TNPSC Thervupettagam

வேகமாகப் பரவும் டெங்கு: உடனடித் தடுப்பு அவசியம்

July 24 , 2024 10 hrs 0 min 9 0
  • தமிழ்நாட்டில் ஜூலை இரண்டாம் வாரத்தில் மட்டுமே 568 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. 2024 ஜனவரி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை தமிழகத்தில் 5,976 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
  • அண்டை மாநிலங்களான கேரளத்திலும் கர்நாடகத்திலும் டெங்கு வேகமாகப் பரவிவரும் நிலையில் தமிழகம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். பருவமழைக் காலத்தில் இந்தியா முழுவதுமே டெங்குவால் மக்கள் பாதிக்கப்பட்டாலும் கேரளம், தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் டெங்குப் பரவல் தீவிரமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
  • இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்தியா முழுவதும் 19,447 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 பேர் இறந்துள்ளனர். கேரளத்திலும் தமிழகத்திலும் மட்டுமே இறப்பு நிகழ்ந்துள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இனிவரும் நாள்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
  • பொதுவாக, நகர்ப்புறங்களில் மட்டுமே டெங்குப் பரவல் அதிகமாக இருக்கும். தற்போது நகரமயமாக்கலாலும் மக்கள் தொடர்ந்து இடம்பெயர்வதாலும் கிராமம், நகரம் வேறுபாடின்றி அனைத்து இடங்களிலும் டெங்குவால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏடிஸ் வகைக் கொசுக்களால் பரவும் வைரஸ் நோயான டெங்குவுக்குத் தடுப்பூசி இல்லாத நிலையில், வரும் முன் காப்பதும் காய்ச்சலை விரைவாகக் கண்டறிந்து ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிப்பது அவசியம்.
  • கொசுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினால் டெங்குப் பரவலைக் குறைக்க முடியும். வீடுகளின் மூலைகளிலும் இருட்டான இடங்களிலும் ஏடிஸ் கொசுக்கள் வசிக்கும் என்பதால், அறைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டைச் சுற்றியும் மாடியிலும் பாத்திரங்கள், பயனற்ற பொருள்கள், தொட்டிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் கொசு உற்பத்தியைக் குறைக்க முடியும்.
  • டெங்குவுக்கென்று தனியாக மருந்துகள் இல்லாத நிலையில் காய்ச்சலைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் காய்ச்சல் வீரியமடைவதைத் தடுக்கலாம். டெங்கு வீரியமடைந்த நிலையில் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும் என்பதால், காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது. மூன்று நாள்களுக்கு மேல் தொடரும் காய்ச்சல், தலைவலி, கண்களை அசைக்கக்கூட முடியாத அளவுக்கு வலி, கை, கால் மூட்டு வலி, உடலில் தட்டம்மை போன்ற தடிப்பு போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
  • டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்துவிட்டால் ரத்தத்தில் ரத்தத் தட்டணுக்களின் அளவு குறைந்து உயிராபத்து ஏற்பட்டுவிடும். பெரியவர்களைவிடக் குழந்தைகளே தீவிர டெங்குவுக்கு ஆட்படுகிறார்கள் என்பதால், குழந்தைகளைக் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
  • தாமதமான கண்டறிதலே உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. அதனால், இது குறித்த விழிப்புணர்வை அரசு மக்களிடம் ஏற்படுத்துவதுடன் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். கொசுக்களின் பெருக்கத்தை லார்வா நிலையிலேயே அழிப்பதற்காக வீடுகளைச் சுற்றியும் பொது இடங்களிலும் மாநகராட்சி சார்பில் புகை வடிவிலான நுண்ணுயிர்க்கொல்லி அடிக்கப்படுகிறது.
  • இந்தப் பணி தொடர்ந்து நடைபெறுகிறதா, எல்லா இடங்களிலும் மருந்து அடிக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மழைக்காலம் தீவிரமடைய இருக்கும் நிலையில், டெங்குப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories