- மனிதனைத் தவிர வேறு எந்த உயிரும் சென்றதை நினைத்துக் கவலை கொள்வதில்லை. மனிதன் இடைவெளியின்றிக் கவலைகளால் மட்டுமே இயங்கினால், அவன் வாழ்க்கை எவ்வாறு உயிர்ப்புடன் இருக்கும்? கவலைக்கு மருந்து மது என்று மயங்குகிறது மனம். அதையே எதார்த்த வாழ்க்கை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நியாயப்படுத்துகிறது. படக்காட்சிகள் மட்டுமல்ல, பார்வையில் படுகிற எல்லாக் காட்சிகளும் மதுக்கடைகளை நோக்கிய பாதையையே முன்னிறுத்துகின்றன.
- "குடி குடியைக் கெடுக்கும்' என்கிற வாசகத்தைப் படித்துக்கொண்டே குடிக்கிற பழக்கம் எப்படி வந்தது? தீதெனத் தெரிந்தே பயன்படுத்தும் தீமையை ஒரு பழக்கமாகத் தொடங்கி, வழக்கமாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து விடுபட முடியாமல் அதற்கே அடிமையாகி விட்டு, சுதந்திர புருஷர்களாய் நம்மை நாமே நினைத்துக் கொள்வது சரியாகுமா?
- புலாலும் கள்ளும் உட்கொள்ளும் வகைசார்ந்தவை. புலால் அருளாளர்களுக்கு மறுக்கப்பட்டது; அது அறம் சார்ந்தது; அன்பே அதற்கு அடிப்படை. "புலால் மறுத்தல்' என்றே அந்த அதிகாரத்திற்குத் தலைப்பிட்டிருப்பார் திருவள்ளுவர்; அருளுடைமைக்குப் பின்னும் தவத்திற்கும் முன்பு அவ்வதிகாரத்திற்கு இடம் கொடுத்திருப்பார்.
- புல் அல்லாத உணவை, அதாவது தாவர உணவைத் தவிர, ஏனையவற்றை மறுத்துவிடுதல். தவிர்த்துவிடுதல் வேறு; மறுத்துவிடுதல் வேறு. மறுத்தல் மனம் சார்ந்தது; தவிர்த்தல் செயல் சார்ந்தது. மறுக்கிற மனம் ஆசையைத் துறக்கிற மனம். அதன்வழி துன்பத்தைத் தவிர்க்கப் பழக்குவது அறம். இவையிவை இன்றியமையாதவை என்று உரிய ஒழுகலாறுகளை வரையறுத்துச் சொல்வது அறம். தவிர்த்தல் என்பது அதன் உட்கிடக்கை.
- மனப்பக்குவத்தால், மருத்துவத் தேவையால், உணர்வுச் செறிவினால் வளர வேண்டிய ஒழுக்கம் புலால் மறுத்தல். "வாயைக் கட்டினால், வயிற்றைக் கட்டலாம்; வயிற்றைக் கட்டினால், வாழ்வைக் கட்டலாம்' என்பது என் தந்தையின் அறிவுரை. "உடம்பைக் கட்டினால் உயிரைக் கட்டலாம்' என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். "உடம்பால் அழியின் உயிரால் அழிவர்' என்பார் திருமூலர்.
- "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்பது போய், உடம்பைக் கெடுத்தேன் உயிர் கெடுத்தேனே' என்கிற நிலையில் மருத்துவரிடம்போய், உயிர் காக்கச் சொல்லி மன்றாடினால் ஏது பயன்?
- "உணவே மருந்து மருந்தே உணவு' என்பது நமது மரபு. உணவெனப்படுவது உடல் சார்ந்தது மட்டுமல்ல, உணர்வும் சார்ந்தது. "உழைக்காமல் சாப்பிடுகிற உணவு உடலில் ஒட்டாது' என்பார்கள் மூத்தவர்கள்.
- "மது, மாது இரண்டால்தான் இன்பம்' என்கிற மயக்கம் எல்லாருக்குள்ளும் திணிக்கப் பட்டிருக்கிறது. பின்னதில் இன்னோர் உயிர் இருக்கிறது; ஆனால், முன்னதில் நாம் மட்டுமே இருக்கிறோம் என்கிற நிலையில், தன்னளவில் கெடுவது பரவாயில்லை என்று தொடங்கி, தன் நலம் கெடுத்து, குடும்ப நலம் சிதைத்து, சமூகக் கேட்டிற்கும் வித்திடுகிற இடத்தில் இந்தப் போதைக்கு அடிமையாகும் போக்கு இருக்கிறது.
- மதுவின் தன்மை வேறு; தரம் வேறு. களித்திருக்க விரும்புவோர் கள்ளுண்பர். உழைத்துக் களைத்தவர்கள் ஓய்ந்திருக்கக் கள்ளுண்பர். அது கூட, களிப்புத் தருமா என்பது ஐயம். "கள்ளுண்டு களித்தானைக் காரணம் காட்டுதல் என்பது, தண்ணீருள் மூழ்கிய ஒருவனைத் தீவட்டி கொண்டு தேடுவதை ஒத்தது' என்றார் திருவள்ளுவர். (குறள்: 929)
- ஆனாலும், சிலருக்கு இன்றியமையாத் தேவையாக இந்த மது இருக்கிறது என்போர் கருத்து, திருவள்ளுவர் காலத்திலேயும் இருந்திருக்கிறது போலும். அதனால்தான், "உண்ணற்க கள்ளை' என்று ஒதுக்கச் சொன்ன திருவள்ளுவர், "உணில் உண்க' என்று அனுமதியும் கொடுக்கிறார். யாருக்கு? "சான்றோரால் எண்ணப்பட வேண்டாதவர்களுக்கு.' எல்லார்க்கும் இல்லை. ஆக, சான்றாண்மை கொல்லும் அளவிற்கு வல்லமை உடையது கள் என்பது அவர்தம் கணிப்பு.
- பெண்ணுக்குக் கற்பையும் ஆணுக்குச் சான்றாண்மையையும் வலியுறுத்திய அவர், "ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' என்று அறுதியிட்டு உரைக்கிறார். தன்னைத்தான் கொண்டு ஒழுகத் தெரியாதவர்கள்தான் தன்னை அவமதிக்கிறார்கள்; பெண்ணை இழிவுபடுத்துகிறார்கள்; பிறரைத் துன்புறுத்துகிறார்கள்.
- சான்றோர் இல்லாத ஊர் உருப்படாது. அதனால்தான், தன் கால் சிலம்பினை விற்கச் சென்ற தன் கணவனைக் கள்வன் என்று கொன்ற மூதூர் பார்த்துக் கண்ணகி கேட்டார் "சான்றோரும் உண்டுகொல்' என்று. சீதையைச் சிறைப்படுத்திய இலங்கையைப் பார்த்து அனுமன், "களிக்கின்றார் அல்லால் கவல்கின்றார் ஒருவரைக் காண்கில்லேன்' என்கிறான். "சுக்ரீவன் தன்னைக் காத்த தலைவனாம் இராமனுக்கு முன்னர்க் கொடுத்த வாக்கை மறந்து மூழ்கியது இந்தக் கள்ளினால்தான்' என்று காட்டுகிறது இராமாயணம்.
- பண்டைக்காலத்தில் இருந்தே கள்ளும் உணவாய் இருந்ததைப் பலரும் சொல்லிக் காட்டுகிறார்கள்; அக்காலத்தில் இருந்தே அதன் தீமையையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்களே.
- கள்ளானது, முதலில் கொடுத்த வாக்கை மறக்கச் செய்யும்; பின்னர் வாழ்க்கையையே மறக்கச் செய்யும் என்பதற்குக் குரங்கைக் கொண்டு விளக்கியது வெறும் பொழுதுபோக்குக் கதைக்காகவா? இத்தனைக்கும் தன்னைக் கொன்ற இராமனின் முன் சாகும் தறுவாயில் வாலி சொல்கிறான். "உன்னிடம் ஒன்று வேண்டுகிறேன். என் இளவல் சுக்ரீவன்,
பூஇயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்,
தீவினை இயற்றுமேனும்,எம்பிமேல் சீறி
என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவன்
- என்றான்'
- "கள் உண்பதால் புத்தி மாறும். நல்லதற்குப் பதிலாகத் தீமை செய்வான். அப்போது அவன் மேல் கோபம் கொண்டு, என்னைக் கொல்ல ஏவிய அம்பினை அவன் மேல் ஏவிவிடாதே' என்று அவன் தன் தம்பிக்காக மட்டுமா வேண்டினான்? அப்படியே சுக்ரீவன் நடந்தும் கொண்டானே அது எத்தகு நம்பிக்கைத் துரோகம்? கைம்மை நோன்பு நோற்ற தாரை தன் கூட்டத்தாருடன் வந்திருக்காவிட்டால் கிட்கிந்தை என்னவாகி இருக்கும்?
- தன் கவலையை மறக்க மதுவை நாடும் மனிதன் பொதுக்கவலையைப் புறந்தள்ளிவிடுகிற அவலம் அப்போது வந்துவிடுகிறது. தனக்குள்ளேயே குற்றத்தை வைத்துக் கொண்டு, குற்றவாளியாக மறுகும் ஒருவன் எவ்வாறு சமூகக் குற்றங்களைச் சரி செய்ய முடியும்? சமூகக் குற்றம் இருக்கட்டும்; தன் குடும்பச் சிக்கல்களுக்குக் கூட நடுநிலையோடு நின்று கருத்தளிக்க முடியாத குற்ற உணர்வைத் தந்துவிடுகிறதே. பிறகு அதையே நியாயப்படுத்தும் நிலைக்கு வருவது எத்தகு அவலம்?
- தனிவாழ்வில், நியாயவாதியாக இருக்க முடியாத ஒருவனால், பொதுவாழ்வில் நீதி சொல்ல முடியாது; சொன்னாலும் உலகம் ஏற்காது. ஒருவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று சக மனிதன் இருக்க இயலாது. காரணம், மனிதன் தனிமரமல்லன்; கூட்டமாய் வாழும் குணத்தன். கூடைப் பழங்களில் ஒன்று அழுகினாலும், கூட மீதம் இருக்கும் பழங்களும் அழுகிப்போகும். அழுகுமுன் பயன் கொள்ளத் தெரியாமல், கூடைப் பழங்களைக் கொட்டுவதால் யாது பயன்?
- அதைவிடக் கொடுமை, பிஞ்சிலே பழுத்தல். அது வெம்புதல். இந்த மதுவை நினைத்துத் தனக்குத் தானே வெம்பும் நிலை கூடக் குறைந்து வருகிறது. வெறுமைக்காக, வறுமைக்காக, பெருமைக்காகக் குடிப்பவர்கள் போய் இப்போது அது இல்லாமல் இருக்கவே முடியாது என்பவர்கள் பெருகிக் கொண்டு வருகிறார்கள்.
- எப்போதும், கூடவே இருக்கும் உடலைப் பேணாது விடுப்பது தன்னல மறுப்பாகத் தெரியலாம்; தன் குடும்பத்தார்க்கும் சந்ததியார்க்கும் உரிய பொதுநலத்தையும் கெடுப்பது அது என்பதை உணர மறுப்பதுதான் உறுத்துகிறது. உடல் நலத்தையும் பொது வளத்தையும் புறக்கணிக்கும் ஆபத்து அதனால் வருவதால், கள்ளுண்ணாமை அதிகாரத்தை, அறத்துப்பாலில் வைக்காமல் பொருட்பாலில் வைத்துப் புரிய வைக்கிறார் திருவள்ளுவர்.
- அறத்தையும் பொருளையும் மறப்பதன் மூலமாக இன்பத்தையும் இழக்கிற மனிதர்களை எச்சரிக்க, "நஞ்சுண்பார் கள் உண்பவர்' என்கிறார் திருவள்ளுவர். கள்ளைச் சொல்ல வந்த அவர் அதற்குமுன்னதாக நஞ்சு என்று அவசரமாய்ச் சொன்னது கவிதை நயத்திற்காகவா? அதற்கு முன்னதாக, "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்' என்கிறார்.
- அது தூங்குவோரைக் குறிக்காது; குடித்து மயங்கி, எங்கு கிடக்கிறோம் என்கிற உணர்வே அற்று, கால் வைக்கக் கூட அருவருப்பு அடையும் இடத்தில் கிடக்கும் மனிதர்களைக் குறிப்பது. எந்தக் கவலையும் படாமல் அவர்களைக் கண்டும் காணாது போகும் மனநிலை இப்போது பலருக்கு இயல்பாகிவிட்டதே.
- அந்த நிலையில் கிடக்கும் மனிதர்க்கு மனைவி, குழந்தைகள் இருப்பார்களே என்கிற கவலையை எப்படித் துறப்பது? நன்மை தீமை இன்னதென்றே அறியாத பிள்ளைகளை, இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டிருப்பதுதான் எல்லார்க்கும் பெருங்கவலை அளிக்கிறது.
- வாக்களிப்பதற்கும், வாழப்புகும் திருமணத்திற்கும் வயது வரம்பு வைத்து உறுதிப்படுத்தும் ஒரு கடப்பாடு, மதுவருந்துவோர்க்கும் கொண்டுவரலாகாதா என்று ஏங்குகிறது சான்றோர் உள்ளம்.
- உயிர் இயற்கையான காமத்தைத் துறக்க முடிந்த மனிதர்களால், தாம் கண்டுபிடித்த செயற்கை மதுவைத் துறக்க முடியாததுதான் துயரத்திலும் துயரம். அதற்கான நியாயங்களைக் கற்பிப்பது அவலத்தினும் அவலம்.
- மதுவை வெறுப்பதை விட மறப்பது நல்லது; அதைவிடவும் அறவே துறப்பது மிகவும் நல்லது. அதற்கு, மதுக்கடைகளைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் அப்பால், அதனைத் துறக்கிற மனத்தை உருவாக்குவதுதான் இன்றைய இன்றியமையாத் தேவை.
நன்றி: தினமணி (01 – 06 – 2023)