TNPSC Thervupettagam

விவசாயத்தில் வேண்டாம் அரசியல்!

September 29 , 2021 1200 days 716 0
  • சிறு, குறு விவசாயிகளின் வேளாண் தொழிலில் இயந்திரமயத்தை அதிகரிப்பதன் மூலமாக நிலங்களின் பயன்பாடு, நீர்வளங்கள் போன்றவற்றைத் திறம்பட பயன்படுத்தி, வேளாண் தொழிலை லாபகரமானதாக மாற்றிட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
  • இயந்திரமயமாக்கலில் விவசாயத்தைக் கொண்டு வருகிறபோது கிராமப்புற இளைஞர்கள் விரும்பி விவசாயத் தொழிலில் ஈடுபடுவார்கள் என்பது மத்திய அரசின் கணிப்பு.
  • வேளாண் கருவிகள், இயந்திரங்கள், நவீன வேளாண்மைக்குரிய உயர் தொழில் நுட்ப மையங்கள் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
  • இதன் மூலம் விவசாயிகளின் துயரங்கள், சாகுபடி செலவுகள் குறைந்து, பயிர்களின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்பட்டது. மேலும், விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வேளாண் பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

டாக்டர் அனூப் வதாவன்

  • மத்திய அரசின் வர்த்தகத்துறை செயலர் டாக்டர் அனூப் வதாவன் இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது கீழ்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளார்:
  • "வேளாண் ஏற்றுமதியில் முந்தைய நிதியாண்டுகளைவிட இந்த நிதியாண்டில் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய மதிப்பில் அது ரூ.3.05 லட்சம் கோடியாகும். அதுவே முந்தைய 2019-20 நிதியாண்டில் ரூ.2.49 லட்சம் கோடியாக இருந்தது.
  • 2020-21-இல் அது 22.62 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளது. 2020-21-இல் ஏற்றுமதியில் கடல்சார் பொருள்கள் தவிர்த்து, வேளாண் பொருள்கள் மட்டும் 28.3 சதவிகிதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
  • உலக நாடுகளில் இந்திய தானியங்கள், பாஸ்மதி அல்லாத அரிசித் தேவை அதிகரித்துள்ளது. கோதுமை, சர்க்கரை, பருத்தி, பிண்ணாக்கு, காய்கறிகள், சமையல் எண்ணெய் போன்றவையும் ஏற்றுமதி செய்யப்பட்டு ஏற்றுமதியில் கணிசமான வளர்ச்சியை இந்தியா எட்டியுள்ளது.
  • இஞ்சி, மிளகு, பட்டை, ஏலக்காய், மஞ்சள், குங்குமப்பூ போன்ற மசாலாப் பொருள்களின் ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது.
  • 2020-21-இல் மசாலாப் பொருள்களின் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு எட்டியுள்ளது. இயற்கை உரங்களுடன் தயாராகும் இந்திய கரிம வேளாண் பொருள்களின் ஏற்றுமதி, நடப்பு ஆண்டில் 1,040 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சி 50.94 சதவீதமாகும்.
  • நமது நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் புகழ் பெற்றுள்ள மாம்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு, சிவப்பு வெங்காயம், திராட்சை போன்றவை ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • தற்போது அஸ்ஸாம் மாநிலத்தின் இரும்புச் சத்து நிறைந்த சிவப்பு அரிசி, கும்பகோணம் கிராம அரிசி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் தானிய வகைகளும் ஏற்றுமதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  • இந்திய வேளாண் பொருள்களுக்கு அமெரிக்கா, சீனா, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், வியத்நாம், சவூதி அரேபியா, இந்தோனேஷியா, நேபாளம், ஈரான், மலேசியா ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
  • இந்தோனேஷியாவுக்கான ஏற்றுமதியில் 102.42 சதவீத வளர்ச்சி கண்டு முன்னிலை பெற்றுள்ளோம். வங்கதேசத்துடன் 95.93 சதவீதம், நேபாளத்துடன் 50.49 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது' - இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

உண்மை நிலை

  • இவ்வாண்டு ஜூன் 9-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையிலான பயிர் ஆண்டில் விளையும் 14 வகையான விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இதன் மூலம் 50 முதல் 85 சதவீத விவசாயிகள் லாபம் அடைவர். வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடருமா என்ற விவசாயிகளின் சந்தேகத்தை பிரதமர் மோடி இப்போது நீக்கி இருக்கிறார்.
  • அப்பாவி விவசாயிகளைத் தூண்டிவிட்டு குளிர் காய்ந்தவர்களின் முகமூடி கிழிக்கப் பட்டிருக்கிறது.
  • விவசாயத்திற்கு அடிப்படைத் தேவை நீர்வளம், நிலவளம். உரமும், இடுபொருள்களும் அரசின் வேளாண்துறை மூலமாக உரிய காலத்தில் விவசாயிகளுக்குக் கிடைத்திட வேண்டும்.
  • நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைத்திடும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன.
  • தமிழ்நாட்டைப் போலவே பல மாநிலங்களிலும் விவசாயிகள், பம்புசெட்டுகளுக்கான மின் இணைப்பு கிடைக்காமல் ஏரி, குளம், ஊருணி போன்ற நீர்நிலைகளை நம்பியும், பருவமழையை நம்பியும்தான் இருக்கின்றனர்.
  • மத்திய நீர்வள அமைச்சகத்தின் நான்காவது சிறிய நீர்ப்பாசன ஆதாரங்கள் குறித்த கணக்கெடுப்பில், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 816 நீர்நிலைகள் சிறிய அளவிலான பாசனங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது.
  • இவற்றில் பல நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகள், நகரமயமாக்கல், நீர்மாசு, மழை பொய்த்ததால் தண்ணீர் இல்லாமை, வண்டல் படிதல் போன்ற காரணங்களால் பயனற்ற நிலையில் இருக்கின்றன.
  • நீர்நிலைகள் தூர்வாரப்படாமைதான் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர்வள மேலாண்மை சார்ந்த பணிகள், மாநில அரசுகளால் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • மாநில அரசுகளின் இந்த முயற்சிகளுக்கு இந்திய அரசு தொழில் நுட்ப உதவியும் நிதி உதவியும் வழங்குகிறது. விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன பயன்கள், புதுப்பித்தல் ஆகியவற்றின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
  • தமிழ்நாட்டில் அன்று 39 ஆயிரத்து 202 நீர்நிலைகள் இருந்தன. இன்று எத்தனை உள்ளன? எத்தனை காணாமல் போயிருக்கின்றன? ஏழத்தாழ ஏழாயிரம் நீர்நிலைகள் தமிழ்நாட்டில் காணாமல் போனதற்கு மாநிலத்தை ஆண்டவர்கள்தான் காரணம்.
  • தமிழ்நாட்டில் அரசர்கள் ஆண்ட காலங்களில் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் முறையாக செப்பனிடப்பட்டன. பொதுமக்களே ஏரி, கிணறு, குளம், கண்மாய்களைத் தூர்வாரி நீரை சேமித்தனர்.
  • ஜனநாயக ஆட்சிமுறை வந்த பிறகு, அத்தனை நீர்நிலைகளையும் அரசின் பொதுப் பணித் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. காலஓட்டத்தில் அவற்றை கபளீகரமும் செய்தது.
  • விவசாயிகள் நீர்ப்பற்றாக்குறையால் விவசாயம் செய்யமுடியாமல் ஒவ்வொரு ஆண்டும் திண்டாடுகின்றனர்.
  • ஆறுகளில் தண்ணீர் ஓட்டம் தடையின்றி ஓடினால்தான் விவசாயம் வாழும்.
  • காவிரி ஆறு, கபினி ஆறு, காவிரியின் துணையாறான பவானி ஆறு, காவிரியின் துணையாறான அமராவதி ஆறு, தாமிரபரணி ஆறு, தாமிரபரணியின் துணையாறு கடனா நதி, அமராவதியின் துணையாறு குதிரையாறு, அமராவதியின் துணையாறு குழித்துறை ஆறு, குந்தாறு, குண்டாறு, குடமுருட்டி ஆறு, கொள்ளிடம் ஆறு, கோரையாறு, அரசலாறு, ஓடம்போக்கி ஆறு, செஞ்சி ஆறு, வைகையாறு, வைகையின் துணையாறு மஞ்சளாறு, தாமிரபரணியின் துணையாறு மணிமுத்தாறு, வெள்ளாற்றின் துணையாறு மணிமுத்தாறு, காவிரியின் துணைஆறு திருமணிமுத்தாறு, பாம்பாற்றின் துணையாறு, மணிமுத்தாறு, பாம்பாறு, மோயாறு, முல்லை ஆறு, காவிரியின் துணையாறு நொய்யல் ஆறு, தாமிரபரணியின் துணையாறு பச்சை ஆறு, பரளி ஆறு, பாலாறு, காவிரியின் துணையாறு பாலாறு, பரம்பிக்குளம் ஆறு, பைக்கார ஆறு, சண்முகா நதி, சங்கரபரணி ஆறு, சிறுவாணி ஆறு, தென்பெண்ணை ஆறு, பாலாற்றின் துணையாறு நீவா ஆறு, வைகையின் துணையாறு உப்பாறு, வைகை ஆறு, வைகையின் துணை ஆறு வைப்பாறு, வெண்ணாறு, வெட்டாறு - இப்படி ஆறுகள் சூழ்ந்த அற்புதமான இயற்கை வளம் நிறைந்தது தமிழ்நாடு.
  • மொத்த தமிழர்கள் ஒன்பது கோடிபேர் என்றாலும், திரைகடலோடி திரவியம் தேடுபவர்களைத் தவிர ஏழு கோடி தமிழர்கள் தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • இவர்களில் 80 சதவீதத்தினர் விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது' என்ற முதுமொழி விவசாயிகளின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறது.

வேண்டாம் அரசியல்

  • உலகிற்கே முதலில் நீர்ப்பாசன முறையை அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னன் கரிகாற்சோழன் காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டினான் என்பது வரலாறு.
  • அதைத் தொடர்ந்து மேட்டூர் அணை, வைகை அணை, சோலையாறு அணை, ஆழியாறு அணை, மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை, கிருஷ்ணகிரி அணை, திருமூர்த்தி அணை, மோர்தானா அணை, சாத்தனூர் அணை, கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம் என்று 10-க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகளால் தமிழ் மண்ணின் வளம் கொழிக்கிறது.
  • கல்லணையை செப்பனிடுவதற்காக மத்திய அரசு கடந்த ஜனவரியில் ரூ.1,036 கோடி நிதி ஒதுக்கியது.
  • அங்கு பணிகள் நடந்து வருகின்றன. அண்மையில் கூட தமிழக முதலமைச்சர் அங்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்துள்ளார்.
  • இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றுப் பெருமை கொண்ட கல்லணையை சீர்படுத்த இதுவரை ஆண்ட மத்திய அரசுகளோ மாநில அரசுகளோ எந்தவொரு முன்முயற்சியும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
  • இனியாவது, தமிழ்நாட்டில் உள்ள அணைக்கட்டுகள் அனைத்தும் சீர்செய்யப்பட வேண்டும்.
  • விவசாய உற்பத்தி தொய்வின்றி தொடர, தமிழகத்தின் நீர்நிலைகள் புனரமைக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு மத்திய அரசும் உதவிடத் தயாராக இருக்கிறது.
  • ஆந்திராவில் உள்ள நாகார்ஜுனா அணை, சோமசீலா அணை வழியாக தமிழகத்தில் உள்ள கல்லணைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு உடனே செயல்படுத்த முன்வரவேண்டும்.
  • இத்திட்டத்தின் மூலம் தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் பாசன வசதி பெறும். இது, 242 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் திட்டம் என்பதை தமிழக அரசு மறந்து விடக்கூடாது.
  • கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.
  • இந்தத் திட்டம் நிறைவேறிவிட்டால் தற்போது காவிரி நீரால் ஓரளவு மட்டுமே பயனடைந்து வரும் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர் ஆகிய மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களைப்போன்று முழுமையான பயனை அடைந்திடும்.
  • இந்த இணைப்புத்திட்டம் முந்தைய அரசின் திட்டம் என்பதால், தற்போதைய மாநில அரசு இதனை நிறைவேற்ற தயக்கம் காட்டக்கூடாது. விவசாயத்தில் வேண்டாம் அரசியல்!

நன்றி: தினமணி  (29 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories