TNPSC Thervupettagam

வேகமெடுக்கும் விண்வெளி பொருளாதாரம்

September 11 , 2023 433 days 340 0
  • இந்த வெற்றி ஒரு தொடக்கம் மட்டுமே. இது எதிர்காலத்தில் இஸ்ரோ செயல்படுத்த இருக்கும் எல்லா விண்வெளி திட்டங்களின் வெற்றிக்கும் ஆரம்பம்என்று சந்திரயான் – 3 வெற்றியின்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். அது இஸ்ரோவுக்கு மட்டும் வெற்றியல்ல, இந்திய பொருளாதாரத்துக்கே வெற்றி. நம் பொருளாதாரத்துக்கே ஒரு புதிய பாதையை திறந்துவிட்டிருக்கிறது சந்திரயான் 3 வெற்றி.
  • நிலவில் சந்திரயான்–3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. ஆனால், இத்துடன் சந்திரயான் திட்டங்கள் முடிந்துவிடவில்லை. நிலவில் இருந்து சாம்பிள் எடுத்துவரும் திட்டமாக சந்திரயான் திட்டங்கள் மேலும் தொடர வாய்ப்புள்ளன. ஜப்பானின் ஜாக்சாவும், இஸ்ரோவும் இணைந்து, நிலவின் துருவ ஆய்வுக்காக லுாபெக்ஸ்திட்டத்தை 2024–25 ஆம் ஆண்டில் நிறைவேற்ற இருக்கின்றன. அடுத்த சந்திரயான் திட்டமான இதில், ரோவர் சாதனத்தை ஜப்பானும், லேண்டரை இஸ்ரோவும் தயாரிக்க உள்ளன.
  • இப்போது சூரியனின் மேற்புறத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல விண்கலத்தில் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, பூமியில் இருந்து 400 கி.மீ. உயர சுற்றுப் பாதையில் சுற்றிவரச் செய்து, பூமியில் பத்திரமாக தரையிறக்கும் ககன்யான் திட்டம், செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் அனுப்பியது போல, வெள்ளி கிரகத்துக்கு சுக்ரயான் அனுப்பும் திட்டம் என்று இஸ்ரோ வசம் ஏகப்பட்ட விண்வெளி திட்டங்கள் கைவசம் உள்ளன.
  • இப்படி விண்வெளி திட்டங்களில், ஆய்வுகளில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டுவது மட்டுமல்ல, உலக நாடுகளை ஒப்பிடும்போது, மிகவும் குறைந்தசெலவில், விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுதான் சர்வதேசங்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் தமிழ்படத்தின் தயாரிப்பு செலவைவிட குறைந்த செலவில், சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டப்பட்டுள்ளது.
  • விண்வெளி திட்டங்களால், விஞ்ஞானம்தான் வளரும், பொருளாதாரமும் வளருமா என்ற கேள்விகள் எழும். சரி, அதுவும் எப்படி என்று பார்ப்போம்.
  • இந்தியாவில் ‘6ஜிஅலைக்கற்றை ஆராய்ச்சி தீவிரமாக உள்ளது. இந்தநேரத்தில், உலகம் முழுவதும் செயற்கைக்கோள் மூலம் வழிகாட்டுதல் சேவை, தொலைத்தொடர்பு, கண்காணிப்பு, புகைப்படங்கள் ஆகியவற்றுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் விண்வெளி திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருகிறது. அதனால், விண்வெளி பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.
  • 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் உலகம் முழுவதும், விண்வெளி திட்டங்களில் 1,791 தனியார் நிறுவனங்கள் 272 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. மேலும், 2023-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 546 பில்லியன் டாலராக விண்வெளி பொருளாதாரம் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 91 சதவீதம் இப்படி அதிகரித்துள்ளது.
  • நம்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில், இஸ்ரோவுடன் பல தனியார் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. ராக்கெட், செயற்கைக்கோள், விண்கலங்களுக்கான பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/11/16944018003059.jpg

  • சந்திரயான்–3 திட்டத்தின் வெற்றியால், நம் நாட்டில் விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டில் 4 ஆக இருந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை இப்போது 150 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இப்போது ரூ.66 ஆயிரம் கோடியாக உள்ள இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம், 2025-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கும் 2040 வாக்கில் ரூ.3.3 லட்சம் கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சந்திரயான் 3 வெற்றி, ஆதித்யா எல்1 திட்டங்களை தொடர்ந்து நம்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வரும். இதனால், இந்திய பொருளாதாரம் கூடுதல் வலிமை பெறும்.
  • நமது திட்டச்செலவு, திறன்படைத்த விஞ்ஞானிகள், தெளிவான ஒருங்கிணைப்பு, துல்லியமான திட்டமிடல் போன்றவை இந்திய விண்வெளி துறையில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கும்.
  • அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை ஒப்பிடும்போது, சந்திரயான் திட்டங்களுக்காக இந்தியா செய்துள்ள செலவு மிக மிகக்குறைவு. நாசாவால் இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
  • வானியல் சாஸ்திரத்தில் இந்தியாதான் முன்னோடி. அறிவியல் ஆய்வுகளும், முடிவுகளும் வெளியாவதற்கு முன்பே, வானியலில் நமது முன்னோர்கள் சிறந்து விளங்கினார்கள். தற்போதைய விண்வெளி திட்டங்களுக்கும், ஆய்வுகளுக்கும் நமது முன்னோர்களின் தீர்க்க தரிசனங்கள் உதவுகின்றன.
  • வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்திய பின்பு, பாரதத்தின் கல்வியும், தத்துவமும், சிந்தனையும், செயலும் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டது.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/11/16944018233059.jpg

  • நமது செல்வங்களை கொள்ளையடித்து சென்றதுபோல, நம்முடைய பெருமைகளையும், திறமைகளையும் கொண்டு போய்விட்டார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது அடிமை மனநிலை மறைந்து, இதுபோன்ற அறிவியல், பொருளாதார, விளையாட்டு சாதனைகளால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.
  • இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் தொடர்ந்து வெற்றிபெறும்போது, உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நாம், மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும். உற்பத்தித்துறை, சுற்றுலா, மருத்துவம், கல்வித்துறைகள் மட்டுமின்றி, இதுபோன்று விண்வெளித்துறை சாதனைகளும் அதற்கு உதவும்.
  • ஆகவே, நாம் சாதித்திருக்கும் சந்திரயான்–3 வெற்றியால், நமக்கு பெரும் பொருளாதார பலன் கிடைப்பது நிச்சயம். நாட்டின்பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆய்வுத்துறைகளில் பல நல்ல முன்னேற்றங்கள் தொடங்கிவிடும். உலகின் பிரபலமான கல்வி நிறுவனங்கள் நம் நாட்டில் கால் பதிக்கும். மற்ற நாடுகளின் மாணவர்கள்கூட விண்வெளி சம்பந்தப்பட்ட உயர் படிப்புகளுக்காக இந்தியா நோக்கி வருவார்கள்.
  • கரோனா பரவல், ரஷ்யா உக்ரைன் போர், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார தடைகள் காரணமாக, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்க டாலர்களில் வர்த்தகம் செய்த காலம் போய், இந்திய ரூபாயைக்கொண்டு கச்சா எண்ணெய் தொடங்கி, பல்வேறு இறக்குமதிகளை இந்தியா தொடங்கிவிட்டது. இந்த நேர்மறையான பொருளாதார சூழ்நிலையில், இந்தியா பொருளாதார வல்லரசாக மாற விண்வெளி திட்டங்களும் உதவும் என்பதே நிசர்சனமான உண்மை.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories