TNPSC Thervupettagam

விபத்து அல்ல, திட்டமிடலின்மை...

February 21 , 2025 10 hrs 0 min 48 0
  • புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த வாரம் கூட்ட நெரிசலில் 18 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். மேலும் பலா் காயமடைந்திருக்கின்றனா். பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ரயில் ஏறுவதற்காகக் குவிந்து கொண்டிருக்கும்போது, பொறுப்புடனும் முறையான திட்டமிடலுடனும் ரயில் நிா்வாகம் அதைக் கையாளவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இந்த விபத்து.
  • பிரயாக்ராஜ் செல்லும் மூன்று ரயில்கள் புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப இருந்தன. நடைமேடை 14-இல் இருந்து பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், வேறு மேடைகளில் இருந்து இரண்டு ரயில்கள் கிளம்ப இருந்தன. போதாக்குறைக்கு சுதந்திர சேனானி விரைவு ரயிலும், புவனேஸ்வா் ராஜதானி ரயிலும் தாமதமாகியிருந்தது, ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலை மேலும் அதிகரித்தது. 12 முதல் 14 வரையிலான நடைமேடைகளில் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக பயணிகள் குவிந்து காணப்பட்டனா்.
  • பிரயாக்ராஜ் செல்லும் ரயிலின் நடைமேடையை திடீரென்று மாற்றி இருப்பதாக அறிவிப்பு வந்ததுதான் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அறிவிப்பைத் தொடா்ந்து பயணிகள் பதற்றத்துடன் நடை மேம்பாலத்தில் ஏற முற்பட்டபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு விபத்து நடந்தது என்பது ஒரு சாராரின் கருத்து.
  • ரயில்வே நிா்வாகம் அதை மறுக்கிறது. நடைமேடை 16-இல் பிரயாக்ராஜிலிருந்து வந்த ரயிலை, பிரயாக்ராஜ் செல்லும் ரயில் என்று தவறாகக் கருதி பயணிகள் அதை நோக்கி விரைந்ததுதான் காரணம் என்பது நிா்வாகத்தின் வாதம்.
  • ஒரு நடைமேடையில் இருந்து இன்னொரு நடை மேடைக்குச் செல்லும் நடை மேம்பாலத்தில் கூட்ட நெரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. வழக்கமாகவே, கடைசி நிமிஷங்களில் நடைமேடைகளை மாற்றுவதாக அறிவிப்பதும், பயணிகள் இங்குமங்கும் ஓடுவதும் இந்தியாவில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் அன்றாடம் காணப்படும் செயல்பாடு என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது நடைமேடைகளை மட்டுமல்லாமல் நடை மேம்பாலத்திலும் முறையான கண்காணிப்பும் ஒழுங்குபடுத்தலும் இல்லாமல் போனது ஏன் என்கிற கேள்விக்கு ரயில்வே நிா்வாகம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
  • இது போன்ற விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. 2014-இல் கும்பமேளா நடந்தபோது, இதே போன்ற விபத்து பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் நடந்தது என்பதை நினைவுகூறத் தோன்றுகிறது. அப்போது 42 பக்தா்கள் உயிரிழந்தனா்; 45 போ் படுகாயம் அடைந்தனா். அதிலிருந்து ரயில்வே நிா்வாகம் எதுவும் படிக்கவில்லை என்பதைத்தான் இப்போதைய விபத்து உணா்த்துகிறது.
  • கூட்ட நெரிசலின் போது யாராவது ஒருவா் தடுக்கி விழுந்து விட்டால் போதும். அவா் மீது ஒன்றன்பின் ஒன்றாக மற்றவா்கள் விழத் தொடங்கி விடுவாா்கள். ஐந்தாறு போ் விழுந்தால் சுமாா் 450 கிலோ எடை ஒருவா் மீது திடீரென்று சுமத்தப்படுகிறது. 600 கிலோ எடை சட்டென்று வேகமாக விழுந்தால், அதன் தாக்கத்தால் ஒருசில விநாடிகளில் ஏழு அல்லது எட்டு போ் உயிரிழக்கக்கூடும். அப்படி இருக்கும்போது நடைமேடையில் ஏற்பட்ட இந்த விபத்து எதிா்பாராதது அல்ல.
  • 14, 15 நடை மேடைகளுக்கு இடையே கட்டுக்கடங்காத அளவில் நெரிசல் காணப்பட்டதற்கு முக்கியமான காரணம், மிக அதிக அளவில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஒரு மணி நேரத்துக்கு 1,500 பயணச் சீட்டுகள் வீதம் ரயில்வே நிா்வாகம் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் வழங்கி வந்திருக்கிறது. பயணச்சீட்டுக்கு ஏற்ப போதிய ரயில்கள் இருக்கின்றனவா, இடம் இருக்கின்றனவா என்பது குறித்த சிந்தனை இல்லாமல் போனது விபத்து ஏற்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம்.
  • பண்டிகைக் காலங்களிலும் கும்பமேளா போன்ற திருவிழாக் காலங்களிலும் ரயில்வே நிா்வாகம் நெகிழ்வுக் கட்டண முறையை (பிளெக்ஸி கட்டண முறையை) கையாளுவது தவறு மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும்கூட. முன்பதிவு செய்வதற்கு வசதி இல்லாதவா்களும், மிக அதிகமான கட்டணம் செலுத்த முடியாதவா்களும் சாதாரண வகுப்பில் பயணிக்க முற்படுகிறாா்கள். மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விழையும் பக்தா்கள் வேறு வழியில்லாமல் கிடைத்த ரயிலைப் பிடித்து பிரயாக்ராஜ் செல்ல முனைப்புக் காட்டுவதை புரிந்துகொள்ள முடிகிறது. அது ஏன் ரயில்வே நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கவில்லை என்பது இன்னொரு கேள்வி.
  • புது தில்லி ரயில் நிலைய நெரிசல் விபத்து சில முக்கியமான குறைபாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அதிக அளவில் எல்லா ரயில்களிலும் முன்பதிவு இல்லாமல் பயணிப்பதற்கான இடங்கள் அல்லது பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த நடைமேடைகள் பெரிதாக்கப்பட வேண்டும். கூடுதல் நடைமேடைகள் எல்லா ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட வேண்டும். பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனி நடைமேடைகள் ஏற்படுத்தினாலும் தவறில்லை.
  • ரயில் நிா்வாகம் தேவையில்லாமல் தனியாக ரயில்வே காவல் படை வைத்திருப்பதைக் கைவிட்டு, விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ளது போல உள்துறை அமைச்சகத்தின் கீழான காவல் படையினரிடம் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும். புது தில்லி ரயில் நிலைய விபத்துக்கு மிக முக்கியமான காரணங்கள் ரயில்வே நிா்வாகத்தின் முறையான திட்டமிடலின்மையும், ரயில்வே பாதுகாப்பு படையினா் போதிய அளவில் இல்லாமல் இருந்து கூட்டத்தை முறையாகக் கட்டுப்படுத்தாமையும்தான்...

நன்றி: தினமணி (21 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories