- இந்திய விளையாட்டுத் துறையில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் விளையாட்டுத் துறை மெத்தனமாகச் செயல்படுவதுதான் வேதனையளிக்கிறது. இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக மக்களவை உறுப்பினருமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார் நடவடிக்கையில் காட்டப்படும் சுணக்கம் இதற்குச் சமீபத்திய உதாரணம்.
- இதே குற்றச்சாட்டுகளுடன் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திச் சில மாதங்களுக்கு முன்னர் மல்யுத்த வீரர் / வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகியிருப்பது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
- இந்நிலையில், இது தொடர்பாக வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யாததற்கு டெல்லி காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
- விளையாட்டுத் துறையில் இதற்கு முன்னர் அளிக்கப்பட்ட பல புகார்களும் வெறுமனே துறை நடவடிக்கைகளாகவே நின்றுவிட்டன. தடகளப் பயிற்சியாளர் பி.நாகராஜனும் கால்பந்தாட்டப் பயிற்சியாளர் ஆம்புரோஸும் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ளது விதிவிலக்கு.
- ஆனால், 2011 ஜனவரியில் நடைமுறைக்குவந்த தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதி 7இல் புகார்களைத் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு விசாரித்து, அது இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாக இருந்தால், சட்ட நடவடிக்கைகளுக்குப் புகார் அளிக்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (POSH Act 2013) சட்டப் பிரிவு 2இன்படி, விளையாட்டும் ஒரு பணியிடமாகக் கருத வேண்டும் எனத் தெளிவாகக் கூறுகிறது. 2019இல் அமைக்கப்பட்ட ‘பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நாடாளுமன்றக் குழு அறிக்கை’ விளையாட்டுத் துறையில் பதிவுசெய்யப்படாத பாலியல் புகார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டியது.
- அதிகாரமும் அரசியல் செல்வாக்கும் உள்ள ஆண்கள் கையில்தான் இந்திய விளையாட்டுத் துறை இருக்கிறது. வீராங்கனைகளின் தேர்வுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் இவர்கள்தாம் இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் வீராங்கனைகள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.
- மேலும், விசாரணைகள் பெரும்பாலும் விளையாட்டுக் கழகத்துக்குள்ளே நின்று விடுகின்றன. முறையான ஆதாரம், சாட்சிகள் இருந்தாலும்கூடப் புகார்கள் உள்ளேயே பேசிச் ‘சரிசெய்ய’ப்படுகின்றன. விசாரணைக் குழு அளிக்கும் தண்டனைகளும் பெயரளவிலானவைதான். குற்றம் நிரூபணமானதும் குழு நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின்படியான விசாரணைக்குக் கொண்டுசெல்வதில்லை.
- பதவிப் பறிப்பு, சன்மானக் குறைப்பு போன்றநடவடிக்கைகள்தாம் எடுக்கப்படுகின்றன. விசாரணையில் காட்டப்படும் தாமதம் இன்னொரு பிரச்சினை. உதாரணமாக, 2014இல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டபோது, அவர் அந்தப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.
- பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் வலுவாகவே உள்ளன. அதை நடைமுறைப்படுத்ததுவதில்தான் சிக்கல்.விளையாட்டுத் துறைக்குள் நடக்கும் பாலியல் குற்றங்களைக் குற்ற வழக்குகளாகப் பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.விளையாட்டுத் துறை அமைச்சகம் வகுத்த விதிகளைச் சமரசமின்றிப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். சர்வதேச அளவில் நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வீராங்கனைகளுக்கு, உரிய நீதி கிடைக்க அரசு உறுதிபூண வேண்டும்!
நன்றி: தி இந்து (28 – 04 – 2023)