TNPSC Thervupettagam

வெப்பம் தணிவது எப்போது

March 9 , 2024 135 days 180 0
  • இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியைக் கடந்துகொண்டிருக்கிறோம். வரலாற்றின் போக்கில் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவும் அவற்றின் விளைவுகளாகவும் எத்தனையோ நிகழ்வுகள் இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தில் நடந்தேறியிருக்கின்றன; நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
  • எனினும், செப்டம்பர் 11 நியூ யார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் போன்ற நிகழ்வுகள், அதுவரை உலகம் இயங்கிவந்த நிலையைப் புரட்டிப்போட்டு வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தன. அத்தகைய நிகழ்வுகளின் தேதிகளைச் சுட்டுவதே அவற்றின் தீவிரத்தை உணர்த்திவிடும். 9/11 என்பதன் பொருள் அப்படித்தான் வரலாற்றில் ஆழம்பெற்றிருக்கிறது.
  • ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறுஅம்சங்கள் வரலாற்றை நகர்த்திச் செல்பவையாக இருந்திருக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றைத் தீர்மானிக்கும் முதன்மை அம்சமாக, முதலாளித்துவ உற்பத்திமுறையால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் மேலெழுந்திருக்கிறது. தொழிற்புரட்சியின் விளைவால் புதைபடிவ எரிபொருளை முதன்மையாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதார முறை, புவியில் ஏற்படுத்தி யிருக்கும் தீவிரப் பாதிப்புகளை நாம் இப்போது எதிர்கொண்டிருக்கிறோம்.
  • புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு பசுங்குடில் வாயுக்களை வளிமண்டலத்தில் சேர்த்து, புவி வெப்பமாதலைத் தொடங்கி வைத்தது. புவி வெப்பமாதலின் சங்கிலித் தொடர் விளைவுகள், சூழலியல் தொகுதிகளில் வெளிப்படத் தொடங்கின. புவி வெப்பமாதலின் விளைவுகளால் நிலைமை ஏறக்குறைய கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC) உள்ளிட்ட அமைப்புகள் செயலாற்றி வருகின்றன.

நிற்காமல் சுழலும் வணிகச் சக்கரம்

  • பன்னெடுங்காலமாக 1 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் சீராக இருந்துவந்த புவியின் சராசரி வெப்பநிலை, தொழிற்புரட்சிக்குப் பிறகு உயரத் தொடங்கியது. அந்த அளவு 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற புள்ளியை எட்டுவது அல்லது அதைத் தாண்டுவது திரும்பிச் செல்லமுடியாத விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை அறிவிக்கும் ‘1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கையை 2018 அக்டோபர் 8 அன்று ஐபிசிசி வெளியிட்டது; 9/11-க்குரிய முக்கியத்துவம் இந்தத் தேதிக்கு இல்லை.
  • எனினும், புவியின் எதிர்காலத்துக்கான ஆவணமாகக் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் செயல்பாட்டுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை மனித குலத்துக்கு இது உருவாக்கியது. ஆனால், மனித குலத்தின் பிரதிநிதிகளான உலக இயக்கத்தைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்த மனிதர்கள் இதற்கு முக்கியத்துவத்தைத் தரவில்லை. இந்தப் பின்னணியில்தான் வரலாறு இன்னொரு சுற்றுக்குத் தயாரானது.
  • இந்த நூற்றாண்டின் திசைவழியைத் தீர்மானிக்கும் முதன்மை விசையாகக் காலநிலை மாற்றம் உருப்பெற்றிருப்பது உண்மைதான்; அரசியல் தொடங்கி இலக்கியம் வரை, உணவு தொடங்கி கேளிக்கை வரை என எல்லாவற்றிலும் அதன் தாக்கம் உணரப்படுகிறது.
  • காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்பது கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தாலும் உலக அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட தளங்களின் போக்குகள் அதை நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவைக் கொண்டுவருகின்றன; காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் துரிதப்படுத்துகின்றன.
  • அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்குப் பிறகான இந்த நான்கு ஆண்டுகளில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் (மார்ச் 2020), உக்ரைன் மீதான ரஷ்யாவின்சிறப்பு ராணுவ நடவடிக்கை’ (24 பிப்ரவரி 2022), சாட்ஜிபிடி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது (30 நவம்பர் 2022), இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான ஹமாஸின் தாக்குதல் (7 அக்டோபர் 2023) ஆகியவை தன்னளவிலும் காலநிலை மாற்றத்தை முன்னிட்டும் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
  • புவியின் சூழலியல் தொகுதிகளின் மீது மனிதகுலம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் தாக்குதல், கோவிட்-19 போன்ற பெருந்தொற்றுப் பரவலுக்கு வித்திட்டது. கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகப் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஓயாமல் சுழலும் வணிகச் சக்கரம் நிலைக்கு வந்தது.
  • காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்குக் காலம் அப்போது வழங்கிய வாய்ப்பை மனிதகுலம் தவறவிட்டது; முன்பைவிட வேகமாக வணிகச் சக்கரம் சுழலத் தொடங்கியது.

போரும் வாழ்வும்

  • போர் எப்போதுமே கண்மூடித்தனமானது. போரில் பலியாவது உண்மையும் அப்பாவிப் பொதுமக்களும்தாம். பண்டைய காலத்தில் போரின் விளைவுகள் அதில் கொல்லப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மதிப்பிடப்பட்டது. நவீனக் காலத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த ஓர்மை கூர்மையடைந்திருப்பதன் பின்னணியில், போரின் விளைவுகள் சுற்றுச்சூழலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிற கண்ணோட்டத்திலும் மதிப்பிடப்படுகிறது.
  • இருபதாம் நூற்றாண்டின் இரண்டு பெரும் உலகப் போர்களும் ஆற்றல் சார்ந்த புவிசார் அரசியலும் எவ்வாறு இணைந்தன, அது சுற்றுச்சூழலில் எத்தகைய மோசமான விளைவுகளைக் கொண்டுவந்தது என்பதைப் புரிந்துகொள்வதன்வழி இருபதாம் நூற்றாண்டைப் பொருள்கொள்ள முடியும் என வரலாற்றாய்வாளர்கள் வாதிடுகின்றனர்.
  • வரலாற்றிலிருந்து நாம் எதையுமே கற்றுக்கொள்வதில்லை என்பதையே வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்றோம்என தத்துவவியலாளர் ஹெகலின் கருத்தைச் சாராம்சப்படுத்தும் வரியின் கனம் இன்றைக்கு மேலும் கூடியிருக்கிறது. ரஷ்ய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றில் அரசியல் ஸ்திரமின்மையால் நிலவும் சண்டைகள் எனப் போர்களும் சண்டைகளும் இன்றும் தொடர்கின்றன. உயிரிழப்புகள், வாழிடப் பாதிப்பு உள்ளிட்ட போரின் நேரடிப் பாதிப்புகளின் பட்டியலில் சுற்றுச்சூழல் அழிவும் இன்று சேர்ந்திருக்கிறது.
  • உலகளாவிய பசுங்குடில் வாயு உமிழ்வில், ராணுவ நடவடிக்கைகளின் பங்கு சுமார் 5.5%; ராணுவ நடவடிக்கைகளை ஒரு நாடாகக் கருதினால் கரியமில வாயு உமிழ்வில் அது உலகின் நான்காவது பெரிய நாடாக இருக்கும். காலநிலை மாற்றத்துக்கு வரலாற்று ரீதியாக முதன்மைக் காரணமான அமெரிக்கா, தன்னுடைய ராணுவ நடவடிக்கைகள் மூலமும் அந்தக்கடமையிலிருந்து சிறிதும் வழுவாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது.

வெப்பம் தணியுமா

  • இரண்டாம் உலகப் போர் தந்த அனுபவங்களின்வழி உருவான மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், .நா. அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் இந்தப் பிரகடனம் உறுதிசெய்கிறது. ஆனால், இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் போர்கள் அந்தப் பிரகடனத்தின் இலக்கைக் கேள்விக்கு உள்படுத்துகின்றன.
  • 21ஆம் நூற்றாண்டின் சமூக நீதி என்பது சூழலியல் நீதியையும் உள்ளடக்கிய ஒன்றுதான். போரில்லா உலகத்தில்தான் உண்மையான சமூக நீதி சாத்தியப்படும். காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், போரின் விளைவுகள் மனிதர்கள் அனைவருக்குமான சமூக நீதியை உறுதிசெய்வதைத் தாமதப்படுத்துகின்றன. போரின் வெப்பம் மனித உரிமைகளைப் பொசுக்குகிறது; புவியின் வெப்பம் சூழலியல் நீதியைப் பொசுக்குகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories