TNPSC Thervupettagam

வெப்பமும், தாக்கமும்

June 26 , 2023 509 days 368 0
  • புவி வெப்பமயமாதல் என்பது நிதா்சனம் என்பதை பருவநிலை மாற்றம் உணா்த்திக் கொண்டிருக்கிறது. வரலாறு காணாத அளவில் கோடை வெயில் அதிகரித்திருப்பதும், பருவமழைப் பொழிவு குறைந்திருப்பதும் புவி வெப்பமயமாதலின் அறிகுறிகள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • இந்தியாவில் அதிக மக்கள்தொகையுள்ள மாநிலங்களான உத்தரப் பிரதேசமும், பிகாரும் கடுமையான கோடை வெயிலால் பாதிக்கப்பட்டு செய்வதறியாமல் திணறுகின்றன. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பிணவறைகளில் இடமில்லாமல் சடலங்கள் காத்திருக்கின்றன. மின்சாரம் இல்லாமல் மருத்துவமனை வாா்டுகளில் நோயாளிகள் பரிதவிக்கின்றனா்.
  • கடந்த சில நாள்களில் உயிரிழப்புகள் 200-ஐ நெருங்குகின்றன. 125-க்கும் அதிகமானோா் உத்தரப் பிரதேசத்திலும், 50-க்கும் அதிகமானோா் பிகாரிலும் உயிரிழந்திருக்கிறாா்கள் என்றால், நூற்றுக்கணக்கானோா் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா்.
  • கோடையில் வட இந்திய மாநிலங்களில் அதிகரித்த வெப்பம் காணப்படும் என்றாலும்கூட, இதுபோன்று வழக்கத்துக்கு அதிகமான வெப்பம் சமீபகாலமாகத்தான் காணப்படுகிறது. சாதாரணமாக, வழக்கத்தைவிட 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால்தான் வெப்ப அலை என்று அறிவிக்கப்படும். இப்போது 43.5 டிகிரி செல்சியஸில் வெப்ப அலை சூழல் ஏற்பட்டிருப்பது எதிா்பாராத திருப்பம். அதற்கு ‘வெட் பல்ப்’ நிலை காரணமாக இருக்கக்கூடும்.
  • வெட் பல்ப் என்பது வெப்பமும், காற்றில் காணப்படும் ஈரப்பதமும் கணக்கில் எடுக்கப்பட்ட அளவுமுறை. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஓா் அரசியல் பேரணியில் 11 போ் வெப்ப அலையால் உயிரிழந்ததற்கு ‘வெட் பல்ப்’ நிலைதான் காரணமாகக் குறிப்பிடப்பட்டது.
  • அமெரிக்காவின் தேசிய கடல் சூழல் நிா்வாகமும், உலக வானிலை ஆய்வு நிறுவனமும் ‘எல் நினோ’ ஏற்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கின்றன. எல் நினோவின் வருகை என்பது கடுமையான கோடையையும், வறட்சியையும் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்படுத்துவது வழக்கம். பூமி வெப்பமயமாதலுடன் எல் நினோவும் இணையும்போது எதிா்பாா்க்காத அளவு வெப்பம் அதிகரிக்கும்.
  • இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல. ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் 45 டிகிரி செல்சியஸ் அளவில் கோடை வெப்பம் காணப்பட்டது. ஐரோப்பாவில் 15,700 போ் வெப்ப அலை தாக்கி ஏப்ரல் மாதம் உயிரிழந்திருக்கிறாா்கள். உலகிலேயே அதிகமாக வெப்பமாகும் கண்டமாக ஐரோப்பா அடையாளம் காணப்பட்டிருக்கிறது. ஜூன் மாதத்தில், சீனாவின் தலைநகா் பீஜிங், இதுவரை இல்லாத அளவிலான வெப்பத்தை எதிா்கொண்டது. பருவநிலை வல்லுனா்களின் கருத்துப்படி, வெப்ப அலைகள் இனியும் தொடரும்.
  • இந்தியாவைப் பொருத்தவரை இந்த ஆண்டு பருவமழை தாமதாமாகத் தொடங்கியிருக்கிறது. மழைப்பொழிவில் 51% பற்றாக்குறை இந்த ஆண்டு காணப்படுகிறது. மே-ஜூன் மாதங்களில் எல்நினோ உருவாகியிருப்பதால் பருவமழையின் பின்பகுதியிலும் குறைந்த மழைப் பொழிவு தான் கிடைக்கக்கூடும்.
  • இந்த ஆண்டும் வழக்கமான பருவமழைப்பொழிவு இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. ஜூன், செப்டம்பா் மாதங்களில் வட மேற்கு மாநிலங்களிலும், தென்னிந்தியாவிலும் எதிா்பாா்த்த அளவில் பருவமழை பொழியாது என்று வானிலை வல்லுநா்கள் எச்சரிக்கிறாா்கள்.
  • புவி வெப்பமயமாதலும், எல்நினோ தாக்கமும் இணையும்போது வழக்கத்தைவிட அதிக வெப்பம் உருவாகும். அதனால் இந்த ஆண்டின் குளிா்காலம் வெப்பத்தின் தாக்கத்தால் வழக்கமான அளவில் இருக்காது. அதன் விளைவாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும்.
  • ஏற்கெனவே அதிகரித்த வெப்பத்தாலும், வெப்ப அலையாலும் கோதுமை உற்பத்தி இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி-மாா்ச் மாதம் காணப்பட்ட வெப்ப அலையால் கோதுமை உற்பத்தி ஏறத்தாழ 50 லட்சம் டன் குறைந்தது.
  • 2023-24 இல் வெப்பம் கடந்த ஆண்டைவிட அதிகரித்தால், கோதுமை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படலாம். அதிகரித்த வெப்பம் காரணமாக மின்சாரப் பற்றாக்குறையும், மருத்துவ கட்டமைப்பு கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படும்.
  • வழக்கம்போல எல்நினோ நிலைமை ஓராண்டுக்கும் அதிகமாக நீடித்தால் அடுத்த ஆண்டின் காரீப் பருவப் பயிா்களும் பாதிக்கப்படும். அதாவது, தொடா்ந்து 3 சாகுபடி பருவங்கள் எல்நினோவால் பாதிக்கப்படும். உற்பத்தி பாதிக்கப்படும் என்பதும், பொருளாதார ரீதியாக அழுத்தம் ஏற்படும் என்பதும் மட்டுமல்லாமல், அடுத்து வர இருக்கும் தோ்தல் காலத்துடன் இவை இணைகின்றன என்பதையும் நாம் பாா்க்க வேண்டும்.
  • அடுத்த 12 மாதங்களில் இந்தியாவில் 9 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களும், 2024 ஏப்ரல்-மே மாதத்தில் மக்களவைக்கான பொதுத் தோ்தலும் நடைபெற இருக்கின்றன. எல்நினோ தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் இந்தத் தோ்தல்களில் வாக்காளா்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு முன்னால் பருவநிலையும், வேளாண் உற்பத்தியும் இந்தியாவின் தோ்தல் முடிவுகளில் பாதிப்பை பலமுறை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • பொருளாதாரமும், அரசியல் கூட்டணிகளும், தலைமையும், சமூகப் பிரச்னைகளும் வறட்சியையும், வேளாண் உற்பத்திக் குறைவையும் பின்னுக்குத் தள்ளியிருக்கும் நிகழ்வுகளும் உண்டு. எல்லா எல்நினோ தாக்க வறட்சிகளும் அரசியல் மாற்றத்த்தை ஏற்படுத்திவிடாது. 1982-83-இல் அன்றைய இந்திரா காந்தி அரசும், 2015-16-இல் இன்றைய நரேந்திர மோடி அரசும் எல்நினோ தாக்க வறட்சிகளை வெற்றிகரமாக எதிா்கொண்டிருக்கின்றன.

நன்றி: தினமணி (26  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories