TNPSC Thervupettagam

வெயிலும் கண் பாதுகாப்பும்

May 18 , 2024 61 days 154 0
  • சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாப்பதைவிட முக்கியமானது கண்களைப் பாதுகாப்பது. சிவந்த கண்கள், கண் வலி, கண் உறுத்தல், கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் தன் 13 வயது மகளைக் கண் மருத்துவரிடம் அழைத்து வந்தார் தாய் ஒருவர். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவருக்குக் கண்ணில் வெண் படல ஒவ்வாமை நோய் (Allergic Conjunctivitis) இருப்பதாகக் கூறி அதற்குச் சிகிச்சை அளித்தார்.
  • கண் வெண்படல ஒவ்வாமை நோய் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், நீண்ட நேரம் திறன்பேசி பார்ப்பதாலும் ஏற்படுகிறது. மேலும், நீச்சல் குளங்களைச் சுத்தப்படுத்த பயன்படும் குளோரின் கலந்த நீர் கண்ணில் படும்போதும் கண் வெண் படல ஒவ்வாமை நோய் ஏற்படலாம்.

அதிக பாதிப்பு:

  • இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால் கண் வறட்சி, கண் ஒவ்வாமை நோயால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆழமான தூக்கம், லகுவான மனம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, வலுவான எலும்பு நலன், சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் என மனிதனின் ஆரோக்கியத்திற்குப் பகல் நேரச் சூரிய ஒளி மிகவும் உதவுகிறது.
  • சூரிய ஒளியில் விளையாடும் குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வைக் குறைபாடு குறைவாகவே காணப் படுகிறது. இருந்தபோதிலும் சூரிய ஒளி வெயில் காலத்தில் அதிகமாகத் தாக்கும்போது வெப்ப மயக்கம் உள்ளிட்ட பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

வெயிலும் கண் நோயும்:

  • வெயில் காலத்தில் சூரிய ஒளியில் உள்ள வெப்பம், அதில் உள்ள புற ஊதாக் கதிர்கள் நம் கண்களைப் பாதித்துக் கண் நோயை உண்டாக்கும். வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால் கண்ணில் நீர்ச்சத்துக் குறைவு ஏற்பட்டு கண் வறட்சி நோய் ஏற்படக்கூடும்.
  • விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகள் வெயிலில் விளையாடுவது, நீண்ட நேரம் திறன்பேசி பார்ப்பது போன்ற காரணங்களாலும் சூரிய வெப்பம், காற்றில் அதிகப்படியான மாசு காரணமாகக் கண் வறட்சி நோய், கண் ஒவ்வாமை நோயாலும் பாதிக்கப் படுகிறார்கள்.
  • வெயில் காலத்தில் கண் நீர்ச் சுரப்பிகளில் கிருமித் தொற்று ஏற்பட்டுக் கண் கட்டி வரக்கூடும். இதற்கு மருந்தாக நாமக்கட்டியைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், நாமக்கட்டி போட்டால் அது கட்டியின் வீக்கத்தில் உள்ள நீரைக் குறைத்துக் கட்டியை இறுகச் செய்துவிடும். இதனால், கட்டி இறுகி அது நாள்பட்ட கண் கட்டியாக மாறி சிலருக்கு அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும்.
  • சில நேரம் கண் கட்டியில் கிருமித் தொற்று இருந்தால் சுற்றி யுள்ள வீக்கம் குறைந்து அது சீழ்க் கட்டியாக (localised Abscess) மாறவும்கூடும். இதனால், கண் கட்டிக்கு நாமக் கட்டியை உரைத்துப் போடும் தவறான பழக்கத்தை செய்யக் கூடாது. கட்டிகள் வராமல் தவிர்க்க, தரமான குளிர்க் கண்ணாடி (கூலிங் கிளாஸ்) அணிந்துகொள்ள வேண்டும்.
  • வெயில் காலத்தில் பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் நீச்சல் குளங்களில் நீச்சல் கற்றுக்கொள்வதும் விளையாடுவதும் அதிகம் காணப்படும். நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரைச் சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் குளோரின் நம் கண்ணில் படும்போது அது நம் கண்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
  • இதைத் தவிர்க்க நீச்சலுக்குப் பயன்படுத்தும் பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நீச்சல் குளத்தில் குளித்து முடித்தவுடன் கண்களைச் சுத்தமான குடிநீரால் கழுவ வேண்டும்.
  • சில நேரம் நீச்சல் குளத்தில் குளிப்பவர்களுக்குக் கண் கிருமித் தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க நீச்சல் குள உரிமையாளர்கள் நீச்சல் குளக் கிருமித் தொற்று நீக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

பாதுகாக்கும் சில வழிமுறைகள்:

  • வெயில் காலத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெயிலில் வேலை செய்யும் விவசாயிகள், பிற தொழிலாளர்கள் 45 நிமிட வேலைக்குப் பிறகு 15 நிமிட கட்டாய ஓய்வு தேவை. ஓய்வு நேரத்தில் போதுமான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • # நீர்சத்துள்ள உணவு: தண்ணீர், பழச்சாறு, மோர், நீர்ச்சத்துள்ள உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள், பெரியவர்கள் திறன்பேசி போன்ற மின்னணுச் சாதனங்களை அதிகம் பயன்படுதுவதைத் தவிர்க்க வேண்டும். காரணம், கண்ணில் நீர்ச் சத்து குறைந்து, கண் வறட்சி ஏற்பட்டுக் கண் வெண் படல ஒவ்வாமை வரக்கூடும்.
  • இரவில் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவை. வெயில் காலத்தில் கண்களைப் பாதிக்கும் வெப்பம், புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் குளிர்க் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அணிந்துகொள்ளும் கண்ணாடிகள் தரமான கதிரியக்கத்தைத் தடுக்கும் சான்றிதழ் கொண்டவையா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.
  • புழுதி நிறைந்த இடங்களில் விளையாடுவதைக் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். வெயிலில் சென்று வந்தவுடன் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மிதமான குளிர் தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் இரண்டு முறை நல்ல தண்ணீரில் குளிக்க வேண்டும். உடல், கைகளைச் சுத்தமாகவும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • # புகைபிடித்தலைத் தவிர்க்க... வெயில் காலத்தில் புகைபிடிப்பதால் கண் வறட்சி நோய் அதிகமாகும். இதனால், புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்பவர்கள் குடைகளைப் பயன்படுத்துங்கள். வெயில் காலத்தில் கண்ணில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும். நீங்களாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • வெயில் காலத்தில் யாராவது மயங்கி விழுந்தால் அவரைச் சாலையிலிருந்து நிழல் உள்ள பகுதிக்குத் தூக்கிச் செல்லுங்கள். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்து மருத்துவமனையில் சேருங்கள். முதியவர்கள், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற நீண்ட நாள் இணை நோய் உள்ளவர்கள் வெயிலில் செல்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெயிலைத் தவிர்க்க:

  • தொடர்ந்து அதிகப்படியான வெயிலில் சென்று கொண்டிருக்கும்போது சூரிய ஒளியில் உள்ள அதிகப்படியான புற ஊதாக் கதிர்கள் கண்ணில் புரை நோய், கண்ணில் சதை வளர்ச்சி நோயை ஏற்படுத்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories