TNPSC Thervupettagam

வெட்டவெளிப் பறவைகளின் நிலை என்ன?

August 3 , 2024 161 days 172 0
  • இந்தியாவில் உள்ள பல வகையான சூழலியல் தொகுப்புகளில் (Ecosystem) பரந்த வெட்டவெளிப் புல்வெளி, வறண்ட புதர்க்காடுகள், பாலைவனம் ஆகிய வாழிடங்களை இயற்கையான வெட்டவெளிச் சூழலியல் தொகுப்புகள் (Open Natural ecosystems – ONEs) என்பர். இந்தியாவில் உள்ள வாழிடங்களில் 10 சதவீதம் இவ்வகையான வாழிடங்களை உள்ளடக்கியுள்ளது.
  • அதிக மரங்கள் இல்லாத இந்த வகையான இடங்களை ஆங்கிலேயர்கள் தரிசு நிலமாகத் தவறாகக் கருதிவிட்டனர். இந்த வெட்டவெளி நிலங்களில் தைல மரம் (Eucaplyptus), சாய மரமான சீகை (wattle) போன்ற பல்வேறு அயல் மரக்கன்றுகளை ஆங்கிலேயர்கள் நட்டனர்.
  • துரதிர்ஷ்டவசமாக, நாடு விடுதலை பெற்று 77 ஆண்டுகளுக்குப் பிறகும், நாம் இன்னும் இது போன்ற இயற்கையான வெட்டவெளி நிலங்களைப் பயனற்ற தரிசு நிலங்களாகவே கருதுகிறோம்.
  • மேலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்திய அரசானது ‘இந்தியாவின் தரிசு நிலத் தொகுப்பில்’ வெட்டவெளி நிலங்கள், பாலைவனங்கள், ஈரநிலங்கள், புல்வெளிகள் போன்றவற்றைத் தரிசு நிலங்களாகவே முன்னிலைப்படுத்துகிறது.
  • இது யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பில் 10% மட்டுமே இந்த இயற்கையான வெட்டவெளி நிலங்களாக இருந்தாலும், அவை பல வகையான உயிரினங்களின் முதன்மை வாழிடமாகத் திகழ்கின்றன. இந்தியாவில், மேய்ச்சல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெட்டவெளி நிலங்களையே நம்பியுள்ளனர்.

தற்போதைய நிலை என்ன?

  • உலக அளவில், பறவைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாகப்பல்வேறு ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. வெட்டவெளிப் பகுதிகள் பல வகையான பறவைகளுக்கு முதன்மை வாழிடங்களாகத் திகழ்கின்றன.
  • வரகுக்கோழி, பூனைப்பருந்து, வானம்பாடி, வல்லூறு போன்ற பறவைகள் உயிர்வாழ்வதற்கு வெட்டவெளி நிலங்களை மட்டுமே நம்பியுள்ளன. தற்போது அழிந்துவரும் நிலையில் உள்ள கானமயில்கள் தமிழகத்தில் ஒரு காலத்தில் காணப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இப்போது தமிழகத்தில் முற்றிலும் அற்றுப்போய்விட்ட கானமயில்கள் மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சில நூறு எண்ணிக்கையில் மட்டும் அழியும் தறுவாய்க்குத் தள்ளப்பட்டுள்ளன.
  • சமீபத்தில் 13 ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து, இந்தியப் பறவைகளின் தற்போதைய நிலையை (State of Indian Birds 2023) மதிப்பிடுவதற்கான அறிக்கையைத் தயாரித்துள்ளன. இந்த அறிக்கையின் முடிவுகள் வருத்தமளிக்கின்றன. புல்வெளிகள், ஈரநிலங்கள், கடற்கரைகள் போன்ற முக்கிய வாழிடங்களில் வாழும் பறவைகள் பெருமளவில் குறைந்துவருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
  • குறிப்பாக, வெட்டவெளிப் பறவைகள் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளன. சிறிய பறவைகளான சிலம்பன் (babbler), வானம்பாடிகள் (lark) போன்றவற்றின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்றாலும், பெரிய பறவைகளான வல்லூறு (kestrel/falcon), கல் குருவி (Indian courser), பனங்காடை (Indian roller) ஆகியவை எண்ணிக்கையில் பெருமளவில் குறைந்துள்ளன.
  • தமிழகத்திற்கு வலசை வரும் பறவையான பூனைப்பருந்துகள் (Pallid harrier & Western marsh harrier) அழிவு அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புல்வெளிகளில், விவசாய நிலங்களில் வாழும் பறவைகளான கல் குருவி, செந்தலை வல்லூறுகளின் (Red-necked falcon) எண்ணிக்கையும் மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

ஏன் இந்த நிலை?

  • வரலாற்றுரீதியாகவும் தற்போதும் வெட்ட வெளி நிலங்கள், தொடர்ந்து மாற்றத்திற்கும் அழிவிற்கும் உள்பட்டு வருகின்றன. வெட்டவெளி நிலங்களில் மரக்கன்றுகள் நடுவதால், அந்நிலம் மெதுவாகத் தன் இயற்கையான நிலையிலிருந்து மாற்றமடைகிறது. ஆகையால், வெட்டவெளிகளில் வாழும் பறவைகளின் வாழிடம் மாற்றமடைவதால், அவை அங்கிருந்து வெளியேறுகின்றன அல்லது இறக்கின்றன.
  • மேலும் இந்த வாழிடங்களுக்கு முக்கிய அச்சுறுத்தல்களாக ரியல் எஸ்டேட், கல்/மணல்குவாரிகள், தோட்டங்கள், காற்றாலைகள், விவசாய நில விரிவாக்கம் ஆகியவை அமைகின்றன. அது மட்டுமன்றி, சீமைக் கருவேலம் போன்ற அயல் தாவரங்கள், திறந்தவெளிகளை ஆக்கிரமித்து, காட்டுயிர்களின் வாழ்விட இழப்புக்குக் காரணமாகிறது.
  • மேலும் நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் அச்சமூட்டும் வேகத்தில் நடந்துவரும் மின் இணைப்புக் கோபுரங்கள், ராட்சதக் காற்றாலைகள் போன்ற கட்டமைப்புகள் பறவைகளைப் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றன. உயர் அழுத்த மின் கம்பிகளில் அடிபட்டும் சுழலும் காற்றாலை இறக்கைகளால் தாக்கப்பட்டும் பறவைகள் இறக்கின்றன.
  • இவை தவிர, நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதால் வெட்டவெளிகளில் தரையில் கூடுகட்டும் பறவைகளும் அவற்றின் முட்டைகளும் வேட்டையாடப்படுவது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

பாதுகாக்க என்ன செய்யலாம்?

  • முதலாவதாக, வெட்டவெளி நிலங்கள் பயனற்றவை அல்ல என்று வரையறுக்கப்பட வேண்டும். இந்தியாவில், 5 சதவீதத்துக்கும் குறைவான வெட்டவெளி நிலப் பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலை மாற, எஞ்சியுள்ள மேலும் பல முக்கியமான வெட்டவெளிப் பகுதிகள் அரசாங்கத்தாலும், மக்களாலும் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இரண்டாவதாக, வெட்டவெளி நிலங்களை மதிப்புமிக்க சூழலியல் அமைப்புகளாக அங்கீகரிக்கும் வலுவான கொள்கை இருக்க வேண்டும். வெட்டவெளி நிலங்களை நம்பியுள்ள ஏராளமான மேய்ச்சல் சமூக மக்களையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு உரிமை வழங்கப்பட வேண்டும்.
  • இறுதியாக வெட்டவெளி நிலங்களுடைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாம் பார்க்கும்போது ஒன்றுமே இல்லாத தரிசு நிலங்களைப் போலத் தெரிந்தாலும், சற்று நேரம் கவனித்து உற்றுநோக்கினால் அந்த இடம் பல வகையான உயிரினங்களின் வாழிடமாக இருப்பது புரியும்.
  • எண்ணற்ற பறவைகள், பூச்சிகள், நரி, கீரி, முள்ளெலி போன்ற பாலூட்டிகள் இந்நிலங்களைச் சார்ந்துள்ளன. இந்தப் பரந்த உலகில், அனைத்து உயிரினங்களும் ஒன்றை மற்றொன்று சார்ந் துள்ளன. எதையாவது ஒன்றை இழந்தாலும், அது அந்தச் சூழலைச் சார்ந்துள்ள மற்ற உயிரினங்களையும் மோசமாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories