TNPSC Thervupettagam

விவசாயிகள் போராட்டத்தின் பின்னுள்ள சூட்சமங்கள்

October 1 , 2021 1034 days 482 0
  • இந்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் நாட்டின் மைய கவனத்துக்கு மீண்டும்  வந்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன் (செப். 27) விவசாயிகள் அறைகூவல் விடுத்த முழு அடைப்புப் போராட்டம் பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
  • குறிப்பாக, வட இந்தியாவில் விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு ஆளும் பாஜகவையே மிரட்சியில் தள்ளியிருப்பதுடன், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது. தொடர்ந்து 10 மாதங்களாக போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள் விவசாயிகள். எப்படி அவர்களால் இந்தப் போராட்டத்தை அயராது முன்னெடுக்க முடிகிறது? அவர்கள் என்னதான் அரசிடம் எதிர்பார்க்கிறார்கள்? அரசியல் களத்தில் இது எத்தகு விளைவுகளை உண்டாக்கும்? பார்ப்போம்!

போராட்டத்தின் ஊற்றுக்கண் எது?

  • மூன்று வேளாண் சட்டங்களும் முழுமையாக அமலாக்கப்பட்டால், நாளடைவில் பெருநிறுவனங்கள் கைகளில் விவசாயம் சென்றுவிடும் என்ற விவசாயிகளின் அச்சமே இந்தப் போராட்டத்தின் ஊற்றுக்கண். “ஏற்கெனவே விவசாயம் பெரிய லாபமற்ற தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது; பெருநிறுவனங்கள் விளைநிலங்களை நோக்கி வர வழிவகுக்கும் இந்தச் சட்டங்கள் தொடர்ந்தால், முழுமையாகவே விவசாயம் நம்மைவிட்டுப் போய்விடும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் பேசுகிறார்கள். மக்களிடம் அது எடுபடுகிறது.

நீண்ட போராட்டம் எப்படி சாத்தியமாகிறது?

  • விவசாயிகள் முறை வைத்து போராட்டங்களில் பங்கெடுக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலிருந்தும் குழு, குழுவாக வருகிறார்கள். ஒரு வாரம், இரண்டு வாரம் என்று தங்குகிறார்கள். ஒரு குழு குறிப்பிட்ட நாள்கள் வரை போராடிவிட்டு தங்கள் ஊருக்குச் சென்றால், இன்னொரு குழு ஊரிலிருந்து போராட்டக் களத்தை வந்தடைகிறது. போராட்டத்தில் பங்கெடுக்க முடியாத கிராமத்தினர் போராட்டத்துக்குச் செல்லும் விவசாயிகளுக்குப் பணத்தையும், உணவையும், தளவாடப் பொருட்களையும் தந்து ஊக்குவிப்பதும் நடக்கிறது. ‘இது நமக்கான போராட்டம்; இதில் தோற்றால் நமக்குப் பிழைப்பு இருக்காது என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. ஆக, ஆட்களுக்கும், செலவுத் தொகைக்கும் பஞ்சம் இல்லை.

எந்த இடத்தில் போராடுகிறார்கள்

  • பெரிய சாலைகளில் உள்ள கட்டணச் சுங்கச் சாவடிகளை ஒட்டிய இடங்களே விவசாயிகளின் போராட்டக் களமாக இருக்கிறது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இடத்தை அவர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு இடத்தில் போராட்டத்துக்கு இடையூறு வந்தால், அடுத்த இடத்துக்கு மாறிவிடுகிறார்கள். காவல் துறையோ, அதிகாரிகளோ போராட்ட இடத்தை முற்றுகையிட்டு, நடவடிக்கைக்கு முனைந்தால், வெவ்வேறு ஊர்களிலிருந்து விவசாயிகள் அங்கே குவிந்து தங்களுடைய போராட்டத்தை மேலும் கூர்மைப்படுத்துகின்றனர். காவல் நிலையங்களை, அதிகாரிகளின் அலுவலகங்களை முற்றுகையிடுவது, பெரும் கூட்டமாக அமர்வது என்று மேலும் தீவிர நிலைக்குப் போராட்டம் செல்கிறது.
  • விவசாய சங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்தால் சில நிமிஷங்களுக்கெல்லாம் எல்லா சாலைகளையும் விவசாயிகள் அடைத்துவிடுகிறார்கள் என்பதால், அரசும் தயக்கத்துடனேயே அவர்களை எதிர்கொள்கிறது. ஆட்களைத் திரட்டுவதற்கு முக்கிய கருவியாகி இருக்கிறது செல்பேசி. போராட்டத்துக்குச் சென்று வந்தவர்கள் ஊர் அளவிலும், வட்டார அளவிலும் சிறு குழுக்களை அமைக்கிறார்கள். ஓர் அமைப்புபோலத் திரளுவதற்கு இந்தக் குழு முறை உதவுகிறது.

எப்படித் தளராமல் நிற்கிறார்கள்?

  • விவசாயம் தீர்மானகரமான விளைவைத் தரும் தொழில் அல்ல. “மழையின்றியும் பயிர்கள் கருகலாம், பூச்சிகள் தின்றும் பயிர்கள் அழியலாம்; வெள்ளம் வந்தும் பயிர்கள் மூழ்கலாம்; இப்போது இல்லாவிட்டாலும் நிச்சயம் அடுத்த வெள்ளாமை நன்றாக வரும்; நம் தலைமுறைக் கடமையாகவேனும் விவசாயத்தைத் தொடரத்தான் வேண்டும் என்றுதான் விவசாயிகள் நிலத்தில் கால் வைக்கிறோம். அப்படித்தான் இந்தப் போராட்டத்தையும் பார்க்கிறோம். உடனடி பலன்களை எதிர்பார்த்து நாங்கள் நிற்கவில்லை. ஆனால், நிச்சயம் ஜெயிப்போம் என்கிறார்கள்.

எதையாவது சாதித்திருக்கிறார்களா?

  • இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், “விவசாயிகள் இன்று ஒரு சக்தியாகி இருக்கிறோம் என்கிறார்கள். எல்லாக் கட்சிகளுமே இன்று அடையாள நிமித்தமாக விவசாயிகள் பிரச்சினைகளைப் பேசுகின்றனவே தவிர, அவற்றின் பிரதான கவனம் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் பக்கம் போய் நீண்ட காலம் ஆகிறது. “அரசியல் தலைவர்கள் எங்களுக்குப் பெரிய மரியாதை தருவது இல்லை; அதிகாரிகள் எப்போதுமே மதிப்பது இல்லை. இப்போது எல்லாம் மாறுகிறது. நாங்கள் ஒரு தனி சக்தியாகத் திரண்டுவருகிறோம். எங்களை தனி மரியாதையோடு எல்லோரும் பார்க்கிறார்கள். ஏனென்றால், இப்படி ஒரு தொடர் போராட்டம் நடத்தும் சக்தி இன்றைக்கு இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. இதை சாதித்திருக்கிறோமே, பெரிய விஷயம் இல்லையா என்கிறார்கள்.

பொதுமக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?  

  • பொதுமக்களுக்கு விவசாயிகள் மீது ஒரு பரிவு இருக்கிறது. ஆனால், சாலைகள் முடங்கும்போது இந்தப் போராட்டம் சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாக உணர்கிறார்கள். மக்களிடம் எரிச்சலும் வெளிப்படுகிறது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது என்றே சொல்கிறார்கள். விவசாயிகளின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை என்ற பார்வை வலுவாக இருக்கிறது.

அடுத்து என்ன ஆகும்?

  • சிக்கலான கேள்விதான் இது. உத்தர பிரதேச தேர்தல் அடுத்த ஆண்டில் வரவிருப்பதால், எல்லாக் கட்சிகளும் இப்போராட்டத்தை உன்னிப்பாகப் பார்க்கின்றன. விவசாயிகள் போராட்டத்துக்கு சமூகரீதியான அடையாளமும் உண்டு. வட இந்தியாவின் நிலவுடைமைச் சமூகங்களில் ஒன்றான ஜாட் சமூகம் இதைத் தங்கள் வாழ்வுரிமை விவகாரமாகவே பார்ப்பதுபோலத் தெரிகிறது. பல மாநிலங்களில் செல்வாக்கு உள்ள சமூகம் இது.
  • குறிப்பாக உத்தர பிரதேச தேர்தலில் இது பெரும் விளைவுகளை உண்டாக்கலாம் என்ற அச்சம் பாஜகவுக்கும் இருக்கிறது. அதற்கு முன் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு விரும்புகிறது. எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தின் பின் இருக்கின்றன என்ற தொடர் பிரச்சாரத்தையும் அது முன்னெடுக்கிறது. ஆனால், இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாலேயே ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு எதிராக மாறிவிடுவார்கள் என்றும் இல்லை. போராட்டங்களுக்கு வருபவர்களில் பாஜகவின் தீவிர ஆதரவாளர்களும் அடக்கம். தேர்தல் முடிவுகள் நமக்கு முடிவுகளைச் சொல்லும். ஆனால், விவசாயிகள் புதிய போராட்ட வடிவத்தை ஒட்டுமொத்த நாட்டுக்கும் கொடுத்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது!

நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories