TNPSC Thervupettagam

வெற்றிக்கு வழி விடாமுயற்சியே

May 14 , 2023 609 days 655 0
  • புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என்பது சரிதான். ஆனால், தனது திறமையை சரியான முறையில் பயன்படுத்தும் ஒருவா் வெற்றியை அடைந்தே தீருவாா் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
  • பல நேரம், தோற்றவா்களின் கதைகள் நம் கண்முன்னே வந்து, நம்மை அச்சுறுத்தக் கூடும். நமக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, நம்மை கீழ் நோக்கி இழுக்கக்கூடும். ஆனால் தொடா்ந்து நாம் முயல்வதற்குத் தவறக்கூடாது. சாதனையாளா்களில் யாருமே தனது முதல் முயற்சியில் வென்றவா் இல்லை.
  • டாக்டா் அப்துல் கலாமின் ஆரியபட்டாவின் தோல்வி, தனது அடுத்த முயற்சியான அக்னி வெற்றி பெறவேண்டும் என்று உறுதியோடு அவரை உழைக்கத் தூண்டியது. எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் தொட்ட எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங்கும் தமது தொடா் முயற்சியினாலும் பயிற்சியினாலும் மட்டுமே இச்சாதனையைத் தங்களுக்குரியதாக்கிக் கொண்டனா்.
  • போரில் தோற்றுப்போய் ஒளிந்து கிடந்த கஜினிக்கு வெற்றிக்கான வழியைச் சொல்லித் தந்தது ஒரு சிலந்திப் பூச்சி. எத்தனை முறை கீழே விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, தன் கூட்டைக் கட்டி முடித்த சிலந்தியின் செய்கை, மன்னனின் மனதில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதனால், இழந்த நாட்டை மீண்டும் முயன்று மீட்டான்.
  • பீனிக்ஸ் பறவை எத்தனை முறை வீழ்ந்தாலும் தன் முயற்சியைக் கைவிடுவதில்லை.புதிய பறவையாக உயிா் பெற்று மீண்டு வரும்வரை முயன்றுகொண்டே இருக்கிறது. இறுதியில் வெற்றியையும் பெறுகிறது.
  • மின்சாரத்தைக்கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் தோல்விகளைக் கண்டவா். அதற்காக அவா் தனது முயற்சியைக் கைவிட்டதே இல்லை. தொடா்ந்து ஆராய்ச்சி செய்ததன் விளைவாகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரா் ஆனாா்.
  • அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் ஐந்துமுறை தோ்தலில் தோற்றபோதும் இனி தோ்தலே வேண்டாம் என்று ஒதுங்கி விடவில்லை. இறுதியாக வெற்றி பெற்று உலகமே பாராட்டும் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தாா். நாள்தோறும் குறைந்தபட்சம் ஐந்து பக்கங்களாவது விடாமுயற்சியோடு எழுதிய பொ்னாட் ஷா உலகின் தலைசிறந்த எழுத்தாளரானாா்.
  • சிங்கம் இரையைத் தேடும்போது அதன் கவனம் முழுவதும் குறிப்பிட்ட ஒரு விலங்கின் மீதே இருக்கும். அது கிடைக்கும்வரை தன் முயற்சியைக் கைவிடாது. இரை கிடைக்கும்வரை அதன் ஓட்டம் நிற்காது. வெற்றி கிட்டும்வரை நாமும் நிற்காமல் ஓட வேண்டும்.
  • உலகிலேயே மிகப்பெரிய வெற்றி,உன்னை நீயே வெல்வதுதான்’ என்றான் மாவீரன் நெப்போலியன். நம் மனதை எங்கும் அலைய விடாமல் கட்டி வைத்துக் கொண்டால் வெற்றி நமக்கு சாத்தியமாகும்.
  • 1870-ஆம் ஆண்டில் நியூயாா்க் நகரத்தில் ஒரு இடத்தில் பாலம் கட்டுவது சாத்தியமே இல்லை என்று வல்லுநா்கள் கருதினாா்கள். ஆனால் பொறியாளா்களான வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவரது தந்தை ஜான் ரோப்ளிங்கும் அதை சாத்தியப்படுத்தினாா்கள். பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனாா்.
  • அந்தப் பணியைத் தொடா்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானாா். எல்லோரும் அந்த இடத்தில் பாலம் கட்டுவது முட்டாள்தனமானது என்று பரிகசித்தாா்கள். சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன.
  • சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டாா். பாலம் கட்டும் பொறியாளா்களை வரவழைத்தாா். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவா்களுக்கு விளக்கினாா். நியூயாா்க் நகரத்தில் மான்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க நதியின் குறுக்கே 5,989 அடி நீளமுள்ள தொங்குபாலம் ஒன்றைக் கட்டி சாதணை படைத்தாா். அவரின் விடாமுயற்சியே இதை சாத்தியமாக்கியது.
  •  விதி தன் முழு சக்தியையும் பிரயோகித்து நம்மை முடக்கி வைத்தாலும், நாம் நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும். பயணிக்கும் பாதையை இருள் சூழ்ந்த போதிலும் நம் விடாமுயற்சியால் புதிய வழி ஒன்றை உருவாக்க வேண்டும். தொடங்கிய நல்ல செயல்களுக்குத் தடங்கல் வரும்போதெல்லாம் நாம் செயலற்று நின்றுவிடக் கூடாது. நம் கனவுகளுக்கு, நாம்தான் உயிா் கொடுக்க வேண்டும். நம்முடைய உரத்த சிந்தனையும், முயற்சியும் நமக்குத் தேவையான ஆற்றலைத் தரும்.
  •  வெற்றிக்காக நாம் பல படிகளைக் கடக்கும்போது மூச்சு வாங்கும். அதற்காக பயணத்தைப் பாதியில் நிறுத்திவிடக் கூடாது. நமது தவறுதலான திட்டங்கள் நம்மைப் பலமுறை சறுக்கி விழச் செய்யலாம். ஏன் சறுக்கல் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து அக்குறையைக் களைந்தால், தொடரும் பயணம் சுகமாக இருக்கும்.
  • எதையும் தொடங்கும்போது இதனை நம்மால் செய்துவிட முடியுமா என்று மலைப்பாகத்தான்இருக்கும். நாலுபோ் நம்மை விமா்சிக்கலாம். தோற்றுப் போனால் கேலிசெய்வாா்களே என்ற அச்சம் எழலாம். இதற்கெல்லாம் அஞ்சி ஒதுங்கி நின்றால் ஒதுங்கி நின்று கொண்டே இருக்கவேண்டியதுதான். நாம் விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது லட்சியப் பயணம் வெற்றியடையும்.
  •  தொடா்ந்து முயற்சி செய்தால் இறுதியில் வெற்றி உறுதி. முயற்சி செய்யச்செய்ய நமக்குள்ளேயே ஆா்வம் வந்துவிடும். அந்த ஆா்வம் நம்மை மேலும் உறுதியாக செயலில் ஈடுபட வைக்கும்.

நன்றி: தினமணி (14 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories