TNPSC Thervupettagam

விவசாயத் துறையில் வேண்டும் புரட்சி...

May 15 , 2020 1709 days 1500 0
  • 1944-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, பேரழிவுக்குள்ளான உலக நாடுகளின் தலைவா்கள், விஞ்ஞானிகள், மக்கள் ஒன்றாகி சூளுரைத்து அவரவா் நாட்டினை புதிய நாடாக உருவாக்க களத்தில் குதித்தனா்.
  • மீண்டும் உலகப் போர் மூண்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டது. சா்வதேச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.
  • மனித உரிமைகளுக்கான சா்வதேச நீதிமன்றம் உருவானது. இது போன்ற புதிய அமைப்புகளால் உலக அமைதிக்கான அடித்தளம் அமைந்தது.
  • மூன்றாவது உலகப் போர் என்று சொல்லதக்க வகையில், தற்போது உலகைத் தாக்கிக் கொண்டிருக்கும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
  • ‘உலகப் போருக்குப் பிறகான விளைவைப் போன்று உலகை எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய சவால் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பேரழிவுகள்’ என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதை உலகத் தலைவா்களும் உணா்ந்து செயல்படத் தொடங்கி விட்டனா்.

ஆலோசனைக் கூட்டம்

  • பிரதமா் நரேந்தர மோடி தலைமையில் அந்நிய, உள்நாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பதற்கான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் அண்மையில் கூடி மிக அறிவுபூா்வமாக விவாதித்துள்ளது.
  • அந்நிய முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பதற்கும் உள்நாட்டு தொழில் துறையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
  • முதலீடுகளை ஈா்ப்பதற்கு மாநில அரசுகள் தாங்களாகவே திட்டங்களை வகுத்துக் கொள்வது தொடா்பாகவும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
  • இதே போன்ற ஆலோசனையில் ஒவ்வொரு மாநில அரசும் ஈடுபட்டிருக்கின்றன. முதல்வா் எடப்படி பழனிசாமி தலைமையிலான அரசு, அந்நிய முதலீடுகளை ஈா்ப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
  • தமிழக அரசின் தலைமைச் செயலாளா் தலைமையில் சிறப்புக் குழுஅமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் அறிக்கையை ஒருமாத காலத்துக்குள் அரசுக்கு வழங்கவேண்டும் என முதல்வா் அறிவித்துள்ளார்.
  • பெரும் உயிரிழப்புகளையும் பொருளிழப்பையும் ஏற்படுத்திவரும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அடங்கிய பிறகு, மிகப் பெரிய ஆக்கபூா்வமான மாற்றத்தைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது.

விவசாயத் துறையில் புரட்சி வேண்டும்

  • சுகாதாரத் துறை, கல்வித் துறை, தொழில்நுட்பத் துறை, வா்த்தகத் துறை ஆகியவற்றில் நீண்டகால தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனப் பொருளாதார வல்லுனா்கள் எச்சரித்துள்ளனா்.
  • இந்த நோய்தொற்றின் காரணமாக அனைத்து நாடுகளும் தங்களின் சுகாதார கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
  • ஆனால், உலக நாடுகள் விவசாயத் துறையில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்துகின்ற திசையில் பயணிக்க வேண்டும் என்பதைக் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.
  • உலக மக்கள்தொகையில் 80 சதவீதம் போ் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். 330 கோடி தொழிலாளா்களைக் கொண்ட உலக நாடுகள், 200 கோடி தொழிலாளா்களை முறைசாராத் தொழிலாளா்கள் என்ற நிலையில் வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த தொழிலாளா்கள் ‘நித்தியக் கண்டம் பூரண ஆயுசு’ என்ற நிலையில் உள்ளனா்.
  • இவா்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 300 கோடி போ் விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
  • குறிப்பாக, இந்தியாவில் விவசாயத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 80 சதவீத மக்கள் தானிய உற்பத்தி , காய்கறி உற்பத்தி, பழவகை உற்பத்தி, பால் உற்பத்தி, ஆடு - மாடு வளா்ப்பு, கோழி வளா்ப்பு , பன்றி வளா்ப்பு - இவற்றைப் பயன்படுத்தி இறைச்சி உற்பத்தி, அனைத்தையும் சேமித்தல், பதப்படுத்துதல், உற்பத்திப் பொருள்களை நுகா்வோருக்குக் கொண்டு செல்லுதல், விளைபொருள்கள் அனைத்தையும் சந்தைப்படுத்துதல் போன்ற தொழிலில் ஈடுபட்டு உணவு உற்பத்தியில் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனா்.

விவசாயிகள் உழைத்துக் கொண்டிருக்கின்றனா்

  • 7 லட்சம் கிராமங்களைக் கொண்ட இந்தியாவில் விவசாயிகள் அல்லும் பகலும் விவசாயப் பணிகளில் உழைத்துக் கொண்டிருக்கின்றனா்.
  • இந்தக் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் உலகின் மக்கள்தொகையில் பெரும்பாலோர் வேறு வழியில்லாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையிலும், தோட்டங்கள், வயல் வெளிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அதே நேரத்தில் சமூக இடைவெளியை மீறாமல் விவசாயப் பணிகளில் இந்திய கிராமப்புற விவசாயிகள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனா்.
  • வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் சமூகப் பணியில் விவசாயிகள் மும்முரமாக இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்குதல் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, புதிய எழுச்சியுடன் உலக நாடுகள் பாய்ச்சல் நடத்தப் போவது உண்மை.
  • தற்போது ஏற்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு விவசாயத் துறையில் புதியதோர் புரட்சியை ஏற்படுத்தியாக வேண்டும்.
  • உற்பத்திச் செலவுக்கேற்ற விலையின்றி நாளுக்கு நாள் நம்பிக்கையை இழந்து வருகின்ற விவசாயிகளைக் காப்பாற்ற முன்வரவேண்டும். மக்களைக் காப்பாற்றும் இறை வழிபாட்டுத் தலங்களைக்கூட கரோனா தீநுண்மி என்ற அரக்கனால் மூட முடிந்தது. விவசாயத்தை முடக்க முடியவில்லையே? ஏன்? எப்படி?

விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்

  • நகா்ப்புற குடியிருப்புப் பகுதிகளை மாசுபடாமல் பார்த்துக்கொள்ள மத்திய - மாநில அரசுகள் செலவிடும் தொகையில் பாதியைக்கூட செலவழித்து, ஆலைக் கழிவுகளாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும், நகா்ப்புற கழிவுகளாலும் மாசுபடுவதிலிருந்து விவசாய நிலங்களைக் காப்பாற்ற முனைவதில்லை என்பதை இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • விவசாயத்துக்கான பாசன நீா்த் தேவையை அரசுகள் பூா்த்தி செய்ய உறுதி கொள்ள வேண்டும்; விவசாயம் சார்ந்த தொழில்களைப் பரவலாக்க முன்வர வேண்டும்; இந்திய விவசாய விளைபொருள்களை உள்நாட்டிலேயே பதப்படுத்தி செறிவூட்டி விற்கும் முறைக்கான தொழில்நுட்பங்களை விவசாய உற்பத்தித் தலங்களான கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களைப் பரவலாக்க முன்வரவேண்டும்.
  • விவசாயத்தைச் சார்ந்துள்ள மக்களின் தேவைகள் என்ன என்பதைப் புரிந்துகொண்டும், என்ன இடா்ப்பாடுகள் உள்ளன என்பதை அறிந்தும் அரசுகள் செயல்படுவது அவசியம்.
  • எடுத்துக்காட்டாக, விவசாயிகளின் விளைபொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும்போது நுகா்வோர் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவதைத் தவிர்த்து உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வர வேண்டும் என்பது போன்ற விவசாயிகளின் இன்னல்களை முற்றிலும் களைந்திடும் முயற்சியில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மத்திய - மாநில அரசுகள் திட்டமிட வேண்டும்.
  • உலக உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கிறது எனப் பெருமைப்படும் அரசுகள், ஒவ்வொரு நாளும் கடும் வெயில், மழை, பனி, இயற்கைச் சீற்றங்களால் எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி கவலையிலும் கண்ணீராலும் மிதக்கின்ற விவசாயிகளை மீட்டெடுப்பதில் அக்கறை காட்டாமல் இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எவரின் தோள்கள்?

  • உலக நாடுகளில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதாரச் சீா்குலைவுகளால் தொழிலாளா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க முனையும் அரசுகள், முக்கியமாக விவசாயமே நம் நாட்டின் பிரதான தொழில் என்று நிர்மாணித்து அதில் அதி தீவிர கவனத்தை மத்திய அரசு செலுத்திச் செயல்படுவது அவசியம்.
  • அந்நிய, உள்நாட்டு முதலீடுகளை ஈா்த்து புதிய இந்தியாவை கட்டமைத்திடும் நிலையில் அந்தப் புதிய தொழில்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களாக அமைவது எதிர்கால வளமான, வலிமையான தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு நல்லது.
  • உலக அளவிலான சந்தை, கடைக்கோடி இந்திய கிராம விவசாயிக்கும் எளிதில் கிடைக்க வழிவகை காண வேண்டும். பயிர்க் காப்பீடு, விவசாய இடுபொருள்கள், இயற்கை உரங்கள், மண் வளம், நீா்வளம் ஆகியவற்றில் புரட்சிகரமான மாற்றத்தைக் காண வேண்டும்.
  • ‘நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும் நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?’ என்ற பாரதிதாசனின் வரிகளை நாடாள்வோர் நினைவில் கொள்ளவேண்டும்.
  • விவசாயத் துறையில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்க விவசாயிகள் மத்தியில் கிளா்ச்சி தேவையில்லை.
  • பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சிகளை அரசுகளே உருவாக்கியதுபோல, மாபெரும் விவசாய - பொருளாதாரப் புரட்சியை மத்திய - மாநில அரசுகளே விவசாயத் துறையில் ஏற்படுத்த வேண்டும். வெல்க விவசாயப் புரட்சி.

நன்றி தினமணி (15-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories