வெப்பநிலை உயர்வு: தொடர் அலட்சியம் பேராபத்துக்கு வழிவகுக்கும்
- இந்தியாவில் வெப்பநிலை பதிவு 1901ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த வகையில் 2024தான் இந்தியாவின் மிக வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. ஆண்டு சராசரி வெப்பநிலை 25.75 டிகிரி செல்சியஸாக முன்பைவிட அதிகரித்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கவலை அளிக்கிறது.
- கடந்த ஆண்டில் இந்திய அளவில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 0.90 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச சராசரி வெப்பநிலை 0.20 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 31.25 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது.
- கடந்த ஆண்டில் பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்கள் வழக்கத்தைவிடக் கூடுதல் வெப்பமாக இருந்தன. பருவமழைக்குப் பிந்தைய காலமும் குளிர் காலமும் வழக்கத்தைவிட வெப்பமாக இருந்தன. 1991-2020 வரையிலான 30 ஆண்டு காலத்தில் நிலவிய நீண்ட கால வெப்பநிலையுடன் ஒப்பிட்டாலும் 2024இன் வெப்பநிலை அதிகமாகவே இருக்கிறது.
- தொழிற்புரட்சிக் கால வெப்பநிலையுடன் ஒப்பிட்டால் சராசரி வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸ் இருக்கலாம் எனக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால், அந்த 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பு என்கிற எல்லை 2024இல் தாண்டப்பட்டுவிட்டது என ஐரோப்பாவின் கோபர்நிகஸ் காலநிலை சேவை அமைப்பு, உலக வானிலை நிறுவனம் ஆகியவை தெரிவித்துள்ளன.
- 2024ஆம் ஆண்டில் நிலப்பரப்பு வெப்பநிலையும், கடல்-பெருங்கடல் வெப்பநிலையும் பெருமளவு அதிகரித்துக் காணப்பட்டன. 2015 முதல் 2024 வரையிலான கடைசி 10 ஆண்டுகளே வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளன. 2025 ஜனவரி மாதம் இந்திய வரலாற்றிலேயே வெப்பமான மூன்றாவது ஜனவரி மாதம் ஆகியுள்ளது. உலக அளவில் வரலாற்றில் மிகவும் வெப்பமான ஜனவரி மாதம் என்கிற எல்லையை நடந்து முடிந்த ஜனவரி தொட்டிருப்பதாக கோபர்நிகஸ் காலநிலை சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
- இவற்றை வைத்துப் பார்க்கும்போது முந்தைய சராசரி வெப்பநிலை, அதிகபட்ச வெப்பநிலைப் போக்கு இந்த ஆண்டும் மாறலாம். இந்த அம்சங்கள் அனைத்தும் வெப்பம் சார்ந்த பாதிப்புகளை ஒருபுறம் ஏற்படுத்தினாலும், காலநிலை மாற்றம் மேலும் மேலும் தீவிரமடைந்துவருவதன் அறிகுறியே.
- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வரலாற்றிலேயே மிகப் பெரிய காட்டுத்தீ நிகழ்வு பெரும் பேரழிவை உருவாக்கிய பிறகும், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். எதிர்காலப் பேரழிவுகளைக் கருத்தில் கொள்ளாமல் டிரம்ப் இப்படிச் செயல்பட்டாலும், வளரும் நாடான இந்தியாவும் அதேபோல் செயல்பட முடியாது.
- காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 7ஆவது நாடாக இந்தியா இருக்கும் என நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-25 பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் 2024ஆம் ஆண்டின் 93 சதவீத நாள்கள் வெப்ப அலை, புயல், வெள்ளம் போன்ற ஏதாவது ஒரு தீவிர வானிலை நிகழ்வுகள் நடைபெற்றவையாக இருக்கின்றன.
- இப்படி நாள்கள், மாதங்கள், ஆண்டுகளின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போவது தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பதற்கே காரணமாக அமையும். இதற்கான தீர்வாகத் தகவமைப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதும், கட்டமைப்பு வசதிகளை மீளும் தன்மை கொண்டதாக, பாதுகாப்பு மிகுந்ததாக மாற்ற வேண்டியதும் அவசியம். எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய கவனத்துடன் கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகளை உடனடியாகத் தொடங்க வேண்டிய காலம் இது.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 02 – 2025)