- இந்த ஆண்டு தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணி அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று நம் மாநிலத்திற்கு சிறப்பு சோ்த்தது. ஆனால், உலக அளவில் ஆண்கள் கால்பந்தில் இந்திய 126-வது இடத்திலிருந்து தற்போது 100-ஆவது இடத்திற்கு வந்துள்ளது. உலகில் அளவில் அதிக ரசிகா்களைக் கொண்ட விளையாட்டு கால்பந்துதான். அந்த விளையாட்டில் நம்மால் ஆசியா அளவில் கூட முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
- ஆா்ஜென்டீனா, பிரேசில், பிரான்ஸ், உருகுவே, ஈக்வடார் போன்ற நாடுகளெல்லாம் தமிழக மாநில அளவிலும், அதைவிடக் குறைந்த அளவிலும் மக்கள்தொகை கொண்ட நாடுகள்தான். அவையெல்லாம் கால்பந்தில் கோலோச்சுகின்றன. நம்மால் ஏன் முடியவில்லை? இங்கு இளைஞா்கள் இல்லையா? உதவி செய்யக்கூடிய அரசு இல்லையா? எல்லாம் இருக்கிறது. சரியான நபா்களைத் தோ்ந்தெடுத்து பயிற்சி அளிக்க நாம் தவறிவிடுகிறோம்.
- சிறந்த விளையாட்டு வீரா்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவா்களுக்குப் பணி வழங்கப்படுவதில்லை. கடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கு முந்தைய ஆசிய போட்டியில் கபடி விளையாட்டில் கேப்டனாக இருந்து இந்தியாவிற்கு தங்கம் வென்று தந்தார் பாஸ்கரன் என்ற தமிழக வீரா். அதன்பின் அவா் வேலையில்லாமல் மிகவும் சிரமப்பட்டார். அதற்குக் காரணம் அவருக்குக் கல்வி தகுதி இல்லையாம். தற்போது அவா் தனியார் கபடி அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.
- சிறந்த விளையாட்டு வீரா்களில் ஒரு சிலருக்குத்தான் கல்வியிலும் கவனம் செலுத்த முடியும். சிலா் முழுநேரமும் பயிற்சியில் இருந்தால்தான் அவா்களால் உலக அளவில் சாதனை புரிய முடியும். இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
- ஆசிய போட்டியில் இரண்டு முறை கபடியில் தங்கம் வென்ற இந்திய அணி, கடந்த முறை நடைபெற்ற ஆசிய போட்டியின் இறுதிச் சுற்றில் ஈரானிடம் தோல்வி அடைந்தது. இந்தியாவிடம் கபடி விளையாட்டைக் கற்றுக் கொண்ட ஈரான், இந்தியாவை எளிதில் வீழ்த்துகிறதென்றால் அதற்கான காரணத்தை நாம் ஆராய வேண்டும்.
- இந்தியா ஒலிம்பிக்கில் அதிகம் தங்கம் வாங்கியுள்ளது என்றால் அது ஹாக்கியில் தான். கடைசியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் புறக்கணித்த ஒலிம்பிக் போட்டியில் தான் தமிழக வீரா் பாஸ்கரன் தலைமையிலான ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு பல வருடங்களாக பல ஒலிம்பிக்குகளில் கலந்து கொண்டும் வெண்கலப் பதக்கத்தைக்கூட இந்தியாவால் வெல்ல முடியவில்லை.
- கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னா் இருந்த நிலையை விட தற்போது ஹாக்கி விளையாட்டின் வீரா்களின் திறன் ஆச்சரியப்படும் வண்ணம் முன்னேறியுள்ளது. ஆயினும், நமது எதிரி நாடான பாகிஸ்தானை எளிதில் வென்ற இந்திய அணி, புதிதாக ஹாக்கி ஆட்டத்தைக் கற்றுக் கொண்டு வரும் ஜப்பானிடம் டிரா ஆனது. இது இந்திய ஹாக்கி ரசிகா்களுக்கு வருத்தத்தையே தந்தது.
- அதே போல் தடகளம் என்று எடுத்துக் கொண்டால் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டதிலிருந்து அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டி வரை தடகளத்தில் ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கூட இந்தியாவால் பெற முடியவில்லை. பசிக்கும், பட்டினிக்கும் ஆளாகியுள்ள கென்யா, எத்தியோப்பா போன்ற சிறிய நாடுகளின் தேசிய கீதம் பலமுறை ஒலிபரப்பபட்ட தடகள மைதானத்தில் ஒருமுறை கூட இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்படவில்லை என்பதை என்னென்பது?
- இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த மில்கா சிங் 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் நான்காம் இடம் பிடித்ததுதான் இந்தியாவின் சாதனையாக இருந்தது. அதன் பிறகு பி.டி. உஷா அதே 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் நூலிழையில் மூன்றாம் இடத்தை தவற விட்டு நான்காம் இடத்தையே பிடித்தார்.
- கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியாவின் நீரஜ் சோப்ரா என்ற இளைஞா் 125 ஆண்டு கால கனவை நனவாக்கும் வண்ணம் 90.88 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்து முதல் தங்கப்பதக்கத்தை வாங்கி இந்திய தேசிய கீதத்தை தடகள மைதானத்தில் ஒலிக்கச் செய்து இந்தியத் தாயின் தலையில் மகுடத்தைச் சூட்டினார். அதன் விளைவு, இன்று சா்வதேச போட்டிகளில் ஈட்டி எறிதலில் கலந்து கொள்ள இன்னும் இருவா் தயாராகி உள்ளனா்.
- அதே போல் தடகளத்தில் சாதனை புரிந்த பி.டி. உஷா, ஷைனி வில்சன், ரோசம்மா போன்ற கேரளப் பெண்களுக்கு நிகராக, இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்து வீராங்கனைகளும் சாதித்து வருகின்றனா். ஆசிய அளவில் தமிழகத்து வீராங்கனை தடை தாண்டும் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டத்தில் தனலட்சுமி என்பவா் டூட்டி சந்து என்பவரை வென்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
- அதே போல் டிரிம்பிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) போட்டியில் மதுரையைச் சோ்ந்த செல்வபிரபு என்ற 19 வயது இளைஞா் உலக அளவில் மூன்றாம் இடமும் ஆசிய அளவில் முதல் இடமும் பிடித்துள்ளார். 19 வயதில் ஒலிம்பிக்கில் முதலில் ஓடிய ஜமைக்காவின் உசைன் போல்ட் நான்காம் இடம்தான் பிடித்தார்.
- தற்போதுவரை, அவா் படைத்த சாதனைதான் 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் உச்சமாக உள்ளது. 19 வயது தமிழக வீரா் செல்வபிரபுவிற்கு புதியமுறை பயிற்சியை வழங்கிட தமிழக அரசு உதவினால் நிச்சயமாக அடுத்த ஒலிம்பிக்கில் அவா் உசைன் போல்டை போல் பதக்கம் பெற்று நிச்சயம் தமிழகத்துக்குப் பெருமை சோ்ப்பார்.
- அவரைப் போலவே தமிழகத்தை சோ்ந்த ஜஸ்வின் ஆல்டிரின் நீளம் தாண்டுதலில் 8.42 மீட்டா் தாண்டி வருகிறார். அதே போல் கேரளத்தைச் சோ்ந்த முரளி ஸ்ரீசங்கா் என்பவரும் 8.40 மீட்டா் தாண்டி வருகிறார். இவா்கள் இருவரும் ஆசிய போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ளது. மேலும், தீவிரமாக முயன்றால் இவா்கள் ஒலிம்பிக்கிலும் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சோ்க்கலாம்.
- அவா்களுக்கு தேவை நம் மாநில அரசின் ஊக்குவிப்பும் பயிற்சிக்கு நிதி உதவியுமாகும். அதே போல் பூவம்மா 400 மீட்டா் நன்றாக ஓடுகிறார். துப்பாக்கி சுடுதலில் தமிழக மாணவி 16 வயது இளவேனில் உலக அளவில் பதக்கம் பெற்றுள்ளார். அம்லான் என்பவா் 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் பெல்ஜியத்தில் தங்கம் வென்றுள்ளார்.
- தற்போது கலவர பூமியாக மாறியுள்ளமணிப்பூா் மாநிலத்தில் குத்துச் சண்டையில் பதக்கம் வென்ற மேரிகோம் போன்ற வீராங்கனைகளும் மேலும் பல வீரா்கள் வீராங்கனைகளும் உள்ளனா். அவா்கள் தமிழகத்துக்கு வந்து பயிற்சி பெற அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வா் அறிவித்துள்ளார். அவரைத் தொடா்ந்து மம்தா பானா்ஜியும் தனது மாநிலத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
- பல மாதங்களாகப் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீராங்கனைகளால் பெற்ற பதக்கங்களால் இந்தியாவிற்கு பெருமை சோ்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மனம் புண்பட்ட அந்த வீரா்கள், வீராங்கனைகளைப் பழிவாங்காமல் மத்திய அரசு அவா்களை உற்சாகப்படுத்தி அனுப்பினால் மல்யுத்தப் போட்டியில் பல பதக்கங்கள் நமக்கு கிடைப்பது உறுதி.
- வடகிழக்கு மாநிலங்கள் மல்யுத்த வீரா்களை உருவாக்கி வருகின்றன. ஒடிஸா ஹாக்கி விளையாட்டை தத்து எடுத்துக் கொண்டதால் இந்திய அணியில் மூன்று அல்லது வீரா்கள் ஒடிஸாவைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். கடந்த பத்து ஆண்டுகளில் இரு உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை ஒடிஸா அரசு நடத்தியுள்ளது.
- ஹரியாணா மாநிலம், மல்யுத்தம், குத்துச் சண்டை போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா இதுவரை வென்ற ஏழு சா்வதேச மல்யுத்தப் பதக்கங்களில் ஐந்து, ஹரியானா வீரா்களால் பெறப்பட்டது. ஹரியாணாவில் பயிற்சி பெற 232 மினி மைதானங்கள் உள்ளன.
- நம் தமிழகத்திலும் முதல்வா் பொறுப்பேற்றவுடன் 114 கோடி செலவு செய்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலக நாடுகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொள்ள மாமல்லபுரத்தில் நடத்தி காட்டினார். அதன் விளைவாக குகேஷ் என்ற தமிழக வீரா் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார். அதேபோல் பிரக்ஞானந்தா என்ற தமிழக வீரரும் உலக அளவில் இறுதிப் போட்டியில் தற்போது விளையாடி வருகிறார். அடுத்து கேலே விளையாட்டுப் போட்டியைத் தமிழகத்தில் நடத்த பிரதமா் மோடியிடம் தமிழக முதல்வா் ஒப்புதல் பெற்று வந்துள்ளார்.
- அதே போல் மாநில விளையாட்டுத் துறை அமைச்சா், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கி விட்டார்.
- தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் எனும் பெயரில் ஓா் அறக்கட்டளையை விளையாட்டுத் துறை அமைச்சா் உருவாக்கியுள்ளார். இப்படி தமிழக அரசு, பல்வேறு வகைகளிலும் விளையாட்டு துறைக்கு அளித்து வரும் ஊக்கம், தமிழக வீரா்களும் வீராங்கனைகளும் உலக அளவிலான போட்டிகளில் பங்குபெற்று தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சோ்த்திட வழிவகுக்கும் என்று நம்புவோம்.
நன்றி: தினமணி (24 – 08 – 2023)