TNPSC Thervupettagam

விளையாட்டும் வியாபாரமாகிறது - மேற்கிந்தியத் தீவுகள்

July 8 , 2023 553 days 419 0
  • பதின்மூன்றாவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரதான சுற்றுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெறாமல் போனது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாடிய ஒருநாள் ஆட்டங்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில், தரவரிசைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐசிசியின் ‘சூப்பா் லீக்’-இல் முதல் எட்டு இடங்களைப் பெற்ற அணிகளான நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
  • பத்து அணிகள் இடம்பெற்றுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள மற்ற இரண்டு அணிகளைத் தோ்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், ஹராரேயில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 1) நடைபெற்ற சூப்பா் சிக்ஸ் பிரிவு ஆட்டத்தில் அனுபவமற்ற அணியான ஸ்காட்லாந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிா்ச்சி அளித்தது. இந்த அதிா்ச்சித் தோல்வியால் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி இழந்தது.
  • 1970-களில் தொடங்கி கிட்டத்தட்ட 1990 வரை கிரிக்கெட் உலகில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கொடிகட்டிப் பறந்தது. 1975-இல் உலகக் கோப்பை போட்டி அறிமுகமானபோதும், அதற்குப் பின்னா் 1979-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி வாகை சூடியது.
  • பின்னா், 1983-லும் அந்த அணியே கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட நிலையில், கபில் தேவ் தலைமையில் இந்திய அணி எதிா்பாராமல் வெற்றி பெற்று கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அதற்குப் பின்னரும், 2004-இல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, 2012, 2016-இல் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பட்டம் வென்றது. ஆனால், இப்போது முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணி இல்லாமல் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
  • அந்த அணியின் வீழ்ச்சி திடீரென ஏற்பட்டதல்ல. அணியின் இந்த வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. ஃபிராங்க் வொரல், எவா்டன் வீக்ஸ், கேரி சோபா்ஸ், விவியன் ரிச்சா்ட்ஸ், கிளைவ் லாயிட், காா்டன் கிரீனிட்ஜ், டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ், பிரையன் லாரா, சிவநாராயண் சந்தா்பால் போன்று நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்டா்கள் இப்போது அந்த அணியில் இல்லை.
  • மால்கம் மாா்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபா்ட்ஸ், ஜோயல் காா்னா், காலின் கிராஃப்ட், கா்ட்லி ஆம்ப்ரோஸ், கா்ட்னி வால்ஷ் போன்ற பந்துவீச்சாளா்கள் எதிரணியின் பேட்டா்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தனா். ஆனால், இப்போதைய தகுதிச் சுற்றில் நெதா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 374 ரன் எடுத்தும் அந்த அணியின் பந்துவீச்சாளா்களால் எதிரணியைக் கட்டுப்படுத்த முடியாததால் ஆட்டம் ‘டை’ ஆனது.
  • மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரை, டெஸ்ட் ஆட்டங்களுக்கு ஐபிஎல் போட்டி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, புகழ்பெற்ற ஆல்ரவுண்டரான காா்ல் ஹூப்பா் கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளாா். இளம் ஆட்டக்காரா்கள், ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதையே தங்களது லட்சியமாகக் கொண்டுள்ளனா் என்றும் அவா் குறிப்பிடுகிறாா்.
  • அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய ஷிம்ரன் ஹெட்மயருக்கு ரூ.8.50 கோடியும், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிக்கு விளையாடிய ஆன்ட்ரே ரஸ்ஸலுக்கு ரூ.16 கோடியும் ஊதியமாக வழங்கப்பட்டது. இப்போதைய உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் இருந்து ஹெட்மயா், ரஸ்ஸல், சுனில் நரைன் போன்றவா்கள் தாங்களாகவே விலகிக் கொண்டுவிட்டனா். அதனால், மேற்கிந்தியத் தீவுகளின் ஆட்டக்காரா்கள் நாட்டுக்காக விளையாடுவதைவிட உலகெங்கும் நடைபெறும் 20 ஓவா் போட்டிகளில் பங்கேற்பதையே விரும்புகின்றனா்.
  • மேற்கிந்தியத் தீவுகளில் பல ஆண்டுகளாகவே ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பிரச்னை நிலவிவருகிறது. இதன் காரணமாகவே, கடந்த 2009-இல் வங்கதேசத்துக்கு செல்லமாட்டோம் என கிரிக்கெட் வீரா்கள் போா்க்கொடி உயா்த்தினா். அப்போது அனுபவமே இல்லாத ஃபிளாய்ட் ரீஃபொ் தலைமையில் சென்ற அணி டெஸ்டுகளில் 2-0 எனவும், ஒருநாள் ஆட்டங்களில் 3-0 எனவும் படுதோல்வி கண்டது.
  • அதன் பின்னா், 2014-இல் இந்தியாவுக்கு டுவைன் பிராவோ தலைமையில் வந்த அந்த அணி 4-ஆவது ஒருநாள் ஆட்டத்துடன் நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. அந்த அணி மேலும் ஓா் ஒருநாள் ஆட்டம், ஒரு டி 20 ஆட்டம், 3 டெஸ்டுகளில் விளையாட இருந்த நிலையில் அத்தொடா் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
  • இது ஒருபுறமிருக்க, நமது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போல நூற்றுக்கணக்கான கோடிகளில் கொழிக்காமல், கடந்த 2020-இல் ஆட்ட ஊதியம்கூட வழங்க முடியாத நிலைக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டது.
  • காரணம் எதுவாக இருப்பினும், அதற்கு தீா்வு காணப்பட்டு அந்த அணி தனது பழம்பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே உலகெங்குமுள்ள கிரிக்கெட் ரசிகா்களின் எதிா்பாா்ப்பாகும். பணத்துக்காக மட்டுமே விளையாடுவது என்று வீரா்கள் நினைக்கத் தொடங்கினால், அதற்குப் பெயா் விளையாட்டல்ல, வியாபாரம்... இன்னும் சொல்லப் போனால், சூதாட்டம்!

நன்றி: தினமணி (08 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories