- உலகில் விசித்திரமான பல விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் ஆரோக்கியமும் இயற்கையும் இயைந்த விழாக்கள் கொண்டாடப்படுவது அரிதுதான். அந்த வகையில் தென்கொரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘போரியாங் மண் திருவிழா' பிரசித்திப் பெற்றதும் விநோதமானதும்கூட.
- மண்குளியலுக்கு நம்முடைய ஆயுர்வேதத்தில் முக்கிய இடமுண்டு. அதுபோலவே சேற்று நீரில் முங்கிக் குளித்து, அந்த மண்ணை ஒருவர் மேல் இன்னொருவர் வாரி இறைத்து விளையாடும் விழா இது. தென் கொரியாவில் இந்த விழாவை 10 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
- தென்கொரியத் தலைநகர் சியோல் நகரில் உள்ள போரியாங் கடற்கரைதான் இந்தத் திருவிழாவின் மையம். அந்தக் கடற்கரையிலிருந்து மண்ணை எடுத்து வந்து குளம் போன்ற வட்ட வடிவத் தொட்டிகளில் கலந்து சேற்றுக் குளியலில் ஈடுபடுகிறார்கள், அங்குள்ள இளசுகள்.
- உலகில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் விழாவும் அல்ல இது. கடந்த 25 ஆண்டுகளாகத்தான் இத்தத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவின் பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த அம்சமும் இருக்கிறது.
- உடலுக்கு நன்மை தரும் உலோகத் தாதுகள் போரியாங் கடற்கரை மண்ணில் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலான அழகு சாதனப் பொருள்கள் பலவற்றிலும் இந்தக் கடற்கரை மண்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கடற்கரை மண்ணைப் பிரபலப்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளைக் கவரவும் ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதியில் இத்திருவிழா நடத்தப்படுகிறது.
- சமீபகாலமாக இந்த விழாவில் கலந்துகொள்ள ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் தென்கொரியாவை நோக்கிப் படையெடுக்கின்றனர். இதில் கலந்துகொள்வதற்குக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
- மண் சறுக்கு, அலைச் சறுக்கு, ஆடல் பாடல், சறுக்கு விளையாட்டு, கயிறைப் பிடித்துக்கொண்டு குழியில் விழாமல் கடக்கும் போட்டிகள் என்று கோலாகலமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனுடன் அழகு சாதனப் பொருள்களின் விற்பனையும் ஜமாய்க்கும். இந்தத் திருவிழாவால் ஆரோக்கியமும் கிடைக்கிறது, கல்லாவும் நிறைகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 07 – 2024)