TNPSC Thervupettagam

விவேகானந்தரும் சில குறிப்புகளும்

January 13 , 2025 2 days 29 0
  • நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர், பொது ஆண்டு 1863ஆம் ஆண்டு ஜனவரி 12 இல் கொல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா-புவனேஸ்வரி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். 1881இல் விவேகானந்தர் துறநெறி வாழ்க்கை மேற்கொண்டார். கேசப் சந்திரசென் மூலமாக பிரம்ம சமாஜத்தில் சேர்ந்த விவேகானந்தர் அங்கு கடவுளை உணர்த்தாத காரணத்தால் சமாஜத்தின் மீதிருந்த ஆர்வம் அவருக்கு குன்றியது.
  • அச்சமயத்தில்தான் காளிகோவில் பூசாரியாக இருந்த ராமகிருஷ்ணரை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. கடவுளை பார்த்திருக்கிறேன் என ராமகிருஷ்ணர் கூற அவரது போதனைகள் அனைத்தும் தம் வழிக்கு ஏற்றதாக இருக்கும் எனகருதி அவரது சீடரானார். 1886 இல் ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைவுக்குப்பின் அவரது வாரிசாக விவேகானந்தர் பரிந்துரைக்கப்பட்டார். கொல்கத்தா பாராநகரில் 1897 இல் இராமகிருஷ்ண மிஷன் எனும் அமைப்பைத் தொடங்கினார்.

விவேகானந்தரது முக்கிய கொள்கைகளாவன:

  • 'எழுமின், விழிமின், கருமம் கைகூடும் வரும்வரை உழைமின்', 'உருவ வழிபாடு ஒன்றே ஆன்மீக உணர்வை தூண்டிவிடும் தன்மை கொண்ட ஒரே வழி', 'பிறருக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடவுளுக்கு தொண்டு செய்பவர்கள்ஆவர்'.
  • விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11இல் சிகாகோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு சமய மாநாட்டில் கலந்துகொண்டு 'சகோதர, சகோதரிகளே...' என ஆரம்பித்து நடத்திய பேருரை உலகப் புகழ் பெற்று அனைவரையும் நெகிழ வைத்தது. பேலூரில் 1899 இல் விவேகானந்தர் நிறுவிய மடம் அகில உலக ராமகிருஷ்ண மடங்களுக்கெல்லாம் தலைமை மடமாக உள்ளது. விவேகானந்தர் 1892 இல் கன்னியாகுமரி கடலில் நீந்தி சென்று ஒரு பாறையில் அமர்ந்து தியானம் செய்த பாறை தற்போது விவேகானந்தர் பாறை என்ற பெயரில் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது.
  • இங்கிலாந்தைச் சேர்ந்த மார்கெரட் என்ற பெண்மணி நிவேதிதா எனும் பெயரில் விவேகானந்தரின் பிரதம சீடரானார். பேலூர் மடத்தில் ஜூலை 4, 1902 இல் இவ்வுலகை விட்டு விவேகானந்தர் மறைந்தார்.
  • 'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக நீ ஆவாய்', 'உன்னை வலிமை படைத்தவனாக எண்ணினால் வலிமை படைத்தவன் ஆவாய்' போன்ற பல இளைஞர்களை ஊக்குவிக்கும் பொன்மொழிகளை உலகிற்கு தந்து இக்கால இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகத்தை விவேகானந்தர் அளித்துவருகிறார் என்றால் அது மிகையாகாது. 'கடவுளைத் தேடி' எனும் விவேகானந்தரின் வங்க மொழி கவிதை நூலை தமிழில் சௌந்திரா கைலாசம் மொழி பெயர்த்துள்ளார்.
  • 'The Complete Works of Swami Vivekananda' என்ற ஆங்கில நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 'விவேகானந்தரின் ஞானதீபம்' எனும் பெயரில் வெளி வந்துள்ளது. அவர் பேசிய பேச்சுக்கள், பேட்டிகள், எழுதிய கடிதங்கள் போன்றவை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் இந்நூலே 11 பகுதிகளாக 'எழுந்திரு! விழித்திரு!' எனும் தலைப்புடன் பிரசுரம் ஆனது.
  • விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12, ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories