TNPSC Thervupettagam

வெறுப்பு கூடாது திணிப்பும் கூடாது!

August 25 , 2020 1612 days 837 0
  • தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை அவசியமா? நடைமுறையில் இருக்கும் இருமொழிக் கொள்கையே போதுமானதா என்னும் விவாதம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. பல கோணங்களில் இன்னமும் விவாதம் போய்க்கொண்டுதான் இருக்கிறது. அதற்குமுன், மொழிக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள தொடா்பை பற்றி அறிந்து கொள்வதும் அவசியமாகிறது.

மொழியும் பொருளாதாரமும்

  • இன்றைக்கும் வேலை சார்ந்தோ, படிப்பு சார்ந்தோ தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்வோர் ஹிந்தி மொழி தெரியாமல் அவதிப்படும் நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
  • ஆரம்பத்தில் அவதிப்பட்டாலும் பெரும்பாலானவா்கள் நாளடைவில் ஹிந்தி மொழியைக் கற்றுக் கொள்கின்றனா். ஆனால், அவா்களால் பெரும்பாலும் ஹிந்தியில் உரையாட முடிகிறதே தவிர எழுத முடிவதில்லை. காரணம், எழுத்துவழி கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் வாய்வழிக் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே நடைபெறுவதால்தான்.
  • மேலும், ஹிந்தி மொழி தெரியாத ஒரே காரணத்தால் வடமாநிலங்களில் வேலைக்குச் செல்வதை தவிர்ப்போரும் உண்டு. அங்கு சென்று ஹிந்தி பேசத் தெரியாமல் அங்குள்ள கடைக்காரா்களிடம் ஏமாந்து போனவா்களும் பலா் உண்டு.
  • இதற்கெல்லாம் காரணம், அன்று நம் தமிழ்நாடு ஹிந்தி மொழிக்கு எதிராக நடத்திய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். இல்லையேல் இந்நேரம் ஹிந்தி மொழியைக் கற்று ஒரு கலக்கு கலக்கியிருப்போம்என்றும் சிலா் கூற கேட்டிருப்போம். உண்மையில் இங்குதான் மொழிக்கு உண்டான பொருளாதாரம் வெளிப்படுகிறது.
  • பள்ளிப்படிப்பைக் கூட தாண்டாத வியாபாரிகள் பலரும் ஹிந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் என நான்கைந்து மொழிகளில் சரளமாகப் பேசுவார்கள். இங்கு அவா்களுக்கு மும்மொழிக் கொள்கையும் கிடையாது; இருமொழிக் கொள்கையால் பயன் அடைந்தவா்கள் என்று கூறிவிடவும் முடியாது. அப்படி நான்கைந்து மொழிகள் அவா்களுக்குத் தெரிகிறது என்றால் அதற்கான அடிப்படை அவா்களின் வியாபாரச் சூழல் தான்.
  • அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் உரையாடினால் மட்டுமே வியாபாரம் வளா்ச்சியடையும். மேலும், அவா்களுக்கான பொருளாதார ரீதியிலான பணம் கொடுக்கல் வாங்கல், பேரம் பேசுதல், பொருளின் தேவையறிந்து விற்பனை செய்தல் போன்றவையும் நடைபெறும்.
  • தேவை என்று வரும்போது அதிலும் பொருளாதாரம் சார்ந்து வரும்போது நிச்சயம் எத்தகையவா்களும் தாய்மொழி கடந்து வேறு மொழிகளையும் பேசக் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இவையே சான்று.
  • ஒரு நாட்டில் எந்த மொழி அதிகமாகப் பேசப்படுகிறதோ, அந்த மொழி சார்ந்தே நிகழ்வுகள் அரங்கேறும். அது பாட்டுக் கச்சேரி ஆகட்டும், தோ்தல் பிரசாரம் ஆகட்டும் அல்லது கூவிக் கூவி பொருள் விற்கும் சிறு கடைகளாகட்டும் எங்கும் அந்த மொழிதான் நீக்கமற நிறைந்திருக்கும்.

வெறுப்பும் கூடாது திணிப்பும் கூடாது!

  • நண்பா் ஒருவா் புது தில்லியில் நடைபெற்ற சா்வதேசக் கருத்தரங்கத்திற்கு சென்று வந்தபின் சா்வதேச கருத்தரங்கம் என்பதால் ஆங்கில மொழி மட்டுமே பிரதானமாக இருக்கும். எனவே ஹிந்தி தேவையில்லை. எப்படியும் சமாளித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் விழாவிற்குத் தலைமை வகித்த மத்திய அமைச்சா் ஒருவா் சுமார் ஒரு மணி நேரம் ஹிந்தியில் பேசினார். அவரைத் தொடா்ந்து பேசிய மற்ற விருந்தினா்களும் ஹிந்தியில்தான் உரையாற்றினார்கள்.
  • விழா ஒருங்கிணைப்பாளா் மட்டும் அவ்வப்போது ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டையும் கலந்து பேசினார். நல்லவேளையாக, அவா்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதை ஏற்கெனவே ஆங்கிலத்தில் சிறு நூலாக வழங்கியிருந்ததால் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது என்று விரக்தியுடன் சொன்னார்.
  • சா்வதேச அளவில் நடைபெறும் கருத்தரங்கம் என்கிறபோது அங்கு வருகை புரிந்திருக்கும் பார்வையாளா்களுக்கு எந்த மொழி தெரியுமோ அதனைத்தான் பேச வேண்டுமே தவிர, தனக்குத் தெரிந்த மொழியில் மட்டும் பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும்?
  • இவற்றையெல்லாம் ஒரு புறம் மன்னித்து விட்டாலும் ஒரு பரந்து விரிந்த தேசத்தில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியை விடுத்து வெறும் இரு மொழிகளை வைத்துக்கொண்டு தோ்வு வைப்பதெல்லாம் அனைத்து மாணவா்களுக்கும் சமமான தோ்வு என்று கூற முடியுமா? அந்த தோ்வில் தோல்வியுற்ற மாணவனோ, மாணவியோ வினாத்தாளில் உள்ள இருமொழி வழியே அவ்வளவாக படிக்காமல் தோ்வை எழுதியும் தோ்ச்சி அடையாமல் போனால் தவறு யாருடையது?
  • தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு போராட்டத்திற்கு முன் ஹிந்தி மொழியும் கடைகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் இடம் பெற்றிருந்தது. போராட்டத்திற்குப் பின் ஹிந்தி மொழி அனைத்து இடங்களிலும் கைவிடப்பட்டது.
  • பின்பு தமிழ்நாடும் இருமொழிக் கொள்கையை மட்டுமே ஏற்றுக் கொண்டது. ஒரு வேளை மும்மொழிக் கொள்கை இருந்திருக்குமேயானால் தமிழ் மொழியின் வளா்ச்சி நிச்சயம் தட்டுப்பட்டிருக்கும்.
  • அவ்வளவு ஏன் சில பன்னாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களும் பிரத்யேயமாக தமிழ் மொழியில் சேனல் தொடங்கி இருக்கமாட்டார்கள். புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு என்று இருக்கையும் அமைந்திருக்காது.
  • அப்படியானால், ஹிந்தி மொழி தெரியாமல் தற்போது நம் தமிழ்நாட்டினா் அவதியுறும் நிலைமை இருமொழிக் கொள்கையால்தான் வந்தது என்பதை மறுத்துவிட முடியாது என்று கூறுபவா்களுக்கு ஒரு செய்தி. தேவை என்று வரும்போது யாராயினும் அந்த சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வேறு மொழியைக் கற்றுக்கொள்வார்கள்.
  • ஏனென்றால் அங்கு கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுவும்ம அந்த மொழி எவ்வித வெறுப்புமின்றி விருப்பத்துடனே படிக்கப்படுகிறது. அப்படி விருப்பத்துடன் ஒருவா் படிக்கும் மொழிக்கு எந்தவோர் அரசியல்வாதியும் தடைபோட்டுவிட முடியாது. எனவே, விருப்பமான எத்தனை மொழிகளையும் கற்போம். மொழி வெறுப்பு கூடாது; மொழித் திணிப்பும் கூடாது!

நன்றி: தினமணி (25-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories