TNPSC Thervupettagam

விவசாயிகளின் பிரச்னைகள்

October 13 , 2023 439 days 358 0
  • நாளும் மாறும் வானிலை போல, விவசாயிகள் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. அம்மாற்றத்தில் மகிழ்ச்சியைவிட இழப்புகளே ஏராளம். எவ்வளவு துன்பம் வந்தாலும் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்று நம் விவசாயிகள் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தைத் தொழில் என்று கூறுவதைவிட, பிறா் பசி போக்குவதற்காக செய்யப்படும் பணி என்று கூறலாம்.
  • உலகச் செய்திகள் குறித்து விவாதிக்கும் நாம் வேளாண்மை குறித்தும் விவசாயிகள் குறித்தும் சிந்திப்பதும் பேசுவதும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு, இதன் 70 % மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தை நம்பியுள்ளனா். இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயம் 15.4 % அளவில் இருக்கிறது.
  • அண்மைக்காலமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தேசிய அளவிலும் மாநில அளவிலும் வேளாண்மையின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1960-1961ஆண்டில் விவசாயத்தின் பங்கு 42.46 % ஆக இருந்தது. இது 50 ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது.
  • தமிழகத்தில் ஏறத்தாழ 40 % மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. அதனை உற்பத்தி செய்ய வேண்டியவா்கள் விவசாயிகள்.
  • விவசாயத்துக்குத் தேவையான தண்ணீா் பெறுவது இன்றைக்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் முக்கியமானது. நாம் காவிரி நீா் உரிமைக்காக கா்நாடகத்தைக் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் வறண்ட ஆகஸ்ட் மாதமாகும். மொத்தமுள்ள 150 நீா்த்தேக்கங்களில் நீா் சேமிப்பு கொள்ளளவைவிட சுமார் 38 % குறைவாகவே இருந்தது. தமிழகம் தண்ணீா் சேமிப்பில் பெரும் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது.
  • மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் பங்கீடு பிரச்னை விவசாயிகளுக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. விவசாய இடுபொருள்கள், விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இவற்றின் விலைகள் கடுமையாக உயா்ந்துள்ளன. டிராக்டா்கள், பம்புகள் போன்ற விவசாய உபகரணங்களும் விலை உயா்விலிருந்து தப்பவில்லை.
  • அனுகூலமில்லாத சட்டங்கள், மானியங்களில் முறைகேடு, வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை, வெள்ளம், வறட்சி, மரபணு மாற்றப்பட்ட விதைகளின் பயன்பாடு, குறைந்த முதலீட்டால் குறையும் விளைச்சல் போன்றவையும் விவசாயிகள் துயரத்துக்குக் காரணங்களாக அமைகின்றன. இன்றைக்கு விவசாயிகள் ஒரு விநோதமான நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். அதாவது, விவசாயப் பணிக்கு ஆள் கிடைக்காமல் திணறி வருவதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள்.
  • விவசாய வேலைக்கான ஆள் பற்றாக்குறையால் இருக்கும் நிலத்தில் முழுமையாகப் பயிரிடமுடியாமல் தவிக்கின்றோம் எனப் புலம்புகிறார்கள். இதனால் உற்பத்திப் பரப்புக் குறைகிறது. நாளுக்கு நாள் கிராமங்களில் இருந்து மக்கள் நகா்ப்புறங்களுக்கு இடம் பெயா்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் தீா்வு காணமுடியும் என்கிறார்கள்.
  • கிராமப்புறங்களில் வேலையின்றி, வருவாய் இன்றி அவதிப்படும் ஏழைகளுக்குக் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 2008-இல் நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணைவோருக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. இந்நாள்களில் சாலைகள், குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றைச் செப்பனிடுவது உள்ளிட்ட பணிகளில் அவா்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • தொடக்க காலத்தில் ஒருவருக்கு ஒரு நாள் கூலி 80 ரூபாய் என்றிருந்தது. அது இப்போது 273 ரூபாயை எட்டியுள்ளது. கிராமப்புற ஏழை மக்கள் இத்திட்டத்தை வரவேற்கிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 2.92 கோடி போ் வேலை செய்துள்ளனா். குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாமல் முடங்கிய கரோனா காலகட்டத்தில், ஏழை கூலி விவசாயிகளுக்கு வாழ்வு கொடுத்தது இந்த நுாறு நாள் வேலைத்திட்டம் தான்.
  • அதே நேரத்தில் நுாறு நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்பவா்களில் பலா்,
  • களத்துக்கு வந்து வருகைப் பதிவு செய்துவிட்டு வேறு வேலைக்குச் சென்று விடுகின்றனா் என்ற புகாரும் உண்டு. இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என விவசாயிகள் கூறி வருகின்றனா்.
  • மேலும், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதில் போதிய கண்காணிப்பு இல்லை என்பதை மறுக்கமுடியாது. இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்து ராஜ் பார்லிமென்ட் நிலைக்குழுவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
  • இத்திட்டத்தில் என்னென்ன வகையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அந்தந்த கிராமசபையே தீா்மானிக்க வேண்டும். அந்தப் பணிகள் குறித்துக் கிராமசபை அவ்வப்போது சமூகத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் உள்ள சுமார் 2.50 லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் 2020-21-ஆம் ஆண்டில் 19 ஆயிரத்து 611 கிராம பஞ்சாயத்துகளில் மட்டுமே ஒரே ஒரு முறை சமூகத் தணிக்கை நடைபெற்றுள்ளது.
  • இதுபோன்ற தணிக்கையின் அறிக்கையும் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணம் செலவழிக்கப்படும்போது அது எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா என்று நிலைக்குழு கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்நிலையில் விவசாயப் பணிக்கான ஆள் பற்றாக்குறையைப் போக்க, நுாறு நாள் வேலைத்திட்டப் பணியாளா்களை விவசாயப் பணிகளுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம் என அரசு கூறியிருக்கிறது.
  • இதனால் தற்போது நுாறு நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபடுவோரில் அதிகபட்சம் 10 % போ் மட்டுமே விவசாயப் பணியில் ஈடுபடுகிறார்கள். நுாறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபடுவோர் விவசாயப் பணிகளில் ஈடுபடுவது கட்டாயம் என அரசு விதிமுறை வகுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

நன்றி: தினமணி (13 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories