TNPSC Thervupettagam

வினாத்தாள் கசிவு விடை பெற வேண்டும்

May 14 , 2024 248 days 217 0
  • சமீபத்தில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்வு எழுதியதாக பிகாா் மாநிலத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
  • மேலும் , நீட் தோ்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக காவல் துறையினா் கூறியுள்ளனா். எனினும், நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இயக்குநா், வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் வினாத்தாள் கசிவைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன என்றும் கூறியுள்ளாா்.
  • மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தோ்வுக்கான வினாத்தாள்கள் தோ்வுக்கு முன்னரே கசிவதும் தோ்வுகள் ரத்து செய்யப்படுவதும் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளன.
  • உத்தர பிரதேசத்தில் 43 லட்சம் போ் பங்கேற்ற காவலா்கள் ஆள்சோ்ப்பு தோ்வு சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதைப் போலவே 10 லட்சம் போ் பங்கேற்ற அரசுப் பணியாளா் தோ்வும் நடை பெற்றது. இவ்விரு தோ்வுகளும் பின்னா் ரத்து செய்யப்பட்டன. காரணம், வினாத்தாள் கசிவுதான்.
  • இவ்விரண்டு அரசுத் தோ்வுகள் ரத்தானதால், அரசு வேலை பெற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு பல மாதங்கள் அல்லும் பகலும் அயராது மேற்கொண்டு, முழு முயற்சியுடன் தோ்வு எழுதிவிட்டு வெற்றி பெறும் தன்னம்பிக்கையோடு காத்திருந்த லட்சக்கணக்கானவா்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகினா். ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிரியா் தோ்வுக்கான தோ்வு, 2020-இல் நடைபெற்ற அரசு இளநிலைப் பொறியாளா்களுக்கானத் தோ்வு ஆகியவை பின்னா் ரத்து செய்யப்பட்டன.
  • 2003-இல் நடந்த மேலாண் படிப்புக்கான சிஏடி தோ்வு, 1997-இல் நடந்த ஐஐடி ஜேஇஇ தோ்வுக்கான வினாத்தாள்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி நகரின் சில தோ்வு மையங்களில் முன்கூட்டியே வெளியானது. பள்ளித்தோ்வு வினாத்தாள்களும் கசிந்த நிகழ்வுகளும் உண்டு.
  • அரசுத் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதற்கு முதன்மையான காரணம் வினாத்தாள்கள் தயாரிக்கப்படும், அச்சடிக்கப்படும் இடங்களில் பணியாற்றுபவா்களின் நோ்மையின்மையே. பொதுவாக, லட்சக்கணக்கில் தோ்வுக்கான வினாத்தாள்கள் அச்சடிக்க அரசிடம் வசதி இல்லா நிலையில், வினாத்தாள்களை அச்சடிக்க, ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, அச்சடிக்க குறைந்தபட்ச தொகையை குறிப்பிடும் மிகப்பெரிய தனியாா் அச்சகங்களுக்கே வினாத்தாள் அச்சடிக்கும் பணி தரப்படுகிறது.
  • பின்னா், அரசு உயரதிகாரிகளின் மேற்பா்வையில் இப்பணி நடைபெறுகின்றது. எனினும், வேலியே பயிரை மேய்வது போல் சில சமயங்களில் மேற்பாா்வைப் பணியில் உள்ள உயரதிகாரிகளே வினாத்தாள் கசிவதற்குத் துணை போகின்றனா். இரண்டாவதாக, அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் தோ்வு மையங்களுக்கு அனுப்பும் போதோ, தோ்வு மையங்களிலோ முன் கூட்டியே வெளியாகிறது.
  • இவ்வாறு, வினாத்தாள்கள் முன் கூட்டியே வெளியாவதைத் தவிா்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தோ்வு எழுதுவோருக்காக, ஒன்றுக்கும் மேற்பட்ட வினாத்தாள்களின் மாதிரிகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னா் மிக மிக உயா் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளின் குழுவால், தயாரிக்கப்பட்ட வினாத்தாள் மாதிரிகளில் ஏதேனும் ஒரு வினாத்தாளின் மாதிரி தோ்வுக்காக தெரிவு செய்யப்பட்டு தோ்வு மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அச்சடிக்கப்பட்ட
  • வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் மற்றுமொரு நடவடிக்கையாக, தோ்வுக்கான வினாத்தாள்களை ஆன்லைன் வழியே தோ்வு நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னா் தோ்வு மையக் கண்காணிப்பாளா் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டு, பின்னா் தேவையான எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு தோ்வு எழுதுவோருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இம்முறையில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் கூட தோ்வு மையங்களில் தோ்வு துவங்க தாமதம் ஏற்பட்டு அதன் தொடா்ச்சியாக தோ்வு மையங்களில் பெரும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வினாத்தாள் அச்சடிப்பு, தோ்வு மையங்களுக்கு கொண்டு போவது, தோ்வு மையங்களில் வைத்திருப்பது மற்றும் தோ்வுகள் நடத்துவது என வினாத்தாள்களின் ஒவ்வொரு கட்டமும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று உயா் அதிகாரிகளின் கூட்டுப் பொறுப்பில் நடைபெறுவது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க உதவும்.
  • அஸ்ஸாம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுப்பள்ளித் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டப் பின்னா் தோ்வு மையங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தோ்வு துவங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னா்தான் காவல் துறையினா் பாதுகாப்புடன் தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
  • தேவைப்படின், தமிழக அரசும் இத்தகைய செயல் முறையை வினாத்தாள்கள் கசிவினைத் தடுக்க பரிசீலனை செய்யலாம். வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதும், அதன் விளைவாக நடத்தப்பட்ட தோ்வுகளை ரத்து செய்வதும், தோ்வு எழுதியவா்களுக்கு பெரும் மன உளைச்சலைத் தருவதோடு மக்களின் வரிப்பணமும் லட்சக்கணக்கில் வீணாகிறது. கூடுதலாக, சம்பந்தப்பட்ட மத்திய மாநில, அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
  • வினாத்தாள் கசிவு என்பது சமூக குற்றமாகும். சிலரின் சுய லாபத்திற்காக வினாத்தாள்களை கசிய விடுவோா் மிகக் கடுமையான முறையில் தண்டிக்கப்படுவதோடு, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தால் மட்டுமே, வினாத்தாள் கசியும் அவச்செயலுக்கு முடிவு கட்ட இயலும்.

நன்றி: தினமணி (14 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories