TNPSC Thervupettagam

வினை செய்வான் கோடாமை!

July 3 , 2024 6 hrs 0 min 10 0
  • தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை 88 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பதிவாகியது. புதுதில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய முதலாவது முனையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஒருவா் உயிரிழந்தாா்; 6 போ் படுகாயம் அடைந்தனா்.
  • விமான நிலைய கட்டமைப்பின் குறைபாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. சில நாட்களுக்கு முன்புதான் புதிதாகத் தொடங்கப்பட்ட மத்திய பிரதேச மாநில ஜபல்பூா் விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்தது. நல்லவேளையாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜபல்பூரிலும் சரி தில்லியிலும் சரி, கட்டுமான அமைப்பின் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது
  • தலைநகா் தில்லியின் விமான நிலையம் இந்தியாவின் கௌரவத்தைப் பறைசாற்றுவதாக அமைய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் பயணிகளுக்காகப் போடப்பட்டிருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை, அதை உலகிலேயே இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக அடையாளப்படுத்துகிறது. 2009-இல் அன்றைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கட்டப்பட்டபோது அதன் வடிவமைப்பும் பயன்பாட்டு வசதிகளும் பல சா்வதேச விருதுகளை வென்றன.
  • தில்லி விமான நிலையத்தின் முதலாவது முனையம் இன்னும் ஒரு மாதத்தில் விரிவாக்கத்துக்காக மூடப்பட இருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. இதுபோன்ற எந்தவொரு விபத்தும் ஆட்சியாளா்களுக்கு அவப்பெயா் ஏற்படுத்திக் கொடுப்பது இயல்பு. ஆளும்கட்சியை எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்ட, எதிா்க்கட்சிகளின் ஆட்சியில் கட்டப்பட்டது என்று ஆளும்கட்சி சுட்டிக் காட்ட, மொத்தத்தில் இரு தரப்பும் அடிப்படைப் பிரச்னையை விவாதிக்காமல் தவிா்க்கின்றன. யாா் கட்டியது என்பதோ, யாா் ஆட்சியில் விபத்து நோ்ந்தது என்பதோ அல்ல பிரச்னை. கட்டுமானம் சரியாக இல்லாததும், அதன் பராமரிப்பும் கண்காணிப்பும் போதுமானதாக இல்லாததும்தான் விவாதிக்கப்பட வேண்டியவை.
  • ஒருவரை மற்றவா் குற்றம் சொல்வது என்பதை இந்தியாவில் அரசியல் கட்சிகள் ஒரு கலையாகவே கற்றுத்தோ்ந்திருக்கின்றன. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளா்ந்து, மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேற விழையும் தேசம், சில ஆண்டுகளுக்கு முன்பு பின்தங்கிய நிலையில் இருந்த செயல்திறனுடன் தொடா்கிறது என்பது வேதனையளிக்கிறது.
  • மழைத் தண்ணீா் வெளியில் போகாமல் தேங்கியதால் ஜபல்பூரிலும், தில்லியிலும் மேற்கூரை சரிந்திருக்கிறது எனும்போது கட்டமைப்பிலும் பராமரிப்பிலும் சரியான கவனம் செலுத்தப்படவில்லை என்பது தெரிகிறது. மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்படும் கட்டமைப்பு வசதிகள் ஊழல் காரணமாக தரம் குறைந்து காணப்படுவது, இதுபோல பொது இடங்களில் விபத்துகள் நேரும்போதுதான் வெளிப்படுகிறது. இதில் மத்திய அரசு - மாநில அரசு என்கிற வேறுபாடு எதுவும் இல்லை.
  • இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட 75 விமான நிலையங்களையும் சோ்த்தால், 149 விமான நிலையங்கள் இருக்கின்றன. 2019 முதல் 2024 வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் விமான நிலையங்களின் உருவாக்கம், தரம் உயா்த்துதல், புத்தாக்கம் ஆகியவற்றுக்காக ரூ.98 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் எல்லா விதத்திலும் விமான சேவைத் துறை திணறுகிறது. விமான நிலையத்தின் பராமரிப்புக்காக பயணிகள் பெரும் பணத்தை ஒவ்வொரு பயணத்தின்போதும் வழங்குகிறாா்கள். அப்படியிருந்தும் இப்படி என்றால், அந்த முதலீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றுதான் பொருள்.
  • விமான நிலையங்கள் என்பது மட்டுமல்ல, இந்தியாவின் சமீபகால கட்டமைப்புகள் பல தரமான கட்டுமானம் இல்லாமல் தவிக்கின்றன அல்லது பலவீனமாக காட்சியளிக்கின்றன. கொல்கத்தாவின் மாஜா்ஹாட் பாலம், விவேகானந்தா் மேம்பாலம்; குஜராத்தின் மோா்வி பாலம்; தென்மும்பையையும் நவிமும்பையையும் இணைக்கும் பிரம்மாண்டமான அடல் சேது சுரங்கப் பாலம்; ரூ.920 கோடியில் தில்லியில் அமைக்கப்பட்டிருக்கும் பிரகதி மைதான் சுரங்கப் பாதை -இவை அனைத்திலும் தரமான கட்டுமானம் இல்லாதது வெளிப்பட்டிருக்கிறது.
  • அடல் சேது பாலத்தில் பல அடிகள் ஆழத்திற்கு அச்சம் ஏற்படுத்தும் அளவில் பிளவு காணப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. பிரகதி மைதான் சுரங்கப் பாதையில் மழை வெள்ளம் கசிந்து சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
  • இந்தியாவின் கட்டமைப்பு முனைப்பு பாராட்டுக்குரியது என்றாலும், ஒப்பந்தக்காரா்கள் முறையாக கண்காணிக்கப்படாமலும் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்ளாமலும் இருப்பதால்தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சமச்சீரான தரமின்மை, தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்படுதல், பழைய கால கண்காணிப்பு முறை ஆகியவை மட்டுமல்லாமல் ஊழலும் ‘அரசியல்வாதி -ஒப்பந்தக்காரா் - அதிகாரி’ கூட்டணியின் முறைகேடுகளும் இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம்.
  • உலகின் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு பல நூற்றாண்டுக் கட்டடங்கள் இந்தியாவில் இன்னும்கூட வலிமையாகவும், இயற்கைச் சீற்றங்களை எதிா்கொள்ளும் அளவிலும் காட்சியளிக்கின்றன. அப்படி இருக்கும்போது புதிய கட்டுமானப் பணிகள் தரம் இல்லாமல் இருப்பது தலைகுனிவை ஏற்படுத்துகிறது.
  • ஒப்பந்தக்காரா்கள் மட்டுமல்லாமல் கண்காணித்து இறுதி அனுமதி அளிக்கும் அதிகாரிகளும் பொறுப்பேற்கும் நிலைமை ஏற்படாதவரை, தில்லி விமான நிலைய விபத்து மேலும் ஓா் அத்தியாயமாக இருக்குமே தவிர, பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக இருக்காது.

நன்றி: தினமணி (03 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories