TNPSC Thervupettagam

வீடற்ற மக்களுக்கும் வேண்டும் சமூகநீதி!

October 11 , 2024 5 hrs 0 min 15 0

வீடற்ற மக்களுக்கும் வேண்டும் சமூகநீதி!

  • “பொதுவாகவே ‘வீடு’ என்பது மனிதர்கள் தங்கும் இடத்தை / இருப்பிடத்தை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அது மனிதர்களின் சமூக உள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் இருக்கிறது” என்கிறார்கள் சமூகவியலாளர்களான டிப்பில், ஸ்பீக் இருவரும். இந்தியச் சமூகத்தில், அடிப்படைச் சமூக நிறுவனங்களான குடும்பங்களின் வாழ்விடங்களாகவும் வீடுகள் இருக்கின்றன.
  • அப்படிப்பட்ட வீடு இல்லாத மனிதர்​களின் வாழ்க்கையை நாம் அறிந்​து​கொள்வது அவசியம். அவர்களின் வாழ்க்கைச் சூழல் சிக்கலானதாக அமைய இந்த ‘வீடற்ற நிலை’ ஒரு காரணமாக இருக்​கிறது. இது முக்கியமான சமூகப் பிரச்​சினை. சென்னை சமூகப் பணிக் கல்லூரி​யின், நகர்ப்புற ஏழைகளுக்கான மையத்தின் சார்பில் மேற்கொள்​ளப்பட்ட ‘சென்னை மாநகரத்தில் வீடற்​றவர்​களின் நிலை’ என்கிற ஆய்வு, சென்னை போன்ற பெருநகரங்​களில் வீடற்​றவர்​களின் நிலை எவ்வாறு இருக்​கிறது என்பதைத் தெளிவுபடுத்து​கிறது.

யாரெல்லாம் வீடற்​றவர்கள்:

  • இந்திய மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி, ‘வீடு இல்லாத குடும்​பங்கள்’ எனப் பொதுவாக ஒரு வரையறைக்​குள்​ளாகத்தான் ‘வீடற்​றவர்கள்’ கணக்கில் கொள்ளப்​பட்​டனர். கட்டிடங்கள் அல்லது வீடுகளில் வசிக்​காமல், சாலையோரங்​களில், நடைபாதைகளில் திறந்​தவெளியில் வாழ்பவர்கள், பெரிய குழாய்கள், மேம்பாலம், வழிபாட்டுத் தலங்கள், ரயில்வே நடைபாதைகள் போன்ற இடங்களில் தற்காலிக​மாகவும் நீண்ட காலமாகவும் வசிக்கும் மக்கள் ‘வீடற்​றவர்கள்’ என்று கருதப்​படு​கிறார்கள்.
  • மேற்கூரை இல்லாமல் ஒரு தார்ப்​பாயைக் கொண்டோ, தகரத்தைக் கொண்டோ தற்காலிகத் தங்கும் இடங்களைக் கொண்டிருக்கும் குடும்​பங்கள், தனிநபர்​களையும் இந்த வரையறைக்குள் அடக்கலாம் என உச்ச நீதிமன்​றமும் சமூகவியல் ஆய்வாளர்​களும் வழிகாட்டியுள்​ளனர்.
  • 2011 மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி இந்தியா முழுவதும் தோராயமாக 17 லட்சத்​துக்கும் அதிகமான மக்கள் வீடற்​றவர்​களாகக் கணக்கிடப்​பட்​டுள்​ளனர். இந்த எண்ணிக்கை தற்போது இன்னும் அதிகரித்​திருக்​கும். டெல்லியில் 88,410 பேர், மும்பையில் 37,059 பேர், கொல்கத்​தாவில் 39,431 பேர், பெங்களூருவில் 16,345 பேர் வீடற்​றவர்களாக இருக்​கிறார்கள் என அரசு சாரா நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்​கின்றன.
  • இந்நிலை​யில், சென்னை மாநகரத்தின் அனைத்து மண்டலங்​களிலும் வீடற்​றவர்களாக எத்தனை பேர் இருக்​கிறார்கள், அவர்களின் சமூகப் பொருளாதார நிலை எவ்வாறு இருக்​கிறது என 2022இல், ‘சென்னை மாநகரத்தில் வீடற்​றவர்​களின் நிலை’ என்கிற ஆய்வில் கணக்கெடுக்​கப்​பட்டது. ஆய்வின்படி, சென்னையில் மொத்தம் 10,672 வீடற்​றவர்கள் இருக்​கிறார்கள்.
  • அவர்களில் ஆண்கள் 4,137, பெண்கள் 2,420, குழந்தைகள் 1,142, முதியோர் 2,637, மாற்றுப்​பாலினத்தவர் 60, மாற்றுத்​திறனாளிகள் 178, உளவியல் மாற்றுத்​திறனாளிகள் 98 பேர். 5,909 பேர் தனியாக​வும், மீதம் இருப்​பவர்கள் குடும்ப​மாகவும் (1,298 குடும்​பங்கள்) வசித்து வருகிறார்கள்.

அரசின் திட்டங்கள்:

  • அரசு சாரா நிறுவனங்​களால் முன்னெடுக்​கப்பட்ட முயற்சி​களின் விளைவாக​வும் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளாலும், வீடற்ற நிலைக்குத் தீர்வு காணப் பல முயற்சிகள் மேற்கொள்​ளப்​பட்​டுள்ளன. மத்திய அரசின் வீட்டுவசதி அமைச்​சகம், தேசிய நகர்ப்புற வாழ்வா​தாரத் திட்டத்​தின்கீழ் (NULM), நகர்ப்புற வீடற்​றவர்​களுக்கான தங்குமிடம் மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் செயல்​படுத்த அனைத்து மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதி​களுக்குப் பரிந்​துரைத்​துள்ளது. இந்தத் திட்ட​மானது அத்தி​யா​வசியச் சேவைகளுடன் கூடிய நிரந்தரத் தங்குமிடத்தை நகர்ப்புற ஏழைகளுக்கு வழங்குவதை நோக்க​மாகக் கொண்டுள்ளது.
  • இதேபோல, அரசு சாரா நிறுவனங்​களும் நகர்ப்புற வீடற்ற மக்களின் நலன்களுக்​காகப் பல்வேறு விதமான பங்களிப்பு​களைச் செய்து வருகின்றன. விரிவான குழந்தைப் பராமரிப்பு, தரமான கல்வி, ஊட்டச்​சத்து, சுகாதாரம், தங்குமிடம், திறன் பயிற்சிகள், பொழுது​போக்கு, பாதுகாப்பு போன்ற பல்வேறு சேவைகளைச் செய்யும் தொண்டு நிறுவனங்​களும், வீடற்ற மக்களுக்கு உணவு, மருத்துவ சேவை போன்ற பல்வேறு சேவைகளைச் செய்யும் தொண்டு நிறுவனங்​களும் சென்னையில் இயங்கு​கின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டிய ஆய்வு முடிவுகள்:

  • கணக்கெடுக்​கப்பட்ட 5,909 தனிநபர்​களில் 361 பேரிட​மும், 1,298 குடும்​பங்​களில் 296 குடும்​பங்​களிடமும் சமூகப் பொருளாதார மாதிரி ஆய்வு மேற்கொள்​ளப்​பட்டது. அதன்படி, சென்னை​யில், வீடற்​றவர்​களில் பெரும்​பாலானோர் பட்டியல் சாதிகளைச் சேர்ந்​தவர்களாக இருப்பது தெரிய​வந்​திருக்​கிறது. இவர்களில் கணிசமான குடும்​பங்கள் மூன்று தலைமுறைகளாக வீடற்ற நிலையில் இருக்​கின்​றனர்.
  • சுமார் 30% பெண்கள் கணவரை இழந்தவர்கள். உணவு சமைப்பது, உணவுப் பொருள்​களைச் சேமித்து வைப்பது போன்றவை வீடற்​றவர்கள் எதிர்​கொள்ளும் சவால்கள். பொது விநியோகத் திட்டத்தில் உணவுப்​பொருள்​களைப் பெறுவதும் சிரமமாக இருக்​கிறது. பலர் இருப்பிட முகவரி இல்லாத காரணத்தால் குடும்ப அட்டை அற்றவர்களாக இருக்​கிறார்கள்.
  • மருத்​துவக் காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு போன்ற சேவைகளி​லிருந்து விடுபட்​ட​வர்களாக இவர்கள் இருக்​கிறார்கள். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்​தால், இடஒதுக்கீடு உள்ளிட்​ட​வற்றைப் பெற இயலாதவர்களாக இருக்​கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத​தால், இரவு நேரத்தில் பெண்கள் பெரிதும் சிரமப்பட வேண்டி​யுள்ளது. பல பெண்கள் இதன் காரணமாக இரவு நேரம் உணவு உட்கொள்​ளாமல் தவிர்த்து​வருவது வேதனைக்​குரிய விஷயம்.
  • பொதுவாக வீடற்​றவர்கள் என்றால், அவர்கள் பிச்சை எடுப்​பவர்​களாக​வும், குப்பை பொறுக்​குபவர்​களாகவும் இருப்​பார்கள் என்கிற பொதுப்புத்தி இருக்​கிறது. இதை நிராகரிக்கும் வகையில் இந்த ஆய்வின் முடிவு அமைந்​துள்ளது. வீடற்​றவர்​களில் பெரும்​பாலானோர் முறைசாராத் தொழில்​களில் இருப்​பதும், மாதம் முழுவதும் வேலை கிடைக்​காமல் சிரமப்​படு​வதும் தெரிய​வந்​துள்ளது. இவர்கள் பொதுவாக, ஏதேனும் ஒரு அன்றாட வேலை செய்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி​செய்​து​கொள்​கிறார்கள்.

சமூகநீ​திக்கான தேவை:

  • எந்தவொரு நாகரிகச் சமூகத்​திலும் உத்தர​வாதம் அளிக்​கப்​பட்​டுள்ள வாழ்வுரிமை என்பது உணவு, தண்ணீர், கண்ணியமான சூழல், கல்வி, மருத்​துவம், தங்குமிடம் ஆகியவற்றுக்கான உரிமை​களைக் குறிக்​கிறது. தங்குமிட உரிமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 21 இன் பிரிவு 19(1)(இ) கீழ் உத்தர​வாதம் அளிக்​கப்பட்ட ஓர் அடிப்படை உரிமை​யாகும். மேலும், ஒரு மனிதனுக்குத் ‘தங்குமிடம்’ என்பது ஒருவரது உயிருக்கும் உடைமைக்கும் மட்டுமான பாதுகாப்பு வழங்குவது என்பதல்ல.
  • அவர் உடல்ரீ​தி​யாக​வும், மனரீதி​யாக​வும், அறிவுரீ​தி​யாகவும் வளர வாய்ப்புகள் உள்ள இடம்தான் வீடு. தங்குமிட உரிமையில் வாழ்க்கை நடத்தப் போதுமான இடம், பாதுகாப்பான - ஒழுங்​கமைவான கட்டமைப்பு, சுத்தமான சூழல், போதுமான வெளிச்சம், தூய காற்று, நீர், மின்சாரம், சுகாதாரம், இன்ன பிற குடிமை வசதிகள் ஆகியவையும் அடங்கும்.
  • ‘தங்குவது (அ) இருப்பது’ மற்றும் ‘வாழ்வது’ குறித்தான கருத்​தாக்​கத்தை நாம் புரிந்​து​கொள்ள வேண்டும். ஒரு மனிதர் ஓர் இடத்தில் தங்கு​வதைக் காட்டிலும் கண்ணி​யத்​துடன் வாழ்வது என்பது சமூகநீ​தியில் தவிர்க்க இயலாத அங்கமாகிறது. சமீபத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் 148 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு கையகப்​படுத்திப் பசுமைப் பூங்கா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிட்டது.
  • அந்தப் பகுதியில் வசிக்கும் வீடற்ற மக்களுக்குப் பூங்கா பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகளை வழங்கும்போது தமிழக அரசு அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதியை உறுதிப்​படுத்த முடியும். அனைவருக்கும் அனைத்தும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்கிற சமூகநீதிப் பார்வையில் வீடற்​றவர்​களின் பிரச்​சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories