TNPSC Thervupettagam

விளிம்புநிலை: ஆழப் பார்வை தேவை

September 29 , 2024 105 days 149 0

விளிம்புநிலை: ஆழப் பார்வை தேவை

  • இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்துவிட்டது, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நவம்பர் 14இல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களுக்கு இலங்கைவாழ் தமிழர்களின் நிலை குறித்தும் அவர்களுடைய உரிமைகள் குறித்தும் பொது மேடைகளில் அதிகம் பேசப்படும். தமிழ்நாட்டில் தமிழ் தேசியவாதிகள் இதில் முன்னிலை வகிப்பார்கள்.
  • இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு ‘இலங்கைத் தமிழர்கள்’ என்றால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒரே சமூகத்தவர்தான் என்றே பாவிப்பார்கள். இலங்கைத் தமிழர்கள் என்றால் யாழ்ப்பாணத் தமிழர்கள், முப்பதாண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர், விடுதலைப் புலிகளின் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரே நினைவுக்கு வருவார்கள். இவர்களைத் தவிர ஏனையோர் புறக்கணிக்கப்படுவார்கள் அல்லது மறக்கப்பட்டவர்களாகிவிடுவார்கள்.
  • இன, மத அடையாளங்கள் மட்டுமே பொதுவானதாக இல்லாத நாடுகளில் இலங்கையும் ஒன்று; எனவே, மற்றவர்களுக்கு இதில் உள்ள பிரிவுகள் எளிதில் புலப்படாது, குழப்பவும் செய்யும். மத அடிப்படையில் ‘இந்துக்கள்’ என்று பார்த்தால் இன அடிப்படையில் அவர்கள் பிரிந்தும் இருக்கிறார்கள். தமிழ் பேசுகிறவர்கள் ‘தமிழர்கள்’, ஆனால் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களை இவர்களுடன் ஒன்றாகக் கருதுவதில்லை. தாங்கள் தனி ‘இன - மத’ குழுவினர் என்கின்றனர். தமிழர்களுக்குள்ளேயும் சிலவகைப் பிரிவுகள் இருக்கின்றன.

மலையகம் சென்றோம்

  • சில மாதங்களுக்கு முன்னால் எழுத்தாளர் பெருமாள் முருகன், வரலாற்றாசிரியர் ஏ.ஆர்.வேங்கடாசலபதி, தமிழ் புத்தகப் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் ஆகியோருடன் இலங்கைக்குச் சென்றிருந்தேன். அனைவராலும் விரும்பப்படும் தட்ப-வெப்ப நிலையைக் கொண்ட மலையகம்தான் நாங்கள் சென்ற இடம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட பிறகு அப்பகுதியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் அழைப்பையேற்று தேயிலைத் தோட்டப் பகுதிக்குச் சென்றோம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தொழிலாளர்களைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வலுக்கட்டாயமாகக் கொண்டுபோய்க் குடியமர்த்தினார்கள்.
  • நூற்றாண்டுகளாக இலங்கையின் வடக்கில் வாழும் தமிழர்களைப் போல அல்லாமல், இவர்கள் பிறகு குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களை ‘மலையகத் தமிழர்கள்’ என்று அழைத்தனர். இலங்கையில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட, கடுமையாக ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழ்கின்றனர்.

குடியுரிமை மறுப்பு

  • இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு மக்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தை 1948இல் அரசு இயற்றியது. மலையகத் தமிழர்களை அது ‘நாடற்றவர்கள்’ என்று வகைப்படுத்தி குடியுரிமை அற்றவர்களாக்கியது. குடியுரிமை பெறுவதற்காக 2003 வரையிலும்கூட அவர்கள் போராட வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டு குடியேற்றப்பட்ட தமிழர்களின் இடைவிடாத கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கும் வகையிலும் இலங்கை அரசுடன் 1964, 1974ஆம் ஆண்டுகளில் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் அவர்களில் சிலரை மீண்டும் இந்தியாவுக்கே திரும்ப அழைத்துக் குடியுரிமை தர இந்திய அரசு முன்வந்தது.
  • ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ என்ற அரசியல் கட்சி, ‘தமிழர் முற்போக்கு கூட்டணி’ என்ற அரசியல் அமைப்பு ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு அரசியல், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்ற நிலையிலும் ‘மலையகத் தமிழர்கள்’ சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் விளிம்புநிலை மக்களாகத்தான் வாழ்கிறார்கள். இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய தமிழர்களும் அரசு ஒப்புக்கொண்டபடி சொந்தமாக நிலம் பெறுவதற்காக இன்றளவும் இந்தியாவிலும் போராடுகிறார்கள்.

பதிப்பிக்க என்ன உதவிகள்?

  • மலையகத் தமிழ் எழுத்தாளர்களுடன் கண்டிக்கு அருகில் உள்ள ஹட்டன் என்ற இடத்தில் கலந்துரையாடினோம். தங்களுடைய ஆக்கங்களை எப்படிப் பதிப்பிக்கிறார்கள், நாங்கள் எப்படி உதவிசெய்யலாம் என்ற கேள்வியை வேங்கடாசலபதி கேட்டார். இலங்கைத் தமிழ் இலக்கிய வட்டாரங்கள் தங்கள் குரல்களைக் கேட்பதில்லை என்றும் தங்களுக்கு அங்கீகாரமே இல்லை என்றும் வருத்தம் தோய்ந்த குரல்கள் எழுந்தன. அதில் இரண்டு இன்னும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நடப்பு அரசியல் – வாழ்க்கை முறை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட நவநாகரிக படைப்புகளாக இருந்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார் ஒருவர்.
  • மலையகத் தமிழர்களின் அவல வாழ்க்கையை கண்முன் கொண்டுவரும் படைப்புகள், உண்மைகளை முகத்தில் அறைந்தார்போல் சொல்வதால் அவர்களால் ஏற்க முடியவில்லை என்பதை இன்னொருவர் புரியவைத்தார். எங்களை ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்’ என்று அடைமொழியிட்டு அழைப்பதே எங்களுடைய நசிவுக்குக் காரணம் என்று இன்னொரு இளம் எழுத்தாளர் வேதனைப்பட்டார். தேவையற்ற இந்த சுமையைத் தூக்கி எறிய மலையகத் தமிழர்களில் இளம் சந்ததியினர் விரும்புகின்றனர். இப்படி அழைப்பதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை, மாறாக நாங்கள் அனாதைகள்போல யாருமற்ற நிலத்தில் வீசப்படுகிறோம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
  • வித்தியாசமான குரல்களை வரவேற்கும் பதிப்பாளர்களை ஏன் இந்த மலையகத் தமிழர்கள் நேரில்போய் சந்தித்துப் பேசக் கூடாது என்று எங்களுக்குள் பேசினோம். சுதந்திரமான சிந்தனை இருந்தால்தான் அப்படிக் கேட்கும் துணிவு வரும் என்பதை நாங்கள் மறந்துவிட்டோம். கல்வியும் செல்வமும் அரசியல் செல்வாக்கும் உள்ள வடக்குத் தமிழர்களைப் போல மலையகத் தமிழர்கள் இல்லை, அவர்கள் இந்தியாவில் இருந்தபோதும், இலங்கையில் வாழும்போதும் ஒடுக்கப்பட்டவர்கள்தான்!

விளிம்புநிலை மக்கள்

  • விளிம்புநிலை மக்கள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பதால் ஏற்பட்ட பிரச்சினை இது. இதை நாம் இலங்கையில் மட்டுமல்ல வேறிடங்களிலும் செய்கிறோம். இலங்கையின் வடக்கில் வாழும் தமிழர்களுடைய குரல்கள் வலுமிக்கவை, காரணம் அவர்கள் நன்கு படித்தவர்கள், முன்னேறியவர்கள், அரசியலில் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் வலிமை பெற்றவர்கள். யாழ்ப்பாணத் தமிழர்களுக்காகப் போராடியவர்கள் இதற்கு நல்ல உதாரணம்.
  • இப்படி மக்கள் சமூகங்களை ஒப்பிடுவது பார்ப்பவரின் நிலையையும் பொருத்தது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு நாடு, இனம், சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று பகுத்துப் பாராமல், ‘தெற்காசியர்கள்’ என்று அனைவரையும் பொதுச் சமூகமாக பார்ப்பது அவர்களுடைய வழக்கம். அதற்கு அடுத்த நிலையில், அவரவர் நாடுகள் அடிப்படையில் பிரித்துப் பார்க்கின்றனர். இன்னும் ஆழமாக அவர்களை வகைப்படுத்தினால் முற்போக்காகவும் நேராகவும் களங்கமற்றும் உள்ள பார்வையே பழுதுபடும்.
  • இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சென்ற முற்பட்ட சாதியினர் அதிக இடங்களைப் பெற, இந்த ஆழமற்ற கண்ணோட்டமும் ஓரளவுக்கு உதவுகிறது. அடுத்தடுத்த தலைமுறைகளிலும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த – மற்றவர்களுடன் பகிரப்பட வேண்டிய – இடங்களில் நீடிக்கின்றனர். தெற்காசியர்களுடைய நிலை பற்றிய குரல் இந்தியப் பின்னணியில் அங்கும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
  • இந்தியாவின் சமூக அமைப்பு, பண்பாடு, சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் ஆகியவை பற்றிய குழப்பமான புரிதல்தான் அமெரிக்காவில் நிலவுகிறது. அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குச் செல்ல முடிந்தவர்களால், சாதி அடிப்படையிலான பாகுபாடு அங்கும் பேசுபொருளாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

  • பொது சமூகத்தில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்ட சமூகங்களுக்குள்ளும் நிலவும் அதிகார அசமத்துவம், இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு வரை நீள்கிறது; பட்டியல் இன சமூகத்துக்குள்ளும் மேலும் அழுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு செல்லும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.
  • இடஒதுக்கீட்டு வழக்கில் ‘உயர் வருவாய்ப் பிரிவினரே’ சலுகைகளைத் தொடர்ந்து பெறலாமா என்ற அதன் கேள்வியை சற்றே ஒதுக்கிவைப்போம். அதேசமயம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக – அரசியல் களம் சார்ந்து தெரிவித்துள்ள அச்சங்கள் இந்த விவகாரத்தில் அவசியம் பரிசீலிக்கப்பட வேண்டியவை. பட்டியல் சமூகங்களிடமிருந்தே வந்தாலும் உள் ஒதுக்கீடுகளை எடுத்த எடுப்பிலேயே சரியல்ல என்று நிராகரிப்பதும் சிக்கல்களையே தோற்றுவிக்கும்.
  • சமூகத்தின் இதர பிரிவினருடைய பொதுவான கண்ணோட்டம், ‘பட்டியல் இனத்தவர் விளிம்புநிலையில் வாழ்கின்றனர் அவர்களை கைதூக்கிவிட வேண்டும்’ என்பதே. அதற்கான சட்டகத்தை உருவாக்கும்போது அந்தப் பிரிவில் உள்ள அனைவருமே ஒரே மாதிரியான நிலையில் வாழ்கிறார்கள் என்பதே அனுமானம். அந்தக் குழுவிலும் வலிமையானவர்கள் – செல்வாக்குள்ளவர்களே அதிகம் பலன் பெறுவது, சமூகங்களில் எப்போதும் நடப்பதுதான்.
  • வெவ்வேறு பிரிவினர் வெவ்வேறு நிலைகளில் அழுத்தப்பட்டு விளிம்புநிலையிலேயே வாழ்கின்றனர். எனவே, அதற்கேற்ற கூடுதல் அல்லது துணை ஒதுக்கீடுகளும் அவசியம். அப்படிப்பட்ட செயலுக்கு எதிரான குரல்கள், ‘இடஒதுக்கீடு கூடாது’ என்று முற்பட்ட சாதிக்காரர்கள் சொல்லும் குரலைப் போலவே இருப்பது துரதிருஷ்டம்.
  • சமூகத்தின் ஒவ்வொரு அடுக்காக துருவிப்பார்த்து, யாருக்கெல்லாம் சலுகை கிடைக்கவில்லை அல்லது உரிமை மறுக்கப்பட்டது என்று அரசு செயல்பட முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். தங்களுடைய தேவைகள் பூர்த்தியானவுடன், அரசும் செயலை நிறுத்திக்கொண்டால் போதும் என்றே கருதுகின்றனர். இப்படி மேற்கொண்டு சமூக நீதியை வழங்கும் செயலைக் கொண்டுசெல்ல வேண்டாம் என்று தடுப்பது நிர்வாகத்தின் வசதிக்காக மட்டுமல்ல, இன்னமும் இவற்றைப் பெற முடியாமல் அழுத்தப்பட்டு கிடக்கிறவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாததாலும்தான்.
  • சாதி என்பதே வெவ்வேறு நிலைகளில் உள்ள அசமத்துவம் என்றார் அம்பேத்கர். எல்லா அசமத்துவங்களுமே வெவ்வேறு நிலைகளில் ஸ்திரப்படுத்தப்பட்டவைதான் என்பேன் நான். நம் கண்பார்வைக்குக் கீழே உள்ள அனைவரும் ஒன்றுதான், அதற்கும் மேல் தோண்டித்துருவிப் பார்ப்பதற்கு ஏதுமில்லை என்று, வெவ்வேறு நிலையில் ஸ்திரப்பட்டுவிட்டவர்கள்தான் கூறுகின்றனர். பாகுபாடு மட்டும் வெவ்வேறு நிலையில் உள்ளவை அல்ல, அதைப் போக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமும் தீர்வுகளும்கூட அப்படிப்பட்டவைதான் என்பேன்.
  • நீண்ட குழாய் வழியாக அதன் மறுமுனையைப் பார்க்கும் பார்வை ஆபத்தானது. அது இடையில் உள்ளதைப் பார்க்க மறுக்கும். மக்களை வெவ்வேறு வகையினராக வகைப்படுத்துவதும் பிரிப்பதும் அவசியம். வரிசையின் கடைசியில் உள்ளவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும். அதுவரையில் நமது பார்வையையும் தளர்த்தக் கூடாது, செயலையும் நிறுத்தக் கூடாது. குரல் வலுமிக்கவர்கள் நம்முடைய கவனத்தை திசைத்திருப்ப அனுமதிக்கக் கூடாது.

நன்றி: அருஞ்சொல் (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories