்லை; அவர் சொல்ல விரும்ப​வில்லை.
  • இந்தப் பிறவியில் பிருகத்​பாலனால் அபிமன்​யு​விற்குப் பிரச்சினை வருமென்று சுபத்திரை கருதுகிறார். “உன்னுடன் இருப்பவன் உன்னால் கொல்லப்பட்ட பிருகத்​பாலன்; அவனிடம் எச்சரிக்கையாக இரு” என்று அபிமன்​யு​விடம் சுபத்திரை உரக்கக் கூறுகிறார். சுபத்​திரையின் இச்செயல் விதியின்மீது நிகழ்த்​தப்பட்ட குறுக்​கீடாக ரிஷி கருதுகிறார். இப்பிற​வியில் பாதுகாக்க முடியாத அபிமன்யுவை அடுத்த பிறவியி​லாவது பாதுகாக்க வேண்டும் என்று சுபத்திரை கருதுகிறார். கிருஷ்ணன் சுபத்​திரையின் இச்செயலை வேடிக்கை பார்த்​துக்​கொண்டிருக்​கிறார்.
  • போரைத் தொடங்​கியவர் கிருஷ்ணனாக இருந்​தாலும் அவரது எண்ணப்படி போர் முடிய​வில்லை. போரின் இறுதியில் காந்தா​ரியால் கடுமையான சாபங்​களைப் பெறுகிறார் கிருஷ்ணன். போர் தொடங்​கு​வதற்கு முன்பிருந்த தருணத்தையே கிருஷ்ணன் இப்போது விரும்​பு​கிறார். அத்தனை எதிரி​களையும் ஆரத் தழுவிக்​கொள்ள ஒவ்வொரு​வருமே தயாராக இருக்கிறார்கள் என்று சுபத்​திரை​யிடம் கூறுகிறார்.
  • மனிதப் பிறப்பு என்பதே பத்மவியூ​கத்தில் மாட்டிக்​கொண்ட கதைதான். இதற்குள் உள்ளே செல்ல மட்டும்தான் வழி தெரியும். வெளியேறும் வழியை ஒருவரும் அறிந்​திருக்​க​வில்லை என்ற புரிதலை இப்புனைவு வாசிப்​பவருக்குக் கடத்துகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories