- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடத்தப்பட இருப்பது மகிழ்ச்சிக்குரியது. மாமல்லபுரத்தில் 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹாக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச விளையாட்டு வரைபடத்தில் தமிழ்நாட்டை ஒரு முக்கியப் புள்ளியாக மாற்றுவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கவனம் செலுத்திவருவதை உணர முடிகிறது.
- இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
- இப்போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கம் ரூ.16 கோடி செலவில் புதுப்பிக்கப் பட்டுள்ளது; சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்பப் பயிற்சி ஆடுகளம் உள்ளிட்ட வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டில் இந்தப் போட்டி நடைபெறுவதைச் சிறப்பிக்கும் விதமாக, விளையாட்டு அரங்கத்தின் ஒரு பகுதிக்குக் ‘கலைஞர் நூற்றாண்டு மாடம் (பெவிலியன்)’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
- செஸ் ஒலிம்பியாட் போலவே ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பையும் மிகுந்த போட்டிக்கு இடையில்தான் தமிழ்நாடு அரசு வென்றெடுத்திருக்கிறது. ஒடிஷாவில் ஹாக்கி உலகக் கோப்பை நடைபெற்ற நிலையில், இந்தப் போட்டியையும் அங்கேயே நடத்துவதற்கான திட்டம் இருந்தது. தமிழ்நாடு இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிஷாவுக்குச் சென்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்களைச் சந்தித்துப் பேசி, தமிழ்நாட்டுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றிருப்பது பாராட்டத் தக்கது.
- சர்வதேசப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு இணையாக மாநிலம் முழுவதும் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் திறமையுடன் விளங்கும் மாணவர்களையும் இளைஞர்களையும் மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிப்பது, அரசு சார்பில் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது ஆகியவற்றில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து கவனம் செலுத்திவருவதும் பாராட்டத்தக்கது.
- அதே நேரம், விளையாட்டுகளில் திறமையை வெளிப்படுத்தும் மாணவர்கள் மட்டுமல்லாமல் விளையாட்டில் ஆர்வம் செலுத்தாத மாணவர்களுக்கும் விளையாட்டின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு, விளையாட்டில் ஈடுபடுவதற்கான பயிற்சியை அவர்களுக்கு அளிப்பதிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதிலும் அரசு அக்கறை செலுத்த வேண்டும். மாணவப் பருவத்தில் உள்ள அனைவரையும் விளையாட்டில் ஈடுபடச் செய்வதை அரசு இலக்காகக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு விளையாட்டில் சிறுவயதிலிருந்தே தொடர்ந்து ஈடுபடுவது உடலைக் கட்டுக்கோப்பாகப் பேணுவதற்கு முதன்மையான உந்துசக்தியாக அமையும்.
- மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்படாமல் தடுக்கும். அத்துடன், குழு விளையாட்டுகளில் ஈடுபடுவது இளைஞர்களிடையே சாதி, மதம் கடந்த நட்புகளையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதில் பெரும் பங்காற்ற முடியும்.
- வளமான வருங்காலத்தைக் கட்டியெழுப்ப விளையாட்டின் அளப்பரிய பங்களிப்பை உணர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் அனைவரையும் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கவேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 08 – 2023)