வெற்றிகாணுமா கமலா ஹாரிஸின் பயணம்?
- 1968இல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் லிண்டன் பி ஜான்சன், வியட்நாம் போரில் அமெரிக்கத் தலையீட்டின் விளைவாகச் செல்வாக்கை இழந்ததால், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என்று முடிவுசெய்தார்.
- ஏறக்குறைய 56 ஆண்டுகளுக்குப் பிறகு முதுமை, புகழ்வீழ்ச்சியின் காரணமாகத் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தேர்தலிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார். அவர் ராஜிநாமா செய்யவில்லை என்றாலும் அடுத்த அதிபர் ஆவதற்கான போட்டியிலிருந்து விலகுவது முக்கியமான விஷயம்தான்.
- எதிர்பார்த்ததுபோலவே, துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். 2024 ஆகஸ்ட் 19 அன்று திட்டமிடப்பட்டுள்ள கட்சி மாநாட்டுக்காக ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்களின் ஆதரவை அவர் பெற வேண்டும்.
- ஜனநாயகக் கட்சியில் 4,000 பிரதிநிதிகள் உள்ளனர். ‘அசோசியேட்டட் பிரஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 3,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கமலா ஹாரிஸை ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளனர். பெரும்பான்மையை வெல்ல 1,976 பிரதிநிதிகள் தேவை. கட்சியில் பல தலைவர்கள் ஹாரிஸை ஆதரித்துள்ளனர்.
- அதில் மக்கள் பிரதிநிதி அவையின் முன்னாள் தலைவரும், பைடனை 2024 தேர்தலிலிருந்து விலகவைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவருமான நான்சி பெலோசி, முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிசெல் ஒபாமா ஆகியோர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- கமலா ஹாரிஸின் பிரச்சாரம் 130 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டியுள்ளது. மேலும், பல பெரிய நன்கொடையாளர்கள் நிதியளிக்க முன்வந்துள்ளனர். 2008 தேர்தலில் ஒபாமாவுக்கும் இதே போன்ற நிதி ஆதரவு கிடைத்தது. 2024 ஜூலை 25 அன்று நியுயார்க் டைம்ஸ்/சியென்னா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 47%, டொனால்ட் ஜே. டிரம்ப் 48% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
- தேசிய அளவில் கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கமலா ஹாரிஸ் ஆதரிக்கிறார். அவர் தனது 2020 பிரச்சாரத்தில் சுற்றுச்சூழல் நீதியின் அவசியத்தை வலியுறுத்தினார். 2024 ஜூலை 25 அன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச் சந்தித்தபோது, கமலா ஹாரிஸ் காஸா குறித்து கடுமையாகப் பேசினார்.
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாஹு உரையாற்றிய நாளில், அந்தக் கூட்டத்தில் ஹாரிஸ் கலந்துகொள்ளவில்லை. ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக, மின்னசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
- அமெரிக்க ராணுவ வீரர், ஆசிரியர் எனப் பல்வேறு பணிச்சூழலைக் கண்டவரான டிம் வால்ஸை தேசப்பற்றாளர் எனப் புகழ்ந்திருக்கிறார் கமலா ஹாரிஸ். இந்த இணையின் வெற்றிவாய்ப்பு என்ன என்பது விரைவில் தெரிந்துவிடும்!
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 08 – 2024)