TNPSC Thervupettagam

விரியட்டும் காய்ச்சல் முகாம்கள்

July 21 , 2020 1645 days 1266 0
  • சென்னையில் கரோனா பரவல் இறங்கு முகத்தில் இருக்கிறது. சென்னையில் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை ஒட்டியும் கடந்தும் போனபோது, எல்லோருமே அதிர்ச்சி அடைந்தார்கள்.

  • கரோனா கட்டு தாண்டிச் செல்வதால் ஏற்பட்ட அச்சம்தான் அது. ஆனால், விரைவில் படிப்படியாகக் குறைந்து, ஜூலை 14 அன்று 1,078 ஆனது. தொடர்ந்து பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், ஆயிரத்தை ஒட்டியே மூன்று வாரங்களாக எண்ணிக்கை செல்கிறது. இந்த இறங்குமுகத்தை வைத்து ‘சென்னை மீண்டுவிட்டது’ என்று நிம்மதி அடைந்துவிடக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

  • ஆனாலும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் புதிய வியூகம் ஒன்று செயல்படுவதை எல்லோருமே கவனிக்கின்றனர். ‘காய்ச்சல் முகாம்கள்’தான் அது.

தொற்று குறைவுக்குக் காரணம்

  • கோயம்பேடு சந்தையின் மூலம் கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்ததிலிருந்து சென்னை கரோனா தொற்று மையமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஜூன் இரண்டாம் வாரத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கையில் சென்னையின் பங்கு 70%-க்கும் மேல் இருந்தது. இப்போது அது மூன்றில் ஒரு பங்குக்கும் கீழாக உள்ளது.

  • இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம், சென்னை மாநகராட்சியால் நடத்தப்பட்டுவரும் மருத்துவ முகாம்கள்.

  • காய்ச்சல் முகாம்கள்’ (ஃபீவர் கிளினிக்) என்று சொல்லப்பட்டாலும் இந்த முகாம்களில் உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு ஆகியவையும் பரிசோதிக்கப்படுகின்றன. கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு, பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இப்படியாக மருத்துவ நிபுணர்கள் தீவிரமாகப் பரிந்துரைத்துவரும் ‘கண்டறிதல், பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல்’ என்னும் உத்தி, சென்னையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.

  • சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு இதுவே காரணம்.

ஒரு நாளைக்கு 500 முகாம்கள்

  • சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்த மருத்துவ முகாம்கள் மாநகராட்சி மருத்துவமனைகளில் மே 8 முதல் நடத்தப்படுகின்றன. மே 28 முதல் நாளொன்றுக்கு 100 பொது இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

  • அதன் பிறகும் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வராததை அடுத்து, ஒவ்வொரு நாளும் 500 முதல் 550 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கிட்டத்தட்ட அனைத்துத் தெருக்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன.

  • மருத்துவ அலுவலர், மருத்துவச் செவிலியர், ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர், சுகாதார ஆய்வாளர், நகர சுகாதாரச் செவிலியர், களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அடிப்படை சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ முகாம் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

  • மே 8 முதல் ஜூலை 14 வரை சென்னையில் 17,143 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவ முகாம்களின் மூலம் 10,65,981 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளன. 55,194 பேரிடம் கரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

  • 50,599 பேரிடம் கரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜூலை 12 வரை 12,237 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறுந்தகவலில் பரிசோதனை முடிவு

  • இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று, அறிகுறி இருப்பவர்கள் குறித்துத் தகவல் சேகரிக்கிறார்கள். அறிகுறி இருப்பவர்களை மருத்துவ முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்துகிறார்கள்.

  • கரோனா பரிசோதனை எடுத்தவர்களும் அவருடன் வீட்டில் வசிப்பவர்களும் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

  • தொடக்கத்தில், பரிசோதனை செய்துகொள்பவர்கள் மூன்று நாட்களுக்குள் சோதனை முடிவு குறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றால், தொற்று ஏற்படவில்லை என்று புரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. பின்னர், தொற்று இல்லாதவர்களுக்கு அதைக் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டு பின்பற்றப்பட்டுவருகிறது.

  • அதே நேரத்தில், ஜூலை 1 முதல் தொழில் வணிக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பொதுமக்கள் வெளியிடங்களில் புழங்குவதும் அதிகரித்துள்ளது.

  • இதனால், தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்துக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உடனடிப் பரிசோதனை

  • சென்னையில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் வெற்றிக்குத் தமிழக சுகாதாரத் துறையின் விரைவான திட்டமிடலும் செயல்பாடுகளும் முக்கியக் காரணம். “காய்ச்சல் இருப்பவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்கள் என்று கண்டறிந்ததும் உடனடியாக அதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம்.

  • சற்றும் காலம் தாமதிக்காமல், வைரஸைத் தேடிச்செல்லும் திட்டமாகக் காய்ச்சல் முகாம்களை விரிவுபடுத்தினோம்” என்கிறார் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

  • சத்யவாணி முத்து நகரில் முதலில் தொடங்கப்பட்ட இந்தக் காய்ச்சல் முகாம்கள், படிப்படியாகத் தொண்டை வலி, சுவாசப் பிரச்சினை போன்ற மற்ற அறிகுறிகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

  • அறிகுறிகள் கண்டறியப்படுபவர்களை அடுத்த நாள் வேறொரு இடத்தில் இருக்கும் பரிசோதனை மையத்துக்கு வரச் சொல்லி எக்ஸ்-ரே, கரோனா பரிசோதனை போன்றவை எடுக்கப்பட்டன.

  • விரைவிலேயே, கரோனா பரிசோதனை அறிகுறி கண்டறியப்படும் நாளிலேயே முகாம் நடத்தப்பட்ட இடத்துக்கு மிக அருகிலேயே கரோனா பரிசோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

  • ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை என்ற நிலை மாறி, ஒரே ஒரு அறிகுறியுடன் இருப்பவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

குவிமையச் சோதனை

  • ஜூன் 19 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின்போது, மருத்துவ முகாம்கள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டன. தெருமுனை முகாம்களும் தொடங்கப்பட்டன.

  • நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து, சோதனை மாதிரிகளைச் சேகரிக்கும் குவிமையச் சோதனை (போகஸ் டெஸ்ட்டிங்) அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது.

  • தொற்று கண்டறியப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தொடர்புகொண்டிருந்த மற்றவர்களையும் வரவழைத்து அறிகுறி இருக்கிறதா என்று கண்டறிந்ததால், தொற்றுப் பரவல் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டது. தெருமுனை மருத்துவ முகாம்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பும் ஒரு முக்கியக் காரணம்.

  • காய்ச்சல் முகாம்கள் தவிர, தொண்டு நிறுவனங்கள் மூலம் 1,979 குடிசைப் பகுதிகள் வகைப்படுத்தப்பட்டன. அங்கு, 150 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற கணக்கில் 14,000 தன்னார்வலர்கள் மூலமாக அறிகுறி இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

  • இந்த நடவடிக்கைகளால் சென்னையில் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

  • சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி மற்ற மாவட்டங்களில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நன்றி: தி இந்து (21-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories