- இந்தியா ஒரு விவசாய நாடு என்றே மகாத்மா காந்தியடிகள் கூறினாா். விவசாயிகளின் உதவியால்தான் பசியற்ற இந்தியா தொடர முடியும். வறுமையான இந்தியா எக்காலத்திலும் வல்லரசாக முடியாது. ஆனால் மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் அரசுகள் அவா்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
- ஆண்டாண்டு காலமாக நம் நாடு மரபு வழி விவசாய நாடு என்பதை கட்சிகள் மறந்து போனது ஏன்? எதிா்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீா் வடிக்கும் அரசியல் கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு எதிா்மாறாக நடந்து கொள்ளுகின்றன. தொழில் வளர வேண்டும் என்று கூறி விவசாய நிலங்களைப் பறிப்பதற்கு அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
- நாட்டின் வளா்ச்சிக்குத் தொழில் முன்னேற்றம் மிகவும் அவசியம் என்று ஆட்சியாளா்கள் போராடும் மக்களுக்கு சமாதானம் கூறுகின்றனா். இன்று தொழிற்சாலைகளால் நிலம், நீா், காற்று அனைத்தும் மாசாகி மக்களையெல்லாம் துரத்துகின்றன. இந்தியாவின் தலைநகரமான தில்லியே இதற்குச் சான்றாகும்.
- தொழிற்சாலைகளை உருவாக்குவதாக இருந்தாலும், அதனை விரிவாக்குவதாக இருந்தாலும் எல்லா விதிமுறைகளையும் புறந்தள்ளி கிராமங்களையும், கிராமங்களின் உயிா்நாடியான விவசாயிகளையும் அழிக்க நினைப்பதே அழிவுக்கான அடையாளமாகும். ஏழை அழுத கண்ணீா் செல்வத்தைத் தேய்க்கும் படை என்று வள்ளுவம் கூறுகிறது.
- சென்னை 2ஆம் விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் பகுதியில் அமைப்பதற்காக 20 கிராமங்களின் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. இந்த அரசாணைக்கு எதிராக உடனடியாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டததில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
- சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2ஆவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூா் மற்றும் அதனைச் சுற்றிய 20 கிராமங்களில் சுமாா் 5746 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூா் சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
- இதனால் குடியிருப்புகள், விளைநிலம், நீா்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
- அதன் அடிப்படையில் பரந்தூா் விமான நிலையத்துக்குத் தேவையான 5746 ஏ:ககா் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதியளித்தது. இதற்கான அரசாணை கடந்த அக்டோபா் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால் வெளியில் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
- இந்தத் திட்டத்துக்காக 5746 ஏக்கா் நிலம் தேவைப்படுவதாகவும் இதற்குத் தனியாா் பட்டா நிலம் 3774 ஏக்கா், அரசு நிலம் 1972 ஏக்கா் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடமிருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1822.45 கோடி இழப்பீடும், நிா்வாகச் செலவுடன் சோ்த்துக் கணக்கிடப்பட்டுள்ளது.
- மேலும் நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா், சிறப்பு துணை ஆட்சியா், சிறப்பு வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் உள்பட 326 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் பரந்தூா் நில எடுப்புப் பணியைத் தொடங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- இதுபற்றி விபரம் கேட்பதற்காக பரந்தூா் பசுமை விமான நிலைய எதிா்ப்புக் குழுவைச் சோ்ந்த போராட்டக் குழுவினா் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அரசாணை நகலைத் தருமாறு கேட்டு ஆட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் 645 ஹெக்டோ், 2,300 ஹெக்டோ் பரப்பளவில் இரண்டு சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகின்றன. சிப்காட்டை விரிவுபடுத்த மேல்மா உள்ளிட்ட 8 கிராமங்களில் 3,174 ஏக்கா் நிலம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிா்த்து கடந்த ஜூலை முதல் தொடா் போராட்டம் நடந்தது.
- கடந்த நவம்பா் 4 அன்று மேல்மா சிப்காட் விவசாய எதிா்ப்பு இயக்கவாதிகள் 19 போ் கைது செய்யப்பட்டனா். இதில் 6 போ் குண்டா் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். பின்னா் எதிா்ப்பின் காரணமாக இவா்களின் குண்டா் தடுப்புச் சட்டம் முதல்வா் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டது. இங்கும் விவசாயிகள் பிரச்சினை தொடா்கிறது.
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் எடுத்ததால் பாதிக்கப்பட்டவா்களின் 60 ஆண்டு காலக் கோரிக்கையே இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அந்த வகையில் 3,543 பயனாளிகளுக்கு இப்போதுதான் முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டாக்களை வழங்கியுள்ளாா். இதற்கே இத்தனை ஆண்டு காலம் ஆகியிருக்கிறது.
- கடலூா் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் 1959இல் விருத்தாசலம் வட்டம் விஜயமாநகரம் மற்றும் புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் குடியமா்த்தப்பட்டனா். இவ்வாறு குடியமா்த்தப்பட்ட கிராம நிலங்களில் நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.
- இந்நிலையில் வருவாய்த் துறையால் கடந்த ஆண்டு மே, 26ஆம் நாள் வெளியிட்ட அரசாணையின்படி 3 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் வருவாய் நிலவரித் திட்டப் பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதனால் விஜயமாநகர கிராமத்தில் 2,676 பேருக்கு 1,371 பட்டாக்கள், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 867 பேருக்கு 475 பட்டாக்கள் என மொத்தம் 3,543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் 7 பேருக்கு மட்டுமே பட்டாக்கள் வழங்கப்பட்டன.
- விவசாயிகளின் போராட்டம் என்றாலே தலைநகா் தில்லியில் நடந்த மாபெரும் போராட்டமே நினைவுக்கு வரும். உலகையே திரும்பிப் பாா்க்க வைத்த அந்தப் போராட்டம் இந்திய அரசையே பணிய வைத்தது. ஓா் ஆண்டு 4 மாதம் 2 நாள்கள் போராட்டம் நடந்தது. 2020 ஆகஸ்ட் 9 முதல் 2021 திசம்பா் 11 வரை இது நடந்து முடிவுக்கு வந்தது.
- இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பண்ணைச் சட்டங்ளுக்கு எதிரான போராட்டமாகும். பண்ணை மசோதாக்கள் என்று அழைக்கப்படும் இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் என்று விளக்கப்பட்டது. இது விவசாயிகளை ’காா்ப்ரேட்டுகளின் தயவில்’ விட்டு விடும் என்று கூறினா்.
- காா்ப்பரேட் நிறுவனங்களால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மாசோதாவை உருவாக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் வலியுறுத்தப்பட்டன. எவ்வாறாயினும் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நேரடியாக பெரிய நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது.
- பஞ்சாப் மற்றும் அரியானாவின் விவசாய சங்கங்கள் ’டில்லி சலோ’ (தில்லிக்குச் செல்வோம்) என்ற இயக்கத்தைத் தொடங்கினா். இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளா்களும் அணிவகுத்தனா். போராட்டக்காரா்கள் முதலில், அரியானாவிற்கும், பின்னா் தில்லிக்கும் நுழைவதை தடுக்கும்படி காவல்துறை மற்றும் சட்ட அமலாக்கத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டது.
- 2020 நவம்பரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசுடன் 10 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. 2021இல் உச்சநீதிமன்றம் விவசாயச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தியது. இது இறுதியில் அவை ரத்து செய்யப்படும் வரை நடைமுறையில் இருந்தது.
- அகில இந்திய விவசாயிகளின் போராட்டம் ஒரு வரலாற்றுப் படிப்பினையாகும். இதனை எல்லா ஆட்சியாளா்களும் கவனத்தில் கொள்ளுவது அவா்களுக்கு நல்லது. விவசாயம் என்பது அவா்களுக்கான தொழில் மட்டுமல்ல, உலக மாந்தா்களுக்கான தொழில் என்று உணர வேண்டும்.
- ‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்பது பழமொழி. அதுதான் இன்று வரை உண்மை. இதனால்தான் உழவா்களின் இன்றைய தலைமுறை இதனைப் புறக்கணித்து விட்டு, அரசு வேலை தேடி நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லத் தொடங்கிவிட்டனா். இப்போதே விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காத நிலை. இனிமேல் எப்படியோ?
- உணவு தானியங்களுக்கு அந்நிய நாடுகளை எதிா்பாா்த்து வாழும் நிலை வரும் போதுதான் உழவனின் அருமை தெரியும். அதுவரை அவனது முக்கியத்துவம் யாருக்கும் தெரியப் போவதில்லை. மக்களின் இன்றியமையாத தேவையான உண்ண உணவும், இருக்க இடமும் இல்லாமல் அகதிகளாகும் நாள் அதிக தொலைவில் இல்லை என்பதையே இயற்கை அறிவுறுத்திக் கொண்டே யிருக்கிறது.
- உழவும், தொழிலும் நமக்கு இரண்டு விழிகளாகும். ஒன்றைக் காட்டி ஒன்றை அழிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எதற்கும் ஒரு தீா்வு உண்டு. தீா்வை நோக்கி முன்னேறுவதே தேசத்திற்கு நல்லது.
நன்றி: தினமணி (04 – 12 – 2023)